Home » அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் 200 மாநாடு

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாம் 200 மாநாடு

by Damith Pushpika
October 22, 2023 6:52 am 0 comment

இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த இலக்கை அடைவதற்காகவும், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒரு இளம் அரசியல் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாம் 200’ திட்டம் மூலம் மலையகத்துக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை நவீன யுகத்துக்கேற்ற வகையில் கட்டமைத்து, பழமையையும், பாராம்பரியத்தையும் பாதுகாத்து, புதுமைகளுக்கு வழிவிட்டு ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுவரும் நகர்வுகளில் இந்த நாம் 200 வேலைத்திட்டம் மலையக மறுமலர்ச்சியில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என மலையக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாம் 200 ஏன் முக்கியம் பெறுகின்றது ?

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைந்து (1823 – 2023) 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அம்மக்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்கும், நாட்டுக்கும் வழங்கிய பங்களிப்பை கருத்திற்கொண்டு அவர்களை பாராட்டி, கௌரவிக்கும் வகையில் அரச அங்கீகாரத்துடன் நிகழ்வை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி – அரச அங்கீகாரத்துடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை முக்கியத்துவமிக்கதாகும். இதற்கு முன்னரும் மலையகம் தொடர்பில் பல நிகழ்வுகளை அரசுகள் முன்னெடுத்திருந்தாலும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி – உரிய அரச அங்கீகாரத்துடன் நடத்தப்படும் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகின்றது.

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்தாலும், மலையகத்தின் இருப்பை நிர்ணயிக்கின்ற பெருந்தோட்டத்துறையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களாக உள்ளவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் மேம்படவில்லை எனவும், நாம்200 திட்டமெல்லாம் தேவையற்ற நிகழ்வு எனவும் விமர்சனக் கணைகளைத் தொடுப்பவர்களும், அது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் கேலி செய்பவர்களும் எம் சமூகத்தில் வாழவே செய்கின்றனர். முதலில் இது கொண்டாட்டம் அல்ல, மலையகத் தமிழர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலரின் பங்கேற்புடன்தான் நவம்பர் 02 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நாம் 200 நிகழ்வு பிரமாண்டமாக நடை பெறவுள்ளது.

‘காழ்ப்புணர்ச்சி’ என்ற கண்ணாடியை கழற்றிவைத்துவிட்டு இந்நிகழ்வு தொடர்பில் பார்வையை செலுத்தினால் அதன் முக்கியத்துவம் தென்படும் என்பது வெள்ளிடைமலை.

இலங்கையில் மலையகத் தமிழர்கள் என ஒரு இனம் வாழ்கின்றது, அந்த இனத்துக்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு நிகழ்வு நடத்தப்பட வேண்டும் என்பது இதன்மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்துவரும் வருடங்களில் மலையகத்துக்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு அரச அங்கீகாரத்துடன் நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

வரலாறு தெரியாதவன் வாழத் தகுதியற்றவன், அந்தவகையில் மலையகம் தொடர்பில் கட்டுரை, கவிதை, குறுந்திரைப்படம், புகைப்படம் போன்ற போட்டிகளை நடத்திய மலையகம் தொடர்பான கருத்தாடல் எமது சமூகத்தில் இன்றைய தலைமுறையின் மத்தியில் விதைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பலர் வரலாற்றை தேடி அறியவும், கற்றுக்கொள்ளவும் நாம் 200 ஏதோவொரு வகையில் உதவியது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவர்களை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டு செல்லவும் இது வழிவகுக்கும். நாம் 200 ஏற்பாட்டு குழுவினரின் கோரிக்கையை ஏற்று இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையானது நாம் 200 எனும் வேலைத்திட்டமானது சமூகத்தில் எவ்வாறு தாக்கம் செய்துள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும்.

மாநாட்டில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களும் கலந்துகொள்கின்றனர், அவர்களின் கவனம் மலையகம் மீது திருப்பும். இதன்மூலமும் எமது சமூகத்துக்கு நிச்சயம் சாதகமான பிரதிபலன்கள் கிடைக்கப்பெறும். மலையகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாடு, வெளிநாட்டு முதலீடுகள் வரும், எமது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

நாம் 200 தொடர்பில் எமது சிங்கள மக்களும் கதைக்க ஆரம்பித்துள்ளனர், அனைவரும் மலையக மக்களுக்கான அங்கீகாரத்துக்கு ஏகோபித்த ஆதரவு வழங்கியுள்ளனர். மலையக எழுச்சிக்கு எல்லா இன மக்களின் ஆசியும் அவசியம். அந்த விடயமும் நாம்200 மூலம் நிறைவேற்றப்படுகின்றது. இப்படி பல விடயங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லாம். ஆக ஒதுங்கி நின்று விமர்சனங்களை முன்வைப்பதைவிட, நாம் 200ஐ நமக்கானதாக மாற்ற நேசக்கரம் நீட்டுவோம். இது ஒவ்வொரு மலையகத் தமிழர்களினதும் சமூகப்பொறுப்பாகும்.

நாம் 200 ஆல் நம் சமூகத்துக்கு என்ன நன்மை?

இலங்கையில் உள்ள பிரதான தொழில்துறைகளில் முதன்மையானதும் – முக்கியமானதும்தான் இந்த பெருந்தோட்டத்துறை. எனினும், அத்துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தொழிலின்போது விபத்துகள் ஏற்பட்டால்கூட இழப்பீடுகளை பெறுவதற்கு ஆயிரம் போராட்டங்கள். தொழிற்சங்கங்கள் தலையிட்டால்தான் அதுவும் கிடைக்கின்றது.

இந்நிலைமையை மாற்ற வேண்டும் எனச் சிந்தித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான காப்புறுதி திட்டத்தை உருவாக்கினார். மாதம் 99 ரூபாவில் இருந்து காப்புறுதி திட்டங்கள் உள்ளன.

நோய்வாய்ப்பட்டாலோ, வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றாலோ, தொழிலின்போது உடல் உறுப்புகளை இழந்தாலோ நிதி நிவாரணத்தை பெறக்கூடியதாக இருக்கும். சிலவேளை உயிரிழப்பு ஏற்பட்டால் கூட அவர்களின் குடும்பத்துக்கு ஏதேவொரு வகையில் இந்த காப்புறுதி திட்டம் கைகொடுக்கும். அதுமட்டுமல்ல பெருந்தோட்டத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான வியூகங்களில் இதுவும் ஒன்று.

காணி உரிமை

மலையகத் தமிழர்களுக்கு காணி உரிமை என்பதே இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தனி வீடுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஏனைய தனியார் காணிகளுக்குபோல் உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. ஆனால் உரிய உறுதிப்பத்திரத்துடன் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக காணி அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர், தொழில் அமைச்சர் ஆகியோருடன் பேச்சு நடத்தினார். இதன்பயனாக அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரமொன்று முன்வைக்கப்பட்டு, மலையக மக்களுக்கு காணி உரிமையும் நவம்பர் 2ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. மலையக வரலாற்றில் இது மகத்தான வெற்றியாகும்.

அதேபோல தோட்டத்தில் வேலைசெய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ளவர்களுக்கும் வீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன. உரிய தேர்வுகளின் அடிப்படையில் அவை வழங்கப்படும். தோட்ட அதிகாரிகளும் இதன்மூலம் பயன் பெறலாம். மலையகத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கப்பெற்றமை முக்கிய மைல்கல்லாக அமைந்ததுபோல வீட்டுரிமை, காணி உரிமையும் வரலாற்று முக்கியத்துவமிக்க காரணிகளாக அமையவுள்ளன.

அதேபோல மலையக தமிழர்களின் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் விசேட முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது. இது எமது பாராம்பரிய அடையாளத்துக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.

மலையக தாய்

மலையகத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் எடுத்து காட்டும் வகையில் தலைநகர் கொழும்பில் ‘மலையக தாய்’ சிலையொன்றை வைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

க.கிஷாந்தன் ஊடக செயலாளர் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division