எதிர்பார்த்தது போல் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சு பலவீனம் வெளிப்படையாகத் தெரிகிறது. “எப்படிப் போட்டலும் அடிக்கிறார்களே!” என்ற பரிதாபக் கதையே முதல் இரண்டு போட்டிகளிலும் நிகழ்ந்தன.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை சந்தித்த முதல் போட்டியில் எதிராணிக்கு 428 ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததோடு பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் எதிரணிக்கு 345 என்ற சவாலான வெற்றி இலக்கை நிர்ணித்தபோதும் அதனை காத்துக் கொள்ள முடியாமல் போனது.
அதாவது தென்னாபிரிக்கா விளாசிய 428 ஓட்டங்களும் உலகக் கிண்ணத்தில் அணி ஒன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக இருந்ததோடு பாகிஸ்தான் துரத்திய 345 ஓட்டங்களும் உலகக் கிண்ண வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய வெற்றி இலக்காக பதிவானது.
வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர இருவரும் இன்றி இலங்கை அணி இந்தியா புறப்பட்டபோது பந்துவீச்சு பற்றிய கவலை பெரிதாகவே இருந்தது. என்றலும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
போதாக்குறைக்கு இலங்கை ஆடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாகக் கைகொடுக்கவில்லை.
அனுபவம் பெற்ற பந்துவீச்சாளராக இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த இன்னும் நம்பிக்கை தருபவராக இல்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க இரண்டு போட்டிகளிலும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை சாய்த்தபோதும் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால்கொடுக்கத் தவறிவிட்டார்.
விசேட திறமையுடையவர் என்று இலங்கை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் அழைத்தபோது மதீஷ பதிரணவின் பந்துவீச்சு இன்னும் அவரது கட்டுபாட்டிலேயே இல்லை என்று முதல் இரண்டு போட்டிகளையும் பார்த்தால் தெரிகிறது.
இதற்கிடையே காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய மஹீஷ் தீக்ஷன எதிர்முனைகளில் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தவறிவிட்டார். இரண்டாவது சுழற்பந்து விச்சாளராக பயன்படுத்தப்பட்ட துனித் வெல்லாளகேவின் கதையும் இதுதான்.
இந்த சூழலில் மேலதிக பந்துவீச்சாளர்களான அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க போன்ற வீரர்களால் பெரிதாக சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.
குறிப்பாக 20 வயதான மதீஷ பதிரண மீதான எதிர்பார்ப்பு என்பது அவர் மீதான மேலதிக சுமையாகவே தெரிகிறது. இரண்டு போட்டிகளிலும் அவர் 90 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். பந்துவீச்சு கட்டுப்பாடாக இல்லை. விக்கெட் காப்பாளருக்குக் கூட பிடிக்க முடியாத வைட் பந்துகளை அடிக்கடி வீசி வருகிறார்.
மதீஷ பதிரண இதுவரை 12 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலேயே ஆடி இருக்கிறார். ஆனால் அவர் வைட் பந்துகளில் விட்டுக்கொடுத்த மொத்த ஓட்டங்கள் 91. ஹைதராபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மாத்திரம் இப்படி வைட் பந்துகளால் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
அதாவது கடந்த ஜூன் மாதம் தொடக்கம் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்ற வீரர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மதீஷ பதிரண தான் அதிக வைட் பந்துகளை வீசி இருக்கிறார்.
பதிரண மொத்தமாக 57 வைட்களை வீசி 91 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த நிலையில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தவர் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் முஜீபுர் ரஹ்மான் 34 ஓட்டங்களைத் தான் விட்டுக்கொடுத்திருக்கிறார்.
மதீஷ பதிரணவின் திறமை, அனுபவத்துக்கு அப்பால் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பதும் தவறானது. இதே பதிரணதான் கடந்த ஐ.பி.எல் போட்டியில் அபாரமாக பந்துவீசி அனைவரின் அவதானத்தையும் பெற்றிருந்தார். அப்போது அவர் ஆடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி, பத்திரணவை ஒருநாள் போட்டிகளில் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
எல்லாவற்றுக்கும் மேலே உலகக் கிண்ணத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிகம் கைகொடுக்கிறது. பந்து வீச்சாளர்கள் செய்யும் சிறு தவறு கூட அந்தப் பந்து பௌண்டரி செல்ல போதுமானது. 300க்கும் மேல் ஓட்டங்கள் பெற்றால் கூட வெற்றி பெற போதுமானதாக இல்லை.
இந்த சூழலில் இலங்கையின் அனுபவமற்ற பந்துவீச்சும் சேர்ந்து நிலைமையை மோசமாக்கிவிட்டது.
என்றாலும் அணி ஒன்றின் தோல்வி என்பது முழுமையாக அனைத்து துறையிலும் உள்ள குறையாலேயே நிகழக் கூடியது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம சதம் பெற்ற பின்னர் கடைசி ஓவர்களில் இலங்கைக்கு குறைந்தது இன்னும் 20, 30 ஓட்டங்களை பெற முடியுமாக இருந்திருக்கும். அது நிகழாதது அந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்துவதாக இருந்தது.
எப்படி இருந்தபோதும் இந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் அணியுடனேயே இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்றபோதும் இன்னும் ஏழு போட்டிகள் இருக்கின்றன.
அடுத்து இலங்கை அணி நாளை (ஒக்டோபர் 16) அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப்போகிறது. அவுஸ்திரேலிய அணியும் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் இரு அணிகளும் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமாக இந்தப் போட்டி மாறி இருக்கிறது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள் நிகழும் என்பது நிச்சயம். அதுவும் பந்துவீச்சில் ஏற்பட வாய்ப்பு அதிகம். மதீஷ பதிரணவுக்கு கையில் அசௌகரியம் இருப்பதாகத் தெரிகிறது. எப்படி இருந்தபோதும் அவர் இந்தப் போட்டியில் இடம்பெறுவார் என்பது சந்தேகமே. வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார அழைக்கப்பட வாய்ப்பு அதிகம்.
அதேபோன்று முதல் இரு போட்டிகளிலும் சோபிக்கத் தவறி இருக்கும் ஆரம்ப அதிரடி வீரர் குசல் ஜனித் பெரேராவின் இடமும் சந்தேகத்திற்கு உரியது. அவருக்கு பதில் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இலங்கை அணியின் துடுப்பாட்டம் பலம்பெற்றிருப்பது நல்ல செய்தி. குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, பத்தும் நிசங்க, சரித் அசலங்க ஓட்டங்களை பெற்று நம்பிக்கை தருகிறார்கள். பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாளகே போன்றவர்கள் நம்பிக்கை தருகிறார்கள். எனவே, உலகக் கிண்ணத்தில் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை அணிக்கு ஒரே ஒரு திருப்பம் மாத்திரமே தேவையாக இருக்கிறது.
எஸ்.பிர்தெளஸ்