Home » ​ெகம்பஸ் காதல்

​ெகம்பஸ் காதல்

by Damith Pushpika
October 22, 2023 6:40 am 0 comment

ன்று அதிகாலையில் அகிலனின் போன் அலறியது. போனைக் கையில் எடுத்த அகிலன் வெளிநாட்டில் இருந்துதான் என்பதை புரிந்து கொண்டார். “ஹலோ.. நான் யூ.கே யில் இருந்து கதைக்கிறன். நீங்க அகிலன்தானே என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியல்ல..”. போனில் இனிமையாக ஒலித்த பெண்ணின் குரல் அது.. அதுவும் உரிமையோடு ஒருமையில் அழைப்பு வேறு. திடீரென வந்த அழைப்பால் சில வினாடிகள் எதுவும் புரியாது குழம்பிப் போன அகிலன் தன்னை சுதாரித்துக் கொண்டார்.

“நான் அகிலன்தான் கதைக்கிறன்”. “என்ன அகிலன் குழப்பமாக இருக்கா. சரி நானே சொல்கிறன் .. பூரணி கதைக்கிறன்”. அகிலன் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது கனவில்லை.. நிஜந்தான் உறுதிப் படுதிக்கொண்டார். “பூரணியா.. என்னால் நம்பவே முடியவில்லை முதுமையிலும் இளமையான குரல்”. “நம்புங்கள் நான் பூரணிதான்.. நாற்பது வருடங்களுங்களுக்கு பின் கதைக்கிறன்”. “பூரணி நலமா.. எப்படி இருக்கிறீர்கள்.. “நலமாக இருக்கிறேன். அன்பான கணவன்.. ஆசைக்கு ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரு பிள்ளைகள் நீங்கள் சொல்லுங்கள் அகிலன் “. “மகிழ்வாக இருக்கு.. பூரணி. எனக்கும் பாசமான மனைவி. இரு பெண் மகவுகள்.. மகிழ்வான வாழ்வு. என்னை நீங்கள் மறந்து போய் இருப்பீர் என நான் நினைத்தேன் பூரணி “. “எப்படி மறக்க முடியும் அகிலன் அது சாகும் வரை நினைவிருக்கும்”. “உண்மைதான் பூரணி”.

அகிலன் பூரணியை பல்கலையில் முதலாம் வருட ராக்கிங் காலத்தில் கண்டது முதல் அவனுள் முகிழ்ந்த காதல் அவனை என்னவோ செய்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. “தன் விருப்பத்தை எப்படி அவளிடம் சொல்வது. பூரணியின் விருப்பத்தை அறிவது.. அவளோடு கதைப்பது..”. அவனுள் எழுந்த கேள்விகளுக்கு அவனிடம் விடை ஏதும் இல்லை. தன் ஆசையை வெளிப்படுத்த வழி தெரியாது திக்கிக் திணறினான் அகிலன். பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பெரிய கனவுகளுடன் வந்தவன் அகிலன். கனவுகளோடு சேர்ந்து காதலும் வந்தது அவனுக்கு. காதலில் மனதை பறிகொடுத்த அகிலனுக்கு பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்கள் கழிந்து போனதே தெரியல்ல. இயல்பாகவே அழகுணர்வு நிரம்பப் பெற்ற அகிலன் தன் கண் முன் விரிந்து கிடந்த பேராதனையின் இயற்கை அழகில் தன்னைப் பறி கொடுத்தவனாக பூரணியின் நினைவுகளோடு நூலகத்திலிருந்து தன்னம் தனியனாக தான் தங்கி இருக்கும் கில்டா விடுதிக்கு போய்க் கொண்டிருந்தான்.

“எனக்குள் நீ..இருக்கிறாய்

பூரணி..

உனக்குள் நான் வருவேனா”

அகிலனின் மனதில் ஆயிரம் கவித்துளிகள்.. வந்து வந்து முட்டின. அகிலன் அழகந்தான். படிப்பிலும் கெட்டிக்காரன். ஆனாலும் காதல் விடயத்தில் துணிவு அவனுக்கு சற்று கம்மிதான். ஐந்து அடிக்கு சற்று குறைந்த உயரம்.. அழகான அரும்பு மீசை.. அகிலனுக்கு எடுப்பாக இருந்தது. மீசையை எப்போதும் தடவிய படியே இருப்பான். அரைக்கை சேட் அணிந்தால் அவன் இன்னும் அழகாக இருப்பான். அகிலனின் அழகும்.. அறிவும்.. கூடவே பயிலும் பலரை திரும்பி பார்க்க வைத்தாலும் அகிலனுக்கு பூரணியைத்தான் மிகவும் பிடித்திருந்தது.

பூரணியோடு பல்கலை வளாகத்தில் கைகோர்த்தபடி எப்போதும் சுற்றி வர கொள்ளை ஆசையோடு இருந்தான். அது நடக்குமா என தெரியவில்லை அகிலனுக்கு. பூரணி இயல்பிலேயே அழகானவள். அவளது சாந்தமான முகம். அழகான குழி விழும் கன்னங்கள் அவளது அழகுக்கு கட்டியம் கூறின. பூரணியின் மிருதுவான கூந்தல் தென்றலில் புரண்டு வதனத்தில் வந்து வந்து விழும் போதெல்லாம் தன் மிருதுவான விரல்களினால் நீவி விடும் நளினம் அற்புதமானது. பூரணியின் கழுத்தில் மின்னும் மெல்லிய தங்கச் செயின் அவள் சங்குக் கழுத்துக்கு தனியழகு தந்தது. இந்த அழகுகள்தான் அகிலன் பூரணி மேல் காதலாகிக் கசிய காரணமாகியதோ தெரியவில்லை.

நாளுக்கு நாள் அகிலன் பூரணியை பார்த்து மகிழ்ந்து மனதில் இருத்தி அழகு பார்த்தானே தவிர.. அவனால் ஒரு வார்த்தை கூட பூரணியிடம் கதைக்க அவனால் முடியவில்லை. அகிலனின் உள்ளத்தில் முகிழ்ந்த காதல் சங்கதி.. நண்பர்கள் எவருக்கும் தெரியா விட்டாலும் அவனது றூம் நண்பன் யோகனுக்கு முதலில் சொன்னது அகிலன்தான். “என்னடா இவ்வளவு நேரமும் நீ நூலகத்திலா இருந்தாய். இப்போது நீ என்னோடும் எதுவும் கதைக்காமல் தனியாக யோசித்துக் கொண்டு திரிவது எனக்கு புரியல்ல. என்னடா.. ஏதாவது பிரச்சினையா”. யோகன் அவனது மௌனம் அறிந்து கேட்டான். “மச்சான் எனக்கு பூரணியை பிடிக்கும் ஆனா அவள் விருப்பத்தை என்னால அறிய முடியல்ல. அதுதாண்டா.. பிரச்சினையே”. “நீ அவளிடம் உன் காதல சொல்லி கதைச்சுப் பாரன்”. “இன்றைக்குத்தான் பூரணியிடம் கதைக்க நான் முயற்சி செய்தேன். ஆனாலும் பூரணி திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டாள். அதுதான் நூலகத்தில் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வாறன்”. “டேய் அகிலா.. நீ பூரணியை விரும்புவது அவளுக்கு தெரியுமாடா”.

“நான் அவள் பின்னால் திரிவதையும், அவளைப் பார்ப்பதையும் அறிந்த அவளது றூம்மேற் கவிதாவும் என்னிடம் அன்றும் பகிடி விட்டவள். அதனால.. நான் விரும்புவதும் பூரணிக்குத் தெரிந்திருக்கும்”. “பூரணியின் றூம்மேற்றுக்கு தெரியும் எனில் பூரணிக்கும் தெரிய வாய்ப்பு இருக்கு”. யோகன் உறுதிப் படுத்தினான். “மச்சான் கவிதாவும் பூரணியின் நல்ல நண்பி.. அவளிடம் சொல்லிப் பாரன்”. “அதுவும் நல்ல ஐடியாதான் மச்சான். எதுக்கும் நான் கொஞ்சம் பொறுத்து அவளோடு கதைக்கிறன்”.

“பேராதனை பல்கலையில் சிங்கள சகோதரங்களின் காதல் இலகுவாக கைகூடுவதும் பின் அவர்களாகவே கை விடுவதும் சாதாரணமாகவே நிகழ்ந்து விடும். ஆனால் அகிலன் பூரணி காதல் அவை போல் சாதாரணமாக நிகழக் கூடியதா. “நானாவது இதற்கு ஒரு வழி செய்தால் என்ன.. யோகனும் யோசித்தான்.

அன்று இரவு நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டிருந்த அகிலன் பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவனாக ஏதோ எழுதிக் கொண்டு இருந்தான். “பத்து மணியாச்சு என்னடா தூக்கம் இன்னும் வரல்லையா உனக்கு. நான் தூங்கப்போறன். எனக்கு தூக்கம் வருது..” “சரிடா யோகு.. தூங்குவோம்”. “என்னடா.. நீ ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாய். பூரணியிடம் கதைக்கப் பயத்தில ‘லவ் லெற்ரர்’எழுதி கொடுக்க முடிவே செய்து விட்டாயா”. “அப்படி இல்லடா.. இதை நீயும் பாரு.. இதுதான் எழுதினேன்”.

“நித்தம் உனக்கு ஒரு கவிதை

சித்தம் மகிழ்ந்து செதுக்கிட..

பித்தன் ஆகினேன் நான்

உனை.. கண்ட நாள் முதல்”.

அகிலனின் புதுக் கவிதையை கண்ட யோகனும் கலங்கினான். “பூரணியிடம் அவ்வளவு காதலாடா உனக்கு. பூரணிக்கு கொடுக்கவா இது. கவிதை நல்லா இருக்குடா..”. “இல்லடா.. தோணிச்சு எழுதினேன்”. “சரி வந்து தூங்கு. எல்லாம் சரி வரும்”.

“நாளைக்கு கடைசி லெக்ஸர் குணசிங்கம் சேர் எடுப்பார். அது முடிய கட்டாயம் கவிதா மூலம் தூதுவிடவேணும். அவள்தான் பூரணியிடம் என் காதலை சொல்வாள்”. கவிதா மூலம் தூது விட தீர்மானித்த மகிழ்வில் நன்றாக தூங்கினான் அகிலன். அடுத்த நாள் கலாநிதி குணசிங்கம் சேருடைய கடைசி லெக்ஸர். அவர் விரிவுரை என்றால் அனைவருக்கும் கொஞ்சம் பயந்தான். அன்று விரிவுரையின் போது வாமனை அவதானித்தவர் எழுப்பி விட்டார். “நான் என்ன சொன்னன்”. நா.. வறண்டு உளறினான் வாமன். “பண்..டை..ய ஈழ..ம்..” என தடுமாற.. அவர் எழுப்பிய அடுத்த வினாவில் வகுப்பு.. சற்று அதிர்ந்து அடங்கியது. அவர் அடுத்து அன்ரனியை எழுப்ப அவன் தடுமாறி நின்றான். “போர்த்துக்கேயர் இலங்கை வந்தது போல இங்கு வந்தவர்களா நீங்கள்”. அவர் தொடுத்த வினாவோடு அன்றைய விரிவுரைகள் முடிந்தது. அன்ரனி அதை ஒரு போதும் மறக்கவில்லை அடிக்கடி சொல்லிக் காட்டுவான் அவர் பாணியில்.

அகிலனும் தான்.. நினைத்தவாறு அன்று விரிவுரை முடிய கவிதாவை சந்தித்தான். “உம்மோட கொஞ்சம் கதைக்க வேணும்..” அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள் கவிதா. “என்ன.. ஒருநாளும் இல்லாதவாறு.. சரி சொலுங்க அகிலன்”. “பூரணியை நான்..”. “ஓ.. அதுவா முன்பே தெரியுமே எனக்கு”. “தெரியுமா.. உமக்கும்”. “பின்ன.. பூரணிக்கு முன்னும் பின்னும் திரிவது தெரியாதா.. நான் விட்ட பகிடி கூட தெரியவில்லையா அகிலன்.. ஆனா வேறு யாருக்கு தெரியுமோ.. அது தெரியாது”. “பூரணிக்கும் தெரியுமா.. கவிதா”. “அவள்தானே எனக்கு இதுபற்றி சொன்னவள்”. “ஓ.. அப்படியா சரி..”. “ஏன்.. அகிலன் என்ன.. தடுமாறுகிறீர்”. “அப்படியில்ல.. கவிதா.. பூரணிக்கும் என் விருப்பம் தெரியாது என நான் நினைத்தன். என்னோட விருப்பத்த சொல்ல எனக்கு சற்று யோசனையா இருக்கு.. ஆனாலும் நான் பூரணியிடம் என் விருப்பத்தை சொல்லப் போறன்”. “அகிலன் நீங்க கதையுங்க.. அவளுக்கு உங்கள் மேல விருப்பம் இருக்கா.. இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால்.. நீங்க விரும்புவது அவளுக்கு நன்றாக தெரியும்”. ” ஓ.. அதுதான் போல.. என்னைக் கண்டதும் பூரணி தலைய குனிந்த படி கடந்து போய் விடுகிறாள். என்னால் கதைக்க முடியல்ல. ஆனால் நான் கட்டாயம் என் காதல பூரணியிடம் சொல்ல வேணும்”. “அது சரி.. அகிலன் நான் என்ன செய்ய வேணும் அத முதலில் சொல்லுங்க”. “நான் நாளைக்கு கண்டிப்பாக என் காதலை பூரணியிடம் சொல்ல வேணும். கவிதா நீங்க கொஞ்சம் பூரணியிடம் எனக்காக கதைக்க வேணும். நான் நூலகத்தில் பூரணிக்காக காத்துக் கொண்டு இருப்பன். சரிதானே..”. “சரி.. அகிலன் நான் இரவுக்கு பூரணியோடு கதைக்கன். காலையில் இதை பற்றி உம்மிடம் சொல்றன் ஓகே யா “.

நூலகத்தின் முன்னால் நண்பர்கள் சூழ்ந்து நிற்க கதைத்துக் கொண்டு இருந்தான் அகிலன். கவிதா கூடவே பூரணி வருவதை கண்டு யோகனின் காலை மிதித்து கண் ஜாடை காட்ட யோகனும் பாலாவும் கெம்பா கன்ரீன் பக்கமாக போயினர். “கவிதாவிடம் விட்ட தூது வெற்றியளித்து விட்டது உள்ளம் மகிழ்ந்தான் அகிலன்.

“அதோ பார்டீ.. அகிலன் உனக்காக நூலகம் முன்னால் நிற்கிறான்” பூரணி கவிதாவுக்கு முன்னமே அகிலனைக் கண்டு விட்டாள். கவிதா அகிலனைப் பார்த்து ஜாடை காட்டிவிட்டு நூலகத்தினுள் நுழைய பூரணி தலை குனிந்தவாறு பின்னால் போனாள். அகிலன் அவர்களை பின் தொடர்ந்தான். “பூரணி நீ அகிலனுடன் கதைத்துக் கொண்டு இரு. நான் மேல போய் புத்தகம் எடுக்க வேணும்”. கவிதா அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காது போய் விட்டாள். பூரணி கீழ் பகுதியில் பத்திரிகை வாசிப்புப் பகுதியில் அமர்ந்தாள். “நான் வந்து அருகில் இருக்க தக்கதாய் பூரணி போய் இருக்கிறாள்..” மனதில் எண்ணி மகிழ்ந்த அகிலன் பூரணிக்கு அருகே காலியாய் இருந்த கதிரையில் அமர்ந்தான். அகிலன் மனதில் தைரியம் எங்கிருந்து வந்ததோ தெரியாது. “பூர..ணீ.. ” காதலோடு அழைத்தான். இயல்பாகவே வெட்கம் நிரம்பிய பூரணிக்கு அகிலன் அழைப்பும் அவன் அருகாமையும் அவளுக்கு என்னவோ செய்தது. குனிந்த தலை நிமிரவே இல்லை அவள். “பூரணி.. கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்” கெஞ்சினான் அகிலன். “சொல்லுங்க..” நிமிர்ந்து பார்க்கவில்லை பூரணி. “நான் கம்பஸில உங்கள கண்ட நாளில் இருந்து எத்தனையோ நாட்கள் தனியாக கதைப்பதற்கு எத்தனித்தேன் பூரணி தெரியுமா”. “நீங்க என்னிடம் கதைக்க இருந்தது எனக்கு எப்படி தெரியும்”. “பூரணி நீங்கதான் என்னைக் கண்டால் விலத்திக் கொண்டு ஓடும் போது நான்தான் எப்படி கதைக்க முடியும்”. “அப்படி இல்லை.. அகிலன் எல்லாம் சூழ்நிலைதான்.. சரி இப்போ சொல்லுங்க”.

“கவிதா சொல்லி இருக்காது விட்டால் இன்றும் கதைத்திருக்க முடியாமல் போய் இருக்குமோ தெரியல்ல”. “அதுதான் நான் வந்து விட்டேனே சொல்லுங்க “. “சரி சொல்றன் பூரணி உங்கள நான் விரும்புவது உங்களுக்கும் தெரியும் என்பது எனக்கு தெரியும்.. ஐ லவ் யூ பூரணி. இப்போ நீங்க சொல்லுங்க உங்களுக்கும் விருப்பந்தானே”. “நான் உங்கள் மேல் விருப்பம் இல்லாமலா கவிதாவுடன் வந்து உங்களுடன் கதைத்துக் கொண்டு இருக்கிறன்.. இப்போ உங்களுடன் கதைத்துக் கொண்டு இருப்பது விருப்பம் இல்லாமலா.. சொல்லுங்க”. அகிலன் இன்ப வானில் சிறகடித்து பறந்தான்.

“பூரணி.. இன்றைக்குத்தான் நான் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறன்.. இந்தக் கணமே நான் இறந்து போனாலும் கவலைப்படமாட்டேன்”. அதே கணம் அவளையும் அறியாது அகிலனின் வாயை பொத்தினாள். “என்ன அகிலன் இப்படியா கதைப்பது” தன் செய்கையை நினைத்து அவளுக்கே வெட்கம் வந்தது. உள்ளம் உவகையால் பொங்கியது அகிலனுக்கு.”வாங்க பூரணி கன்ரீனில் போய் டீ எடுப்பம்”. “நான் வரல்ல.. அகிலன் எனக்கு கூடவே வர வெக்கமாக இருக்கு”. “என்ன பூரணி இப்படிச் சொன்னா..” “இல்லை.. நாம இருவரும் ஒண்ணாப் போனா எல்லாரும் பார்ப்பினம். இன்றைக்கு வேண்டாமே அகிலன்”. அவ் வேளை.. கவிதாவும் வந்து பூரணிக்கும் அகிலனுக்கும் வாழ்த்துச் சொல்ல பூரணியின் முகம் வெட்கத்தால் சிவந்து போனது. “நாணமோ..இன்னும் நாணமோ… அந்த ஜாடை நாடகம் என்ன.. அந்த பார்வை கூறுவதென்ன நாணமோ..” குனிந்த படி இருந்த பூரணியின் தலையை தடவிய படி கவிதா மெல்லிய குரலில் பாடினாள். “போதும்.. போதும்.. வாங்க நாம் கன்ரீனிக்கு போவோம்”. அவர்களை அழைத்துக்கொண்டு அகிலன் வூஸ் கன்ரீன் பக்கமாக போனான். “காதல் கை கூடிய பார்ட்டியா இது அகிலன்”. அப்படியே வைத்துக் கொள்ளுங்க கவிதா”. “இது சரிவராது இன்னும் பெரிசாக வைக்க வேணும்”. “பிறகு பாக்கலாம் கவிதா.. இப்ப வாங்க “. அன்று மூவரும் கன்ரீனில் சிற்றுண்டி முடிந்த பின் நேரே சங்கமித்தா விடுதி வரை சிரிப்பும் கதையுமாக வந்து சேர்ந்த பின்னரே அகிலன் விடை பெற்றான். அகிலனுக்கு முன்னமே விடுதிக்கு வந்த யோகனும் பாலாவும் அகிலன் வரவுக்காக காத்திருந்தனர். “மச்சான் அகிலன்.. காதல் கை கூடிய சந்தோஷம் உன் முகத்திலும் தெரியுது”. “டேய் பாலா நீ சொல்வதும் சரிதான் மச்சான்..”. அகிலா நீ காத்திருந்தது வீண் போகல்லடா பார்ட்டி ஏதாவது.. உண்டா”.”மச்சான் அதை இன்னுமொரு நாள் பாப்போம்”. “இல்லடா நாளை இரவுக்கு ஒழுங்கு செய்வமாடா”. “சரிடா பாலா.. நீயே ஒழுங்கு செய். நான் காசு தாறன்”.

அகிலன் பூரணி காதலர், விரிவுரை முடிந்த மறுகணமே நூலகத்தில் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர். வெளியில் ஒன்றாக செல்வதை தவிர்த்தாள் பூரணி. காலமும் வேகமாக சுழன்றது. ஒரு வருடம் உருண்டு போயிருந்தது. அன்றும் வழமை போல் நூலகத்தில் பூரணியைச் சந்தித்தான் அகிலன். “என்ன.. பூரணி நாம் இருவரும் கன்ரீனிக்காவது சேர்ந்து போகாமல் இருக்கோம். வாங்க இன்றைக்காவது போவோம்”. “இல்லை அகிலன் வேணாம். எனக்கு சேர்ந்து வர ஏதோ ஒன்று தடுக்குது இன்னொரு நாள் போவோமே”. “சரி.. அதை விடுங்க.. பூரணி இன்றைக்கு நானும் வாறன் விடுதி வரைக்கும். நாம் சேர்ந்தே போவோம்”. “றூமேற் கவிதா வருவாள் என்ன”. ” கவிதாவை விடுதிக்கு முன்னுக்கு அனுப்பிவிடு பூரணி பின்னால் நாம போவம் “. “இல்லை அகிலன்.. கவிதா எனக்காக வெளியே பார்த்துக் கொண்டு நிற்கிறாள்”. “சரி.. நான் கவிதாவோடு கதைக்கிறன்”. “வேணாம் அகிலன்”. சொன்ன வேகத்தில் பூரணி எழுந்து விட்டாள். “கொஞ்சம் இருங்க.. பூரணி கொஞ்சம் கதைக்க வேணும்”. “அகிலன் நாளைக்கு கதைப்பம் நேரம் போயிற்று வாறன்”.

அடுத்தநாள் நூலகத்தில் பூரணியை சந்தித்த அகிலன் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். “என்ன அகிலன் கோபமா”. “இல்லை பூரணி”. “அப்போ ஏன் கதைக்காமல் எங்கோ பார்த்தபடி இருக்கிறீர்கள்..”. “இல்ல சும்மாதான் நேற்று நான் சொல்ல வந்ததை கூட கேட்காமல் போய் விட்டீர்கள்”. “சரி, அத விடுங்கள் இப்போ சொல்லுங்க”. “சரி, நாம் இன்றைக்கு பின்னேரம் வெளியில போய் வருவோம். நான் விடுதிக்கு ஆறு மணிக்கு வாறன். ஏழு மணிக்குள் திரும்ப விடுதிக்கு போயிடலாம்”.

நிமிர்ந்து அகிலனைப் பார்த்தாள் பூரணி. “இப்ப வேணாம் அகிலன். எனக்கு பயமாகவும் இருக்கு அதே நேரம் எனக்கு ரியூட் எழுதும் வேலையும் இருக்கு”. “அப்போ என் கூடவே வரமாட்டீங்க அப்படித் தானே பூரணி”. “அப்படி இல்லை அகிலன் பிறகு போவோம் இப்போ.. வேணாம்”. “விடுதிக்கு நான் வருவதை பூரணி விரும்ப வில்லை போலும்”. அகிலன் புரிந்து கொண்டான். “இன்றைக்கு விடுதிக்கு வர வேணாம் அகிலன். பிறகு நாம் வெளியில் போகலாம். நூலகத்தில் நாம் ஒவ்வொரு நாளும் சந்தித்து கதைக்கும் போது வெளியிலும் போக வேணுமா அகிலன்”. பூரணியின் கேள்விக்கு பதில் சொல்லாது புழுங்கினான் அகிலன். எல்லாக் காதலர்களையும் போல் பல்கலை வளாகம் முழுவதும் பூரணியுடன் கைகோர்த்தபடி உலாவர ஆசைப்பட்ட அகிலனுக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது. விரிவுரைகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெற்றதால் அந்த நாட்களில் நூலகத்தில் கூட அகிலன் பூரணியை சந்திப்பது தள்ளித்தான் போனது.

அகிலனின் தமையன் சிவலிங்கம் அகிலனின் காதல் செய்தியை அறிந்து விட்டார். அகிலனின் ஊரவன் மயூரன் மூலமாகத்தான் செய்தி போயிருக்க வேணும் என அகிலன் ஊகித்தான். காதல் செய்தி போன மறுநாளே விடுதிக்கு வந்த தமையன் சிவலிங்கம் றூம்மேற் யோகன் இருக்கும் போதே அகிலனுடன் சற்று காரசாரமாகவே கதைத்தார். முன்பும் இரு தடவைகள் வந்து போனதால் யோகனுக்கும் நன்கு பழக்கமானவர். றூமேற் யோகன் பயந்தே போனான். அவரது கண்டிப்பு அப்படி இருந்தது. “இந்த காதல் சங்கதியை நீ இத்தோடு விட்டுத் தொலைத்து விடு. இல்லையா.. பெட்டியை எடுத்துக் கொண்டு உடனே வீட்டுக்கு வந்துவிடு. இது தொடரும் என்றால் நல்லா இருக்காது”. திக்கு முக்காடிப் போனானான் அகிலன். அன்று விடியலில் சிவலிங்கம் ஊர் கிளம்பி போன பின் நடந்ததை பாலாவிடம் போய்ச் சொன்னான் யோகன். ஒருவருடமாக தொடர்ந்த காதலை ஒரு நொடியில் அவர் நொறுக்கிய போது உறுதி குலைந்து போனான் அகிலன். ஆனாலும் அகிலன் மனம் தளரவில்லை. பார்த்துப் பார்த்து பூரணியை காதலித்தவனல்லவா அவன். இருந்தும் அவனது குடும்பத்தின் நிலையும், எதிர்பார்ப்பும் அவனை சங்கடப்படுத்தியது என்னவோ உண்மைதான்.

அதற்காக தன் காதலை தியாகம் செய்ய ஒரு போதும் நினைக்கவில்லை அகிலன். பாலா, யோகனுக்கு மட்டும் தெரிந்த செய்தியை பூரணிக்கு அகிலன் சொல்லவில்லை. பூரணியை அடுத்து வந்த நாள் விரிவுரைகள் முடிந்த பின் நூலகத்தில் சந்தித்தான் அகிலன்.

“விரிவுரை முடிந்தும் கன்ரீனிக்கு நான் போகாமல் இருக்கன் பூரணி. வாங்க நாம வூஸ் கன்ரீனிக்கு போவம்”. “வேண்டாம் நான் வரல்ல அகிலன். நீங்க போய் வாங்க.. நான் உங்களுக்காக இருக்கன் நீங்க வரும் மட்டும்”. “ஒகே நான் வாறன்”. பூரணி மாட்டன் என்றதால் அகிலனுக்கு வருத்தம் இருந்தது. “பூரணி எப்பவும் இப்படித்தான்” என நினைத்தவாறு கெம்பா கன்ரீன் வந்த அகிலன் நண்பர்களோடு இணைந்து டீ எடுத்த படி ஒரு சிகரெட் பற்ற வைத்தவன் புகையை ஆழமாக உள்ளிழுத்து விட்டான். அவனுக்கும் அப்போது அது இதமாக இருந்தது.

ஒருபக்கம் தமையனின் கண்டிப்பான வார்த்தைகள் வந்து போனது. இன்னொரு பக்கம் பூரணி தன்னுடன் நடந்து கொள்ளும் விதமும் அகிலனுக்கு மனதில் சங்கடம் தந்தது. மனக் குழப்பத்தில் சிகரட் புகையை உள்ளிழுத்து ஊதித் தள்ளினான். “என்னடா அகிலன்.. நீ குழப்பத்தில் இருப்பது போல தெரியுது”. “ஒண்ணுமில்லடா யோகு.. வாங்கடா றூமுக்கு போவம்”. நூலகத்தில் பூரணியப் பார்க்கப் போகவும் விரும்பல்ல அகிலன். “மச்சான் என்னடா.. அண்ணே வந்து போனதால குழம்பி போனாயா..”. “அதுவுந்தான் மச்சான்.. வாங்கடா கதைத்துக் கொண்டு போவம்”. “வேறு என்னதான் பிரச்சினை சொல்லன்”. யோகன் விடவில்லை கேட்டபடி வந்தான். “இல்லை மச்சான் அண்ணை வந்து பேசிப்போட்டு போனது வருத்தந்தான். வீட்டில் என்ன பிரச்சினையோ தெரியல்ல. அதிருக்க பூரணியும் பெரிசா பிகு பண்ணுறா. அதுவும் எனக்குப் பிடிக்கல்ல”. “நீ என்னடா சொல்றா எனக்கு விளங்கல்ல”. பாலாதான் கேட்டான். “கன்ரீனிக்கு பூரணியை பல தடவை டீ குடிக்க அழைத்துப் பார்த்துவிட்டன். இன்றும் அழைத்து விட்டுத்தான் நான் தனியே வந்தன்”. “ஏன்டா.. பூரணி அப்படி இருக்காள்”. “யாருக்குத் தெரியும். என் கூட வர வெக்கமாம். நமது பண்பாடு இடம் கொடுக்கல்ல போல”. அகிலன் அலுத்துக் கொண்டான். “சரிடா அதை விடுடா.. இதுக்கு போய்..”

நூலகத்தில் இருந்த பூரணி அகிலன் வருவான் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தவளாய் கோகிலா வர விடுதிக்கு கிளம்பினாள். “என்ன பூரணி.. அமைதியாக வாறா. ஏன் அகிலன் வரல்லையா”. “லெக்ஸர் முடிய அகிலன் வந்து கன்ரீன் போக அழைத்தும் நான் போகல்ல. அகிலனை கன்ரீனிக்கு போய்விட்டு பிறகு வரச் சொன்னன். அகிலன் கன்ரீன் போன பின்னர் திரும்ப வரல்ல. அகிலனுக்கு கோபம் போல”. “நீயும் ஏன்டி அப்படி இருக்கா.. இதில் என்ன இருக்கு பூரணி. தவறு இல்லத்தான்”. “நான்தான் அகிலனிடம் சொன்னன். ஏனோ அகிலன் என்னை புரிந்து கொள்ளவில்லை”. அடுத்த வந்த சனிக்கிழமை அகிலனுக்கு இருக்க முடியவில்லை. பூரணியை சந்திக்கும் முனைப்பும் இருந்தது. அன்று நூலகத்தில் வைத்து பூரணியை கன்ரீனிக்கு அழைத்தும் வராதது அகிலனுக்கு வருத்தமாக இருந்தது. இருந்தும் அன்று மாலையில் பூரணியை சந்திக்க விடுதிக்கே போயிருந்தான். பூரணிக்கு செய்திஅனுப்பி விட்டு காத்திருந்தான் நேரம் கடந்து கொண்டிருந்தது. பூரணி வரவில்லை. கவிதா.. தான் வந்தாள்.

“நான் வந்து அரைமணிநேரம் ஆச்சு. என்றான். “தெரியும் அகிலன். பூரணி வரமாட்டாள் போல. நான் அவளிடம் சொல்லிப் பார்த்தன். அவள் வருவதாக இல்லை அதுதான் நான் வந்தன். நேற்றும் உங்களுக்கிடையில் ஏதோ பிரச்சினை போல”. “அப்படி இல்ல கவிதா நடந்ததை பூரணி சொல்லி இருப்பாள்தானே.. சரி அதை விடுங்க நான் வாறன்”. தன் காதலால் வீட்டில் நெருக்கடி. இங்கு காதலியின் உதாசீனம். வெறுத்துப் போனான் அகிலன். “போதும் இந்தக் காதல் வாழ்வு.. என் எதிர்காலம் இதனால் பாதிக்கக் கூடாது. இனி படிப்பில் கவனம் முழுவதையும் நான் செலுத்துவேன்” மனதில் உறுதி பூண்ட அகிலன் தெளிந்த மனதுடன் கில்டா விடுதியை அன்று போய் சேர்ந்தான். அதன் பின் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து போனது.

“என்ன அகிலன் அமைதியாகி விட்டீர்கள்.. கடந்த கால நிகழ்வுகள் வந்து போனதா”. “அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள் பூரணி”. “அகிலன் அன்று நீங்கள் சங்கமித்தா வந்த போது நான் உங்களை வந்து பார்க்காமல் இருந்தது உங்களை உதாசீனம் செய்வதற்கில்லை. உங்களது தமையன் வந்து உங்களை கண்டித்துவிட்டு போனதை உங்களின் றூம்மேற் யோகன் சொன்ன போது எனக்கு அது பெரும் வேதனையை தந்தது. நம் காதல் உங்களது படிப்புக்கோ.. உங்களது வீட்டாருக்கோ.. இடைஞ்சலாக இருந்து விடக் கூடாது என்பதனால் நான் அன்று எடுத்த உறுதியான முடிவு அது அகிலன்”. அகிலனுக்கு சுள்ளென மனதில் தைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. பூரணியே தொடர்ந்தாள். “நீங்கள் வெளியே சேர்ந்து போக என்னை அழைக்கும் போதெல்லாம் உள்ளூர விருப்பம் எனக்கும் இருந்தது அகிலன். ஆனாலும் ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது அதுதான் உண்மை அகிலன். எனக்கும் நிறைய கனவுகள் ஆசைகள் இருந்தது என்னை இப்பவாது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன். முதன் முதலாக முகிழ்ந்த காதல் அல்லவா அகிலன்”. “பூரணி.. குழப்பமான மன நிலையில் அன்று தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை.. காதலியின் உதாசீனம் என்னை காயப்படுத்தியது. தமையனின் கண்டிப்பு வேறு.. ஆனால் உங்களுக்கு பெரிய மனசு.. மிக்க நன்றி பூரணி..”. “போதும்.. போதும்.. நீங்கள் புகழ்ந்தது”. அவளே தொடர்ந்தாள்.

“அகிலன் அறுபத்தைந்து வருடங்களை தொட்டு நிற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் பிறந்த நாளுக்கு பரிசு பொதி ஒன்றை உங்கள் பல்கலைக்கழக விலாசத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன் ஏற்றுக் கொள்ளுங்கள்”. “நன்றி பூரணி “. விடை பெற்றுக்கொண்டனர். அகிலன் கண்களில் கண்ணீர் கசிந்தது. “முதற் காதல் அல்லவா.. அதுவும் கம்பஸ் காதல்” முணு முணுத்தார் அகிலன்.

வெல்லாவெளி விவேகானந்தம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division