பண்டைய நாகரீகத்தின் தொட்டில், பிரேதப் பெட்டிகளை சுமந்து திரியும் நேரமிது. பெரும் மனிதாபிமான பேரிடரை ஏற்படுத்தியுள்ள காசா, இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தும் முயற்சிகள் எட்டாக் கனிகளாகின்றன. எனவே, களங்களை கடந்து காரணங்களை தேடியாக வேண்டும். இராணுவ வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முண்டியடிக்கும் தரப்புக்கள், மூச்சிழுக்க களைத்துப் போனதை களமுனைகள் காட்டுகின்றன.
இதற்குள், பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் மற்றும் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் படும்பாடுதான் பரிதாபமானது. ஆட்சி, அதிகாரம், நிலம், புலம் எதுவும் வேண்டாம். எஞ்சியுள்ள உறவுகளை ஒப்படையுங்களென்ற ஓலங்களே உயர்ந்து வருகின்றன. இந்த ஓலங்கள் உள்ளூர்க் கலவரங்களை ஏற்படுத்தலாமென அஞ்சிய இஸ்ரேல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் லொறிகளில் ஏற்றப்பட்டு காசாவுக்குள் அனுப்பப்படுவரென எச்சரித்துள்ளது. தமது அன்புக்குரியவர்களை பாதுகாத்தால் போதுமென்ற இவர்களது பதறல்கள், போர்க்கள ஒப்பாரிகளை விடவும் காதுகளை பிளந்து கிழிக்கின்றன.
இடிந்து விழும் கட்டடங்கள், எரிந்தெழும்பும் தீப்பிழம்புகளில் இறைதூதர்களின் காருண்யங்கள் மட்டும்தான் உயிர் பிழைக்கப்போகின்றன. இஸ்ரேலிய சிறைகளிலுள்ள பலஸ்தீனர்கள், காசாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள யூதர்களின் உறவினர்களுக்கு நல்ல செய்தி கிட்டுமா?
இஸ்ரேலின் எல்லை மீறிய தாக்குதல்கள் வைத்தியசாலைகள், புகலிட முகாம்கள் எதையும் விட்டுவைக்காதுள்ள நிலையில், இருதரப்புப் பணயக்கைதிகளின் எதிர்காலமும் பிரேதப் பெட்டிகளாகப் போகின்றன?. எனவே, இழந்தது போதும், இருப்போர் பாதுகாக்கப்பட பிரார்த்திப்போம். போர்க்களம் உக்கிரமாவதாலும் பாரபட்சமும் பலப்பட்டுள்ளதாலும் பிரார்த்திப்பது மற்றும் பிராயச்சித்தம் தேடுவதைத் தவிர வேறு வழிகள் துலங்கவில்லை.
தரைவழித் தாக்குதலுக்கு பல தினங்களுக்கு முன்னரே தயாரான இஸ்ரேல், காசாவுக்குள் நுழைய பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. போர்முனையின் நேரடிக்களத்துக்கு வந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்து, சிறிய உரையும் நிகழ்த்தினார். “வாரங்களாகலாம் அல்லது மாதங்களாகலாம் எதிரியை வீழ்த்தும் வரைக்கும் வீறாப்புடன் போரிடுங்கள் என்றார்”. சக ஆதரவுகளை எதிர்பார்த்து வியூகம் வகுத்த ஹமாஸ், சுரங்கப்பாதைகள் புதைந்துள்ள காசாவுக்குள் யூத இராணுவம் நுழைவதை எதிர்பார்த்து விழித்திருக்கிறது. இதனால், வான் தாக்குதல்களைத் தவிர வேறு வழிகள் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பானதாகவும் இல்லை.
இந்த உத்வேகத்தில்தான் வைத்தியசாலையிலும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதிகளவு எதிர்ப்பை எதிர்கொள்ள நேர்ந்ததால், ஹமாஸின் ஏவுகணையே வீரியம் தவறி வைத்தியசாலையில் விழுந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. வீரியமிழந்த ஏவுகணையே இந்தளவு சேதத்தை ஏற்படுத்தியிருந்தால், இஸ்ரேலின் தெருக்களில் தெறித்து விழுந்த ஏவுகணைகள் அங்கு எந்தளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கும். அகதிகள் தஞ்சமடைந்த ஐ.நா.வின் பாடசாலைக்குள் தாக்குதல் நடத்தும் தேவை ஹமாஸுக்கு இருக்காது. இதனால், இஸ்ரேல்தான் இக்கொடிய குற்றத்தை இழைத்திருக்கிறது.
இழப்புக்களை அளவிட்டு வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்க முடியாதுள்ள போரிது. எதிர்கால வியூகங்களில்தான் இங்கு வீரன் கணிப்பிடப்படுகிறான். சுற்றியுள்ள அரபு நாடுகள் நேரடியாக காஸாவுக்கு உதவாவிடினும் சமாதானம் வந்துவிட்டால், அரபு லீக் உட்பட முஸ்லிம் நாடுகளின் உதவிகள் இங்குதான் ஓடியும், தேடியும் வருவதுண்டு. அதேபோல, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன இஸ்ரேலுக்கான உதவிகளை வழங்குவது வழமையான நிகழ்ச்சி நிரலுக்குட்பட்டன.
பத்தாண்டு கடன் திட்டத்தில் 2019 முதல் 2028 வரை, 38 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு ஒப்பமிடப்பட்டது. இதில், எஞ்சிய எட்டு பில்லியனில் மூன்று பில்லியனை அவசரமாகத் தருமாறு இஸ்ரேல் கோரியுள்ளது. இதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது. ஏற்கனவே இணங்கிய திட்டமென்பதால் அரபு நாடுகளுக்கு இதை எதிர்க்க முடியாதுள்ளது. இதனால், புதிய உதவிக்காக ஒப்பந்தங்களை கைச்சாத்திடக் கூடாதென அடம்பிடித்தும், எஞ்சிய பழைய தொகையை யுத்த காலத்தில் வழங்குவது முறையல்ல என்றும் கூறியுமே, ஜோ பைடனை சந்திக்க அரபுலகம் மறுத்துவிட்டது. காசா மக்களுக்கு நாளாந்தம் நூறு லொறிகளில் உதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால், இருபது லொறிகளுக்கே அனுமதி ஏற்கப்பட்டுள்ளது. பழங்கள், பழச்சாறுகள் மற்றும் கனிரசங்கள் ஏற்றிச் செல்லும் லொறிகளைக் கண்ணுறுகையில் கண்கள் பனிக்கின்றன.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனின் ஏவலின் பிரகாரம், இந்த பாரான் தேசத்திலிருந்து இறைதூதர் ஆப்ரஹாம் (இப்ராஹீம்) தனது மனைவி ஹாஜருடன் (ஹாஜரா) புதல்வர் இஸ்மவேலை (இஸ்மாயில்) மக்காவுக்கு அழைத்துச் சென்று செய்த பிரார்த்தனை நிழலாடுகிறது.
“என் இறைவனே உன்னை நாடி வரும் அடியார்களுக்கு காய்களையும் கனிகளையும் சொரிந்துவிடு”.
வயல்கள், கழனிகள் மற்றும் சோலைகள் நிறைந்த பாரான் தேசத்தை நோக்கியவாறே இப்பிரார்த்தனை புரியப்பட்டது.
சுஐப்.எம்.காசிம்-