இஸ்ரேல்- பலஸ்தீன யுத்தம் நாளுக்குநாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் சர்வேத பொருளாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரத்தின் மீதான பாதிப்பு குறித்த தகவல்கள், அறிக்கைகள் பேரதிர்ச்சிக்குரியதாக இருக்கின்றன.
பொதுவாக யுத்த காலங்களில் சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான சீரழிவை எதிர்கொள்வது வழக்கம். அதுவும் கொரோனா எனும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திய பேரழிவு ஒட்டுமொத்தமாக உலக நாடுகளை முடக்கியதுடன், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்மூலமாக்கியது. கொவிட் வைரஸ் மனிதர்களை மட்டும் காவு கொள்ளவில்லை. அத்தனை பொருளாதார தூண்களையும் துவம்சம் செய்துவிட்டுதான் ஓய்ந்தது.
கொரோனா காலப் பெருந்துயரத்தில் இருந்தும் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்தும் உலகம் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த இயல்புநிலைக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் பாதிப்பை ஏற்படுத்தியது.
மசகு எண்ணெய் விலையேற்றம் எனத் தொடங்கி உலகின் பொருளாதாரத்தில் மிகக் கொடூரமான பாதிப்புகளுடன் கோரத்தாண்டவமாடியது இந்த யுத்தம்.
உக்ரைன் மீதான யுத்தத்தின் போது மொஸ்கோ பங்கு சந்தை 9 சதவீத இழப்பை எதிர்கொண்டது. அப்படியானால் முதலீட்டாளர்களுக்கான இழப்பு எத்தகையதாக இருந்திருக்கும்? பொதுவாக யுத்த காலங்களில் உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன.
தற்போதைய இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தமும் மிகப்பெரும் கவலைகளை சர்வதேசத்தின் மீது ‘ஏவுகணைகளை போல வீசிக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1973 இல் இதேபோல இஸ்ரேல்- பாலஸ்தீனம் நிலைமை இருந்தது. அப்போதுதான் உலகம் முதன் முதலாக மசகு எண்ணெய் விலை உயர்வை அனுபவித்தது.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதே போன்ற ஒரு யுத்த சூழ்நிலையில் உலகம் இப்போது அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதைய யுத்தத்தால் மசகு எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதன் விலையை தாறுமாறாக உயர்த்தினால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் திக்குமுக்காடி மூச்சுவிட முடியாத நிலைமைக்குப் போகும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.
இது ஒருபுறம் இருக்க இந்தியா எதிர்கொள்ளப் போகும் சவால்களை நினைக்கவே பேரச்சமாக இருக்கிறது என்று இந்திய பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில் யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேலுடன் இந்திய வர்த்தக உறவு அத்தகைய வலிமையானது.
இஸ்ரேலின் ஆசியா வர்த்தக பங்காளர்களில் இந்தியா 3 ஆவது நாடு ஆகும். உலக அளவில் இஸ்ரேலின் வர்த்தக உறவில் இந்தியாவுக்கு 10 ஆவது இடம் உள்ளது.
ரஷ்யாவுக்கு அடுத்ததாக இஸ்ரேலிடம் இருந்துதான் பெருமளவு பாதுகாப்பு தளவாடங்களை இந்திய நாடு கொள்முதல் செய்கிறது. சுமார் ரூ74,000 கோடி ரூபாவுக்கு இந்த வர்த்தக உறவு உள்ளது. இப்படியே யுத்தம் நீடித்தால் இஸ்ரேலிடம் இருந்து சற்று விலகி ரஷ்யாவிடம்தான் பாதுகாப்பு தளவாடங்களுக்கு இந்தியா போக வேண்டும். ரஷ்யாவும் இந்தியாவுக்கு வாரி வழங்கும்.. ஆனால் மிக மிக அதிகமான விலை கொடுத்தாக வேண்டும் என்கின்ற போது இந்தியாவின் பொருளாதார நிலைமை என்னவாகும் என்பதுதான் முக்கிய வினா!
உலோகங்கள், இலத்திரனியல் கருவிகள், உரங்கள், இயந்திரங்கள், பம்புகள், மருத்துவ உபகரணங்கள் என இஸ்ரேல் மிக அதிகளவு பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கான உப்பு, சீமெந்து என்றெல்லாம் இஸ்ரேல்தான் இந்தியாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கான இஸ்ரேலின் ஏற்றுமதி சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் எனில் வரப்போகின்ற பாதிப்பை மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். இந்தியாவின் இழப்பு கவலைப்படும்படியாகவே இருக்கப் போகின்றது.
இவ்வாறே இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் தொடர்ந்தால் இந்தியாவின் வர்த்தக இழப்பு அளவு ரூபா 25,000 கோடியாக இருக்கக் கூடும் என்பது பொருளாதார நிபுணர்களின் கணிப்பாகும். இதனால் சில பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்திக்கலாமென அஞ்சப்படுகின்றது.
நிலைமை இவ்வாறிருக்கையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்கள் கதிகலங்கிப் போய்க் கிடக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேல் போர் தீவிரம் அடைந்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தங்கள் கிளைகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சொல்கிறார்கள்
அமெரிக்கா பெரியப்பா என்றால், இங்கிலாந்து சித்தப்பா, ஜெர்மன் அத்தை, இத்தாலி மாமா என்கின்ற அளவுக்கு மேற்கத்தேய நாடுகளின் பின்னிப்பிணைந்த உறவில் இருக்கும் நாடுதான் இஸ்ரேல். மேற்கத்தேய நாடுகளில் எப்படி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றனவோ அதுபோல் இஸ்ரேலிலும் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள ஐடி துறைகள் கணிசமாக இஸ்ரேலில் இயங்கி வருகின்றன. மென்பொருள் நிறுவனங்கள், சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் ஏராளமாக இஸ்ரேலில் இருப்பதால், இந்தியாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தேடிச்சென்று இஸ்ரேலில் கடைவிரித்துள்ளன.
இந்தியாவின் ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ்,விப்ரோ, டெக் மஹிந்திரா, இன்போசிஸ், எச்.சி.எல் உள்ளிட்டவை இஸ்ரேலில் உள்ளன.
அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளின் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசொப்ற், இன்டெல் உட்பட 500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ஊழியர்களுடன் அங்கு இயங்கி வருகின்றன.
இஸ்ரேல் உளவு சொப்ட்வெயார்கள் உலக அளவில் பிரபலமானவை ஆகும். உலகின் பல்வேறு நாடுகளுமே இஸ்ரேலின் உளவு மென்பொருள்களை பயன்படுத்துகின்றன. தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போரின் கோரத்தாண்டவம் காரணமாக ஐடி நிறுவனங்கள் கலக்கத்தில் இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் இஸ்ரேலில் இயங்கி வரும் நிலையில், அவை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் போர், தற்போது உள்ள நிலைமையை தலைகீழாக மாற்றிவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான இந்தப் போர் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தொழில்நுட்பத் துறைக்கு நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது.
ஏற்கனவே உக்ரைன்- ரஷ்யா போரால் பல ஐடி நிறுவனங்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தன. இதனால் வேலைஇழப்பு போன்ற மோசமான நிலையை ஐடி ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்தால், இஸ்ரேலில் அலுவலகங்களைக் கொண்டுள்ள உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நடவடிக்கையை இந்தியா உட்பட பிற இடங்களுக்கு மாற்றக்கூடும் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ்.சாரங்கன்