இம்முறை உலகக் கிண்ணத்தில் வேறு எந்த அணிகளை விடவும் உபாதைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அணி இலங்கை தான். அதன் விளைவை போட்டி முடிவுகளில் பார்க்க முடியும். முதல் மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த இலங்கை அணியின் உபாதைப் பட்டியல் நீண்டது.
உலகக் கிண்ணத்திற்காக இந்தியா வரும்போதே, தனது முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவை உபாதை காரணமாக விட்டு விட்டு சென்ற இலங்கை அணி வந்த விரைவிலேயே அணித் தலைவர் தசுன் ஷானக்கவை உபாதையால் இழந்துவிட்டது.
அணித் தலைமை பொறுப்பை குசல் மெண்டிஸ் ஏற்ற நிலையில் தசுனுக்கு பதில் அணியுடன் மேலதிக வீரராக அழைத்துச் செல்லப்பட்ட சாமிக்க கருணாரத்ன தசுனுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். போதாக் குறைக்கு வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரணவுக்கு தோள் பட்டையில் சிறு அசெளகரியம் ஏற்பட்டிருக்கிறது. அவர் அணியில் நீடிப்பதிலும் சற்று சந்தேகம் இருக்கிறது.
தசுன் ஷானக்கவின் முன் தொடை பகுதியில் உபாதை ஏற்பட்டிருக்கும் நிலையில் உடல் தகுதி பெற இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் எடுத்துக் கொள்வதாலே அணியில் இருந்து நீக்கப்பட்டார். என்றாலும் அவர் இலங்கை அணியின் மருத்தவ குழுவுடன் இணைந்து சிகிச்சைகளை பெற்று வரும் அதே நேரம் அணியுடன் தொடர்ந்து இருந்து வருகிறார்.
அவர் உடல் தகுதி பெற்று, அணியில் மற்றொரு வீரருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அந்த இடத்தை நிரப்ப வசதியாகவே அவர் தொடர்ந்து அணியுடன் இருக்கிறார்.
தசுன் ஷானக்க அணித் தலைவருக்கு அப்பால் வீரர் என்ற வகையில் அண்மைக் காலமாக சோபிக்கத் தவறி வரும் நிலையிலேயே இந்த உபாதைக்கு முகம்கொடுத்தார். குறிப்பாக அவரின் துடுப்பாட்டம் தடுமாற்றம் கண்டிருப்பது இலங்கை அணியின் மத்திய பின் வரிசை பலவீனப்படுவதற்கு முக்கிய காரணியாக மாறியிருக்கிறது. முதல் மூன்று போட்டிகளையும் பார்த்தால் அது நன்றாகத் தெரியும்.
தனது துடுப்பாட்டம் சோபிக்காத நிலையில் பந்துவீச்சில் அவர் சற்று உதவுகிறார். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கே முன் தொடை பகுதியில் காயம் ஏற்படும். எனவே, தசுனின் காயத்தை பார்க்கும்போது அவர் பந்துவீச்சில் அதிக அவதானம் செலுத்தி இருப்பதாக புரிகிறது.
இலங்கை அணியில் பந்துவீச்சு பலவீனப்பட்டிருக்கும் நிலையில், அதனை தன்னளவில் சரிசெய்ய முயன்றதன் விளைவாகக் கூட அவரது இந்தக் காயம் இருக்கக் கூடும். எப்படி இருந்தபோதும் தசுன் ஷானக்க ஒரு துடுப்பாட்ட சகலதுறை வீரர் என்ற வகையில் அவரது ஆட்டம் தொடர்வது தான் ஆரோக்கியமானது.
தசுன் ஷானக்கவுக்கு பதில் சேர்க்கப்பட்டிருக்கும் சாமிக்க கருணாரத்ன ஒரு பந்துவீச்சு சகலதுறை வீரர். தற்போதைய சுழலில் அப்படி ஒருவர் தான் அணிக்குத் தேவை என்றபோதும், கருணாரத்ன அண்மைக் காலமாக போதிய அளவு சோபிக்காத நிலையில் அணியில் இடம்பெறாமல் இருந்து வந்தவர். எனவே, அவர் திடுதிடுப்பென்று அணியில் தற்போது இருக்கும் ஓட்டைகளை நிரப்புவார் என்று எதிர்பார்க்க முடியாது. தசுனுக்கு பதில் தற்போதைய சூழலில் கருணாரத்ன தான் பொருத்தமானவர் என்று தேர்வுக் குழுவினர் கருதி இருக்கக் கூடும்.
தசுன் இல்லாத நிலையில் குசல் மெண்டிஸிடன் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டது எதிர்பார்த்ததே. அண்மைக் காலமாக உப தலைவராக செயற்பட்டு வந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை தலைமை பொறுப்பை உலகக் கிண்ணத்தில் ஏற்றிருப்பதன் சாதக, பாதகங்கள் பற்றி இப்போது கூறமுடியாது.
என்றாலும் இலங்கை துடுப்பாட்ட வரிசையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தவர் குசல் மெண்டிஸ். இந்த நிலையில் அவரிடம் தலைமை பொறுப்பை கொடுத்திருப்பது அவரது துடுப்பாட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பாதிப்பை செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.
இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண முதல் இரு போட்டிகளிலும் 90க்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்து அடுத்த போட்டியில் அணியில் சேர்க்கப்படுவதில் சந்தேகம் இருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
அவரது பந்துவீச்சு பாணி, நீண்ட ஓவர்கள் பந்து வீசியது, போதாக் குறைக்கு மோசமாக பந்துவீசியது எல்லாம் சேர்த்து மதீஷவுக்கு அழுத்தத்தை கொடுத்த நிலையிலேயே உபாதைக்கும் உள்ளாகி இருக்கிறார். தோள்பட்டையில் ஏற்பட்ட அந்தக் காயத்திற்கு பத்து நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டால் போதும் என்கிறார்கள்.
என்றாலும் உலகக் கிண்ணத்திற்கு மத்தியில் உபாதை ஏற்படாத வகையில் அவரை பயன்படுத்துவது என்பது தேவையற்ற சுமைதான். எனவே, திடீர் திருப்பமாக மேலதிக வீரர்களாக துஷ்மன்த சமீர மற்றும் அஞ்சலோ மத்தியுஸ் அழைக்கப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் பிரமோத் மதுஷங்கவையே இந்தியா அனுப்புவதாக இருந்த சூழலிலேயே இவர்கள் இந்தியா சென்றிருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பே அணிக்குள் இருக்கும் தேர்வுக் குழப்பங்களுக்கு நல்ல உதாரணம். இலங்கையின் அத்தியாவசியமான வீரராக இருக்கும் சமீர காயத்தாலேயே அணியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அவர் இப்போது உடல் தகுதி பெற்றிருப்பதாக தேர்வுக் குழுவினர் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வளவு விரைவில் அவர் உடல் தகுதி பெறுவதாக இருந்தார் முன்கூட்டியே உலகக் கிண்ண குழாத்தில் சேர்த்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது.
மற்றது மத்தியூஸை அவசர அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது காலம் கடந்த ஞானமாக வாய்ப்பு இருக்கிறது. இப்போதைய சூழலில் இலங்கையில் இருக்கும் அனுபவம் மிக்க வீரர் மத்தியூஸ் தான். ஆனால் இலங்கை அணியில் மத்திய வரிசை அனுபவம் இன்றி பலவீனப்பட்டிருப்பது முதல் மூன்று போட்டிகளை பார்த்தாலே புரிகிறது. எனவே, மத்தியூஸை மேலதிக வீரராகவேனும் அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது தேர்வு குழுவினருக்கு இப்போது புரிந்திருக்கிறது.
வேறு எந்தப் போட்டிகளை விடவும் உலகக் கிண்ணப் போட்டிகளில் அனுபவ வீரர்கள் இருப்பது அவசியம். மற்ற அணிகள் அதிகம் அனுபவத்தை பார்த்தே அணியை தேர்வு செய்யும்.
என்றாலும் 15 பேர் கொண்ட குழாத்தில் இருக்கும் ஒரு வீரரை நினைத்தபடி மாற்ற முடியாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அதனை மருத்துவக் குழு உறுதி செய்து பின்னர் சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்தாலேயே அந்த வீரருக்கு பதில் மற்றொரு வீரரை அழைக்க முடியும்.
என்றாலும் அண்மைக் காலத்தில் இலங்கை அணி கட்டியெழுப்பப்பட்டு வரும் சூழலில் அதற்கு இந்த காயங்கள் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கிண்ணத்திலும் இதே கதை தான். டில்ஷான் மதுஷங்க காயத்தால் அவுஸ்திரேலியா செல்லவே இல்லை. போட்டியின் பாதியில் பினுர பெர்னாண்டோவுக்கு காயம் ஏற்பட அவருக்கு பதில் அசித்த பெர்னாண்டோ அழைக்கப்பட்டார். துஷ்மன்த சமீரவும் பாதியில் நீக்கப்பட்டார். பிரமோத் மதுஷானுக்கும் காயம் ஏற்பட்டது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு வெளியேறியது, பின்னர் ஒரு பாலியல் பிரச்சினையை அணிக்குள் இழுத்து வரும் அளவுக்கு மோசமடைந்தது.
மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்காரவின் ஓய்வுக்குப் பின்னர் அந்த இடத்தை நிரப்புவதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதைகளால் இன்னும் தனது முழுமையான திறமையை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார். துஷ்மன்த சமீரவின் நிலைமையும் இது தான். அவர் அணிக்காக ஒன்று, இரண்டு போட்டிகளில் ஆடிவிட்டு மருத்துமனைக்குச் செல்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
அடிப்படையில் இலங்கை அணியின் பொதுவான பிரச்சினையாக மாறி இருக்கும் இந்தக் காயங்களுக்கு காரணம் பற்றியும் அணி நிர்வாகம் ஆராய வேண்டி இருக்கிறது. அது போட்டிக்கான பயிற்சி முறை, வீரர்களுக்கான உடற்பயிற்சி முறை, வீரர்களை பயன்படுத்தும் முறை எதுவாகவும் இருக்கலாம்.
வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த சமீரவின் காயத்திற்குக் காரணம் உலகக் கிண்ணம் நெருங்கி இருந்தபோது நடத்தப்பட்ட லங்கா பிரீமியர் லீக் தொடர் மீது பரவலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் அரசியலை தவிர்த்துவிட்டு பார்த்தாலும் அதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது.
உலகக் கிண்ணம் இன்னும் பாதியைக் கூட தொடவில்லை. இலங்கைக்கு இன்னும் ஐந்து போட்டிகள் எஞ்சி இருக்கின்றன. யாருடைய தயவும் இன்றி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும். என்றாலும், இலங்கை அணியின் தலையெழுத்தை காயங்களே தீர்மானிக்கப்போகிறது என்பது தான் இப்போதை நிலைமை.
எஸ்.பிர்தெளஸ்