நெதர்லாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி மூன்று தொடர் தோல்விகளுக்குப் பின்னர் இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பெற்றுக்கொண்டது.
லக்னோவில் நேற்று (21) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி சில மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது. குறிப்பாக துனித் வெல்லாளகே நீக்கப்பட்டு துஷான் ஹேமன்த அழைக்கப்பட்டதோடு லஹிரு குமாரவுக்கு பதில் கசுன் ராஜித்த இடம்பெற்றார்.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நெதர்லாந்தின் முதல் 6 விக்கெட்டுகளையும் 91 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கையால் முடிந்தது. எனினும் மத்திய ஓவர்களில் இலங்கை மீண்டும் ஒருமுறை பலவீனமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
7ஆவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடிய சிப்ரன்ட் எங்கல்பிரட்ச் (70) மற்றும் லோகன் வான் பீக் (59) 130 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதால் இலங்கை அணிக்கு சவாலான இலக்கு ஒன்றை நிர்ணயிக்க நெதர்லாந்தால் முடிந்தது. குறிப்பாக இந்த இருவரதும் இணைப்பாட்டம் உலகக் கிண்ணத்தில் 7ஆவது விக்கெட்டுக்கு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக சாதனை படைத்தது.
இதன்மூலம் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. இலங்கை சார்பில் தொடர்ந்து பந்துவீச்சில் சோபித்து வரும் தில்ஷான் மதுஷங்கவுடன் கசுன் ராஜித்தவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலெடுத்தாட வந்த இலங்கை அணி குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தபோதும் ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க தொடர்ச்சியாக மூன்றாவது அரைச்சதத்தை பெற்றதோடு சதீர சமரவிக்ரம இலங்கை அணியை வெற்றிவரை அழைத்துச் சென்றார். சமரவிக்ரம, பத்தும் நிசங்கவுடன் சேர்ந்து 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டதோடு சரித் அசலங்கவுடன் 4ஆவது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.
சரித் அசலங்க சிறப்பாக ஆடியபோதும் 44 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நெதர்லாந்து சுழல் வீரர் ஆறியன் தத்தின் பந்துக்கு அநாவசியமாக சுவிப் முறையில் ஆட முயன்று விக்கெட்டை தாரைவார்த்தார்.
எனினும் கடந்த போட்டிகளில் இலங்கையின் மத்திய வரிசை தடுமாற்றம் கண்ட நிலையில் சமரவிக்ரம தனது வழக்கமான ஆட்ட பாணியை மாற்றிக்கொண்டு நிதானமாக ஆடி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்போது 5ஆவது விக்கெட்டுக்கு தனஞ்சய டி சில்வாவுடன் (30) இணைந்த அவர் 76 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.
இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 263 ஓட்டங்களை எட்டியது. அபாரமாக ஆடிய சதீர சமரவிக்ரம 107 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 91 ஓட்டங்களை பெற்றார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் தனது முதல் புள்ளிகளை பெற்றுக்கொண்டது. அடுத்து இலங்கை அணி எதிர்வரும் வியாழக்கிழமை (26) இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.