எஹெலியகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்கர சில்வா நேற்று (21) அதிகாலை தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவி தெரிவிக்கையில், அவரது தாயார் சொத்தை இளைய சகோதரனுக்கு மட்டும் எழுதி வைக்க முற்பட்டதால் மனம் உடைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். அவரது தாய்க்கும் சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, “நான் இறந்தவுடன் உங்கள் அனைவருக்கும் சரியாகி விடும்” என அவர்களிடம் தனது கணவர் கூறியிருந்ததாகவும் பொலிஸாரிடம் அவரது மனைவி கூறியுள்ளார்.
எஹெலியகொடைபொலிஸ் நிலையத்துக்கு உத்தியோகபூர்வ இல்லம் இல்லாத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதியிலுள்ள ஹோட்டலில் அறையொன்றை தமது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக இவர் மாற்றியுள்ளார். அந்த ஹோட்டல் அறையிலேயே பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று (21) அதிகாலை காலை பொலிஸ் நிலையப் அதிகாரி ஒருவர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தினசரி அறிக்கையை வழங்குவதற்காக அறைக்கு வந்துள்ளார். அதிகாலையிலேயே எழுந்திருக்கும் இவர் அழைத்தும் பதில் எதுவுமில்லாத காரணத்தால் மற்றைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். அதனையடுத்து பொலிஸ் நிலையத்தின் மற்றைய அதிகாரிகள் வந்து கதவுகளை உடைத்து பார்த்த போது, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுக்கையில் பொலிஸ் அதிகாரி இறந்து கிடந்ததை கண்டனர்.