ஈழத்து இலக்கியத்தின் தவிர்க்கப்பட முடியாத பகுதியாகிய மலையக இலக்கியத்திற்குத் தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியோர் பலர். மலையகத்தைச் சேர்ந்தோராலும், தம் வாழ்க்கையின் குறிப்பிட்ட காலகட்டத்தை மலையகத்தில் கடக்க நேர்ந்தவர்களாலும் இழைத்துப் பின்னப்பட்ட பின்னலென மலையக இலக்கியம் செழுமை கண்டிருக்கிறது. கே.ஆர்.டேவிட், நந்தி, தி.ஞானசேகரன் போன்ற மலையகத்தில் வாழ்ந்தறிந்த எழுத்தாளர்களின் நாவல்களூடாக மலையகம் பற்றிய தோற்றமொன்றைக் கண்டிருந்த எனக்கு மலையக மக்களின் வரலாற்றோடு இணைந்தவராக மாத்தளை வடிவேலன் முன் வைக்கும் இன்னொரு சித்திரத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வல்லமை தாராயோ எனும் இச் சிறுகதைத் தொகுதி மூலம் கிட்டியது.
வல்லமை தாராயோ? எனும் இத் தொகுப்பின் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களும் மலையக மக்களின் துன்ப துயரங்களில் ஒன்றாக நின்று உழைத்தவர்கள். அண்மையில் தனது எழுபதாம் அகவையை நிறைவு செய்த மு.நித்தியானந்தன் மற்றும் மாத்தளை வடிவேலனுடன் ஒருசாலை மாணாக்கராக வளர்ந்த எச்.எச். விக்கிரமசிங்க இருவரும் இணைந்து மலையக மக்களின் வரலாறும், கண்ணீரும் நிறைந்த இந்த ஆக்க இலக்கியப் படைப்பை உலகின் முன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கும் அவர்கள் இருவரதும் முன்னுரையும் வெளியீட்டுரையும் இத் தொகுதியின் கதைகள் புரிய வைக்கும் உணர்வுகளின் வரலாற்றுப் பின்னணியை இணைக்கும் சரடுகளாகின்றன.
மாத்தளை மண் அங்கு அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் ஆலயத்தினால் பிரசித்தி பெற்றது. அத்தகைய மாத்தளை நகரினூடாகக் கண்டிக்கு நகர்த்தப்பட்ட பல்லாயிரம் கூலித் தொழிலாளிகளின் பயணத்தையும், அவர்கள் அடைந்த இடர்களையும் இக்கதைகள் தோறும் வடிவேலன் பதிவு செய்கிறார். பதினான்கு கதைகள் அடங்கிய இத் தொகுப்பிலுள்ள கதைகள் ஒன்றில் தானும் கதாசிரியர் மலையக மண் சார்ந்த பிரச்சினையைச் சொல்லாமல் விட்டதில்லை. அதற்கேற்றாற் போலவே இத் தொகுதியின் அட்டைப்படமும் காலாதிகாலமாய்க் கொழுந்துக் கூடையைக் கொழுவியபடி நலிந்து போன ஒரு மலையகத் தாயின் தீராத் துயரை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. இருந்தும் இத்தனை அவலங்களிலிருந்தும் மீண்டெழும் அவாவை இறைஞ்சிய தொகுதியாய் பிரதிபலிக்கிறது. இருந்தும் இத்தனை அவலங்களிலிருந்தும் மீண்டெழும் அவாவை இறைஞ்சிய தொகுதியாய் இத் தொகுப்பு வல்லமை வேண்டி மலர்கிறது. மலையகத்தவர் துயரங்களில் பாதியேனும் உரிய தரப்புகளால் தீர்க்கும் வகையில் இந்நூல் வேண்டியவர்களை சென்றடையுமெனில் அதுவே இத் தொகுதிக்குக் கிடைக்கும் வெற்றியாகும். அத்துடன் தமிழகத்தின் ‘தாய்’பதிப்பகம் இச் சிறுகதைத் தொகுதிக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளித்துக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இத் தொகுதியிலமைந்துள்ள தாத்தாவின் ரெங்குப்பெட்டி எனும் முதலாவது கதை மலையகத் துயரின் ஆதி இழையைப் பிடித்து அலசுவதாக அமைந்துள்ளது. வரலாற்றுப் பாங்கான விடயங்கள் இக்கதைக்கு வலுச் சேர்க்கின்றன. சிறு மனதில் இருக்கும் தாத்தாவின் ரெங்குப் பெட்டி பற்றிய வியப்பும், காலப் போக்கில் யுத்தகாலப் பாதிப்புக்கள் தாக்கத் தொடங்கும் போது அதற்கு முதல் காரணமாக தாத்தா, பாட்டி ஏன் இங்கு வந்தனர் என எழும் வெறுப்பும், தமிழகத்திலிருந்து வந்தவர்கள் மீது கண்டித் தொழிலாளருக்கு இருந்த காழ்ப்புணர்வும் சிறப்புற விபரிக்கப் படுகின்றன. மேலும், ரெங்குப் பெட்டியினுள் கிடந்த ஆவணமாக அந்தக் காலத்தில் இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களைக் கோரும் விளம்பரம் காணக் கிடைக்கிறது. அவ்விளம்பரத்தில் இலங்கைக்கு வர விரும்புவோர் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், இலங்கையில் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள், வசதிகள் தற்போதைய மலையக மக்களின் நிலையை எண்ணிக் கண்ணீர் சிந்த வைக்கின்றன. முதியோருக்கு அவர்கள் விரும்பிக் கேட்கும் சாராயத்தைப் படையலிடல், ரெங்கு பெட்டியைச் சம்பிரதாயபூர்வமாகத் திறத்தல் என்பன போன்ற விபரிப்புகளும் வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
நாடு கடந்த நதிகள் இத்தொகுப்பின் இன்னொரு கதை. பபூன் வீரையா சிறுவனாகவிருந்தபோது அனாதையாக கலைதாசனின் சலூன் வாசலில் ஒதுங்கி நின்று சலூன் தொழில் பழகியவன். நாடகங்களில், தெருக் கூத்துகளில் பபூனாக நடித்ததன் மூலம் பபூன் வீரையா எனும் நிரந்தர பெயருக்குச் சொந்தக்காரன் ஆனவன். கங்காணி மகள் அவன் மேல் காதல் கொள்கிறாள். கங்காணியின் திட்டத்தினால் கடைசியில் பதிவு எதுவுமற்ற காரணத்தைச் சாட்டி பொலிஸாரால் கைது செய்யப்படுகிறான். யாருமற்ற அனாதையாயிருந்த அவன் ஒரு காதலைக் கண்டடைந்த போதிலும், கடைசியில் கங்காணியின் சூழ்ச்சியால் கடவுளாலும் கை விடப்பட்டவனாகிய நிலையைத் துயரத்தோடு விபரிக்கின்றார் கதாசிரியர். தோட்டப்பகுதிகளில் எவ்வெவ்விடங்களில் எவ்வாறு தோட்ட மக்களின் தலைமுடி சிரைக்கப்பட்டது, சலூன்கள் வந்த பிறகு நாற்காலியிலமர்ந்து கண்ணாடி பார்த்து தலை சிரைக்கும் நாகரிகம் என இன்றைய தலைமுறை அறியாத விடயங்களும் கதையினூடு வெளிப்படுகின்றது.
இத்தொகுப்பின் தலைப்புக் கதையாகிய வல்லமை தாராயோ தொழிற்சங்கத் தலைவனான கறுப்பையா எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றிப் பேசுகிறது. தொழிலாளர்களின் நலன் பற்றியே எப்போதும் சிந்திக்கும் கறுப்பையா ஒவ்வொரு தொழிலாளியினதும் பிரச்சினையை தொழிற்சங்கத்திற்கு எடுத்துச் செல்கிறான். கொழுந்து மடுவத்திற்குக் கொழுந்து எடுத்துச் செல்லும் போது கர்ப்பிணிப் பெண்ணொருத்தி மயங்கி வீழ்ந்த பிறகு, கர்ப்பிணிகளினதும், வயோதிபர்களதும் கொழுந்துகளை இளையோரே கொண்டு சென்றனர். தோட்டத்திற்கு வந்து கொழுந்தினை எடுக்க வேண்டுமென்று இரு வாரங்கள் நடந்த வேலை நிறுத்தத்தில் அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. இரவோடிரவாக அரிசிக் காம்பிராவை ஒரு லொறியில் கபளீகரம் செய்தபின் கறுப்பையா, மாணிக்கம் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகளே அவற்றைக் கொள்ளையடித்ததாக தோட்ட நிர்வாகம் பொலிசுக்குத் தகவல் கொடுக்கிறது. இவ்வாறாக உரிமைக்கு குரல் கொடுக்குந்தோறும் தொழிற்சங்கவாதிகளான இளைஞர்கள் எவ்வாறு அதிகாரத்தினால் பழிவாங்கப் படுகிறார்கள் என்பதனை அழகாக இக் கதையில் பிரதிபலிக்கிறார் கதாசிரியர்.
அடுத்த கதை அக்கினி. தவறணையில் தேயிலைச் செடிகளுக்கு நீரூற்றி வளர்க்கும் ரெங்கையாக் கிழவன், மனைவியை இழந்தவன். அங்குள்ளோருக்குத் தாத்தாவாகவும், அப்பாவாகவும், பெரியவராகவும் உதவி செய்து கொண்டிருப்பவன். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு தமிழகத்தில் தன் சொந்த ஊரில் உயிர் விடும் விருப்பில் பாஸ்போட் எடுத்துத் தன் உடுபுடவைகளைக் கட்டி வைத்து விட்டு ஊருக்குத் தேநீர் விருந்து வழங்குவதற்காக, பழங்கள் வாங்க சந்தைக்குச் சென்று திரும்புகிறான். திரும்பி வரும் போது, காடையரால் அவர்களது தோட்டம் கொளுத்தப்பட்டு, கிழவனின் உடுபுடவைகளும், பாஸ்போட்டும் எரிக்கப்பட்டு அவனது நெஞ்சில் அக்கினியைக் கிளப்புகின்றன. மலையகம் தோறும் இவ்வாறு எழுகின்ற பல்வேறு பிரச்சினைகளும் ஒவ்வொரு உயிரையும் எப்படி வதைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை அருகிருந்து பார்த்த சாட்சியாக விபரிக்கின்றார் மாத்தளை வடிவேலன்.
இராமு தீபாவளிக்குத் தனது தோட்டத்திற்கு வருகிறான் இன்னொரு அவலச்சுவை கொண்ட கதையாகும். இராமு கொழும்பில் ஒரு சேரிப்பகுதி அறையில் தங்கியிருக்கும் இளைஞன். தோட்டத்தில் போராடியமைக்காகத் தகப்பன் பிணையின்றி ஜெயிலில் இருக்கப் பாட்டனார் பாரிசவாதத்தில் படுத்திருக்க இரு தங்கைகளும் தோட்டத்தில் பிழைப்பு நடத்த இவனும், தம்பி ராசுவும் அவ்வருடத் தேர்தலில் போட்டியிட்டவருக்குத் தோட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தந்து வெற்றியடைய வைக்கின்றனர். அவர் மந்திரி ஆனவுடன் இவர்களைக் கணக்கெடுக்காமலே போக கொழும்புக்கு வந்து சீமெந்துப்பை ஓட்டிக் கொடுத்து சீட்டுக்காசு சேர்த்து உழைக்கிறான் இராமு. ராசுவும் அவ்வாறே, கொழும்பில் தன் உழைப்பைக் கொட்டுகிறான். தீபாவளிக்குத் தாத்தாவைப் பார்க்க வருமாறு அழைக்க, அதற்கான பொருட்களை இருவரும் வாங்கிச் சேர்க்கின்றனர். தங்கைக்காக தம்பி ஓடர் கொடுத்த நகை கிடைக்கத் தாமதமாக அதைப் பெற்று வர ராசு போன ஒரு சமயத்தில் கொலன்னாவ குண்டுவெடிப்பு நிகழ்ந்து, அதன் பின்னரான காடையரின் வெறியாட்டத்தில் இராமு தமிழன் என்ற காரணத்தினால் கொல்லப்படுகின்றான். அவனது உழைப்புச் சூறையாடப்படுகிறது.
நாட்டில் தொடர்ந்த இனவாத யுத்தம் ஒரு மலையக இளைஞனின் வாழ்வை எவ்வாறு புரட்டிப் போடுகிறது என்பதை இக்கதை துலாம்பரமாக விளக்குகிறது.
இத் தொகுதியின் இறுதிக்கதை கும்பி லாம்பு. இக் கதையில் ராக்கன் தன் மனைவி அஞ்சலையை சவுதிக்கு அனுப்பி விடத் துடிக்கிறான். கசிப்புக் குடித்தே தன் வாழ்வைக் கரி ஆக்குபவன் அவன். அஞ்சலையோ தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து முன்னேற்றத் துடிப்பவள். வெளிநாடு போய் வந்து நல்ல நிலையிலுள்ள குடும்பங்களையும், வெளிநாட்டு அவலங்களால் திரும்பி வந்த பெண்களையும் ராக்கன் அறிவான். பாஸ்போட் எடுப்பதற்கான காலக் கெடுவன்று அஞ்சலை தன் விதியே என்று பாஸ்போட் எடுக்கத் தயாராகிறாள். அவ்வூருக்கு வரும் குறத்தி ஒருத்தி உன் வீட்டில் ஒரு உயிர் போகப் போகிறது என ஆரூடம் சொன்னதைக் கேட்டு மனம் குழம்பிய ராக்கன் மறு நாள் மனம் மாறி இனிமேல் தான் கசிப்புக் குடிப்பதில்லை எனச் சத்தியம் செய்கிறான். நேர்மறை விளைவைத் தருவதாக அமைகின்ற இக்கதை வாசகனுக்கு நிறைவில் ஒரு ஆறுதலைத் தருவதாய் அமைந்துள்ளது
ஓட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால் இத் தொகுதியிலுள்ள சிறுகதைகளில் பெரும்பாலானவை அவலச்சுவை தரும் கதைகளாகவே உள்ளன. அவை அவ்வாறு அமைவதை உண்மையில் தவிர்க்கவும் முடியாது.
தாட்சாயணி