நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அவர் ரன்பீர் கபூருடன் நடித்துள்ள இந்திப் படமான ‘அனிமல்’, டிச.1-ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்து அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வரும் அவர்,
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ரெயின்போ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பும் ராஷ்மிகாவின் தோற்றமும் நேற்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
“உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது. ஆனால், இதுவரை பார்க்காத அல்லது கேள்விப்பட்டிருக்காத சில காதல் கதைகளும் இருக்கின்றன. ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ அப்படி ஒரு கதை” என்று ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ், வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர் .
படத்தை இயக்கும் ராகுல் ரவீந்திரன், தமிழில், ‘மாஸ்கோவின் காவிரி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அடுத்து விண்மீன்கள், சூரிய நகரம், வணக்கம் சென்னை, தி கிரேட் இண்டியன் கிச்சன் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துவரும் அவர், அங்கு ‘மன்மதடு 2’ உட்பட 2 படங்களை இயக்கியுள்ளார்.
இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ‘தி கேரள்ஃபிரண்ட் ’ படத்தை இயக்குகிறார். இதில் சமந்தா நடிப்பதாக இருந்தது. அவர் தசை அழற்சி சிகிச்சைக்காக ஓய்வில் இருப்பதால், ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.