‘இலங்கையின் வரிச் செயற்பாட்டு முறையில் சிக்கல்கள் உள்ளன என்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1000 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். அதாவது எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வசூலிக்கப்படாமல் உள்ளது’. இவ்வாறு கூறுகின்றார் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க. அவருடைய புதிய கட்சி மற்றும் அதன் அரசியல் செயற்பாடுகள் குறித்து எமது நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘எங்கள் திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் உறுதியான முடிவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர்ட் சிட்டி போன்ற பெரிய திட்டங்களை வெறும் 29 மாதங்களில் துரிதமாக முடித்திருப்பது எங்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது. நாங்கள் 18 மாதங்களில் கொழும்பு குப்பைகள் அகற்றும் பிரச்சினையை விரைவாக கையாண்டோம். கொழும்பில் வெள்ளம் ஏற்படும் பிரச்சினையை 24 மாதங்களில் சமாளித்தோம். எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவு எங்களிடம் உள்ளது’ என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.
கே: உங்களின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அரசியல் பாதை எப்படி இருக்கிறது?
பதில்: எட்டு தசாப்த காலப்பகுதியில், இந்த நாட்டில் புத்திஜீவிகளையும் தொழில் வல்லுனர்களையும் மிகவும் சிரமத்துடன் உருவாக்கினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் இன்று பெரிய அளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மை, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவை அதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், அவர்களை இலக்காகக் கொண்ட வரிக்கொள்கையும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. எனவே, எதிர்காலத்தில் இந்த நாட்டில் தங்கியிருந்து நாட்டை மாற்றுவது தொடர்பாக, முறையான வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிபுணர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தற்போது, நாங்கள் பொதுமக்களிடம் சென்று நாடு முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பொதுவிழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.
கே: 2022 ஆம் ஆண்டு வரி வருமானத்தில் 72 வீதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காகவும் 28 வீதம் சமுர்த்தி மற்றும் கடன் வட்டிக்காகவும் ஒதுக்கப்பட்டது. வரி வருவாயில் ஐந்து சதம் கூட அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், இந்த அமைப்பில் மாற்றம் ஏற்படுமா?
பதில்: எமது வரிச் செயற்பாட்டு முறையில் சிக்கல்கள் உள்ளன என்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1000 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். அதாவது எதிர்பார்க்கப்படும் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வசூலிக்கப்படாமல் உள்ளது. ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம், ரமிஸ் மற்றும் ஆசிக்குடா போன்ற மென்பெருள் கட்டமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் மூலம் சிறியதொரு பங்கு வெற்றியே கிடைத்துள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் வரி வசூலிப்பில் கணிசமான அளவில் பின்னிலையில் காணப்படுகின்றது. 1.2 மில்லியன் பேர் வரிக்காகப் பதிவுசெய்ய வெண்டியுள்ள நிலையில், வெறுமனே 4 இலட்சம் பேர் மட்டுமே இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளனர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்றாலும், சுங்கத் திணைக்களம் இதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் மதுவரித் திணைக்களம் ஆறரை பில்லியனை வரியாக வசூலிக்கத் தவறிவிட்டது. செலவினங்களைப் பற்றி விவாதிக்கும் முன்னர் இந்த வருவாய் ஈட்டும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது அவசியம்.
கடந்த ஆறு மாதங்களில், அரசின் வருவாயில் 94 சதவீதம் கடன்களுக்கான வட்டிகளை மீளச்செலுத்துவதற்கு சென்றுவிட்டது. இதனால் அரசாங்கத்தின் நிதிச்சுமை இரட்டிப்பாகியுள்ளது. அதீதமான வட்டி வீதத்தில் வாங்கிய கடன்களின் பின்விளைவுகளுடன் நாடு சிக்கித் தவிக்கும் போது தவறான ஆலோசனையற்ற நிதிக் கொள்கைகளின் விளைவு தெளிவாகத் தெரிகிறது. நிதி முறைகேட்டுக்கு காரணமானவர்கள் இதனைப் பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.
செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், தனிப்பட்ட முயற்சிகளைக் கடந்து 1,200 அரசு நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான விஞ்ஞான ரீதியான அணுகுமுறை அவசியம்.
கே: இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் வர வேண்டும் என்று கூறுகிறீர்களா?
பதில்: எனது விரிவான அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். வரி ஏய்ப்புக்கு இடமளிக்காமல், தடையற்ற வரி வருவாய் சேகரிப்பை உறுதிசெய்ய, ஒரு வருடத்திற்குள் அதிநவீன டிஜிட்டல் தளத்தை உருவாக்க வேண்டும். மதுவரித் திணைக்களத்தின் செயல்முறை கடுமையான மாற்றத்திற்கு உட்பட வேண்டும். 2018 இல் மதுபானப் போத்தல்களுக்குப் பாதுகாப்பு ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், நான் பாராளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பின்னரே அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கே: 2022 வரி வருவாய் ரூ. 1,751 பில்லியன், இதில் அனைத்து சம்பளங்களுக்கும் ரூ. 1,265 பில்லியன் செலவிடப்பட்டது. மற்றும் ரூ.506 பில்லியன் மானியங்களுக்காகச் சென்றது. அதன்படி, பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த மாற்றங்களின் மூலம் வரி வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளீர்களா?
பதில்: நிச்சயமாக. எனது முன்மொழிவுகளை நான் ஏற்கனவே பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளேன். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடமிருந்து வசூலிக்கப்படாத கடன்களை மீட்டெடுப்பது, வங்கி அமைப்பை வலுப்படுத்துவது, அதன்பின் வட்டி வீதங்களைக் குறைப்பது ஆகியவை எமது எதிர்பார்ப்பாகும். குறைந்த வட்டி வீதங்கள் பொருளாதார ரீதியில் ஊக்கமளிக்கும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்கும். சமூகத்தில் பாதிக்கப்படக்கூடியவர்களை இலக்காகக் கொண்ட குறுகிய கால மானியத்திற்காக நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
மின்சார நுகர்வு, மொபைல் தொலைபேசி பயன்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வாகன உரிமை போன்ற முக்கிய காரணிகளின் அடிப்படையில் உண்மையான ஏழைகளை அடையாளம் காண்பது விஞ்ஞான அணுகுமுறை மூலம் மேற்கொள்ளப்படும்.
மருத்துவம் மற்றும் உபகரணங்கள், உணவு உற்பத்தித்திறன், எரிசக்தி உற்பத்தி போன்ற முக்கியமான துறைகளில் அரசாங்க முதலீடுகளை திசைதிருப்பும், வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை நாங்கள் நம்புகிறோம். டெக்னோலஜி சிட்டி திட்டம் ஒரு முக்கிய மையமாக உள்ளது. இது ஒரு வலுவான டிஜிட்டல் சேவை பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் இலக்காக உள்ளது.
கே: கடன் வாங்கி, கடனை செலுத்துவதற்குப் பதிலாக மாற்றுத் திட்டங்கள் ஏதாது உங்களிடம் உள்ளதா?
பதில்: கடன் பெறுபவர்கள் தங்கள் கடனைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லையெனில் சர்வதேச அளவில் எங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வாறாயினும், உற்பத்தியை அதிகரிக்க பொதுமுதலீடுகளை ஊக்குவிப்பதில் எங்கள் கவனம் உள்ளது. நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக கடன்களை செலுத்துவதும், பொறுப்பான நிதிக்கொள்கைகள் மூலம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்வதும் கட்டாயமாகும்.
கே: ஆனால் தற்போதைய தலைமைத்துவத்தின் ஊடாக நாடு வீழ்ச்சியடைந்த இடத்திலிருந்து மீண்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். இதில் உங்கள் கருத்து என்ன?
பதில்: எரிபொருளுக்கான வரிசைகள் மறைந்துவிட்டாலும், எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளது. உரம் கிடைத்தாலும் விலை உயர்ந்துள்ளது. முக்கியமான பிரச்சினை என்னவென்றால், அத்தியாவசிய சேவைகளின் தற்போதைய நிலை ஆகும். மருந்துப் பற்றாக்குறையும் உள்ளது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.