Home » இந்திய ஏற்றுமதியில் பெரும் தாக்கம் செலுத்தும் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்!
எஸ்.சாரங்கன்

இந்திய ஏற்றுமதியில் பெரும் தாக்கம் செலுத்தும் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம்!

by Damith Pushpika
October 22, 2023 6:13 am 0 comment

சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு தாக்கம் நிகழ்ந்தால், அது எல்லா நாடுகளிலும் ஏதாவது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றது. அந்த வகையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான தற்போதைய மோசமான யுத்தம் இந்திய வர்த்தகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா என்பது குறித்து இந்திய பொருளாதார நிபுணர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

உலக பொருளாதாரத்தில் இந்தியா தற்போது பிரதானமான நாடாகத் திகழ்வதால் இஸ்ரேல் மற்றும் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான யுத்தமானது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கணிப்பாக இருக்கின்றது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் தீவிரம் அப்பிராந்தியத்தில் பல ஆண்டுகளில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளதால், உலக நாடுகள் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

இந்தச் சூழலில், இந்தியாவின் வர்த்தகத்திலும் இதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் இந்திய ஏற்றுமதியாளர்கள். முக்கியமாக வான்வழி, கடல்வழி மற்றும் நிலப்பரப்பு வழியாகவும் தாக்குதல் நடப்பதால் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆபத்து அதிகமாக உள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் எவ்வாறான பாதிப்பு எதிர்நோக்கப்படுமென்று நிபுணர்கள் பலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இஸ்ரேல்_ ஹமாஸ் போர் காரணமாக, இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு காப்புறுதிக்கான பிரீமியம் தொகையையும், ஏற்றுமதி செய்வதற்கான செலவினங்களையும் இந்திய அரசின் கீழ் செயற்படும் ஏற்றுமதி மற்றும் கடன் உத்தரவாதத்திற்கான அமைப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

எனவே இஸ்ரேல் நாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து ஈட்டுகின்ற இலாபம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரு நிதியாண்டுகளாக இஸ்ரேலுக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்வது 75 சதவீதம் அதிகரித்துள்ளது.எனவே இந்திய ஏற்றுமதி அதிகரித்து வந்துள்ள நிலையில் தற்போது யுத்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021_-22 ஆம் நிதியாண்டில், சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், அது 2022_-23 ஆம் நிதியாண்டில் சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்றுமதியில் மாத்திரமன்றி – இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2022_-2023 ஆம் நிதியாண்டில் இஸ்ரேலுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியில் இந்தியா டீசலை ஏற்றுமதி செய்துள்ளது.

அடுத்ததாக, பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலும், சுமார் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் இஸ்ரேலுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இதுதவிர பொட்டாசியம் குளோரைட் 861 கோடி ரூபாய் பெறுமதியிலும், 490 கோடி ரூபாய் மதிப்பில் களைகொல்லிகளையும் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மென்பொருள் சேவையில் இஸ்ரேலுக்கு தேவையான software development, IT consulting, data processing போன்றவற்றையும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

அதேசமயம் இஸ்ரேலில் இருந்து இந்தியாவும் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது. இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகள் இஸ்ரேலில் இருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கின்றன.

இதுதவிர, இஸ்ரேலில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் சுகாதாரத்துறை, மாற்று எரிசக்தித்துறை, இராணுவ தளவாடங்கள், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை செய்துள்ளன. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இது ஒருபுறமிருக்க, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் தொற்றியுள்ள நிலையில், மசகு எண்ணெய் தாறுமாறாக விலை ஏறத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மசகு எண்ணெய்த் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது மசகு எண்ணெய் விலை ஏற்றமானது இறக்குமதிக்கான செலவினங்களை அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், உள்நாட்டில் பணவீக்கம் உயரும் சூழலும் உருவாகக் கூடும்.

அதானி குழுமத்திற்கு ஏற்படப் போகின்ற பாதிப்பும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய இஸ்ரேலிய துறைமுகமான ஹைஃபா, தாக்குதல் நடைபெற்று வரும் காஸாவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மற்றொரு பெரிய துறைமுகமான அஷ்டோத், ஹைஃபா துறைமுகத்துக்கும் தொலைவிலேயே இருக்கிறது. இதனால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது என்றாலும், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் துறைமுகங்கள் ஹைஃபா துறைமுகத்தில் சுமார் 70 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன.

எனவே, இந்தப் போரானது அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இஸ்ரேலுடனான இந்தியாவின் வணிகப்பொருள் வர்த்தகமானது செங்கடலில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகம் மூலமாகவே நடைபெறுகிறது. துறைமுகங்களில் பாதிப்புகள் ஏற்படுமாயின் அது இருநாட்டு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

1967ஆம் ஆண்டில் இஸ்ரேல் மற்றும்- அரபு நாடுகளுக்கு இடையே 6 நாட்கள் தொடர்ந்த யுத்தத்தின் போது வர்த்தகத்தில் இவ்வாறான பாதிப்புகள் எதிர்நோக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பங்களிக்கும் சுயஸ் கால்வாயை எகிப்து சுமார் 8 ஆண்டுகள் வரை மூடுவதற்கு இந்தப் போர் முக்கிய காரணமாக அமைந்தது. மேற்காசிய நாடுகள் மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய சுயஸ் கால்வாயைத்தான் பயன்படுத்தி வந்தன.

இதற்கிடையில், 1973ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் நடந்த மற்றொரு போர் காரணமாக, மசகு எண்ணெய் விலை அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதாரத்தை நெருக்கடியில் வைத்திருந்தது.

இஸ்ரேலில் காஸா பகுதியில் மட்டுமே தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், மற்றைய பகுதிகளில் பெரிய பாதிப்பு இல்லை எனக் கூறப்படுவதால் வர்த்தகத்தில் பெரிய அளவிற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும் எவ்வளவு காலத்திற்கு போர் நீடிக்கும் என்பதை பொறுத்தே பாதிப்புகள் பற்றி கூறமுடியும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division