இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிகளில் ஒன்றாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடப்பட்டிருந்தது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் 48 மாதங்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான பச்சைக்கொடி காட்டப்பட்டது.
இதன் முதலாவது மதிப்பாய்வு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இரண்டாவது கட்டத்துக்கான கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முன்னர், இலங்கை தனது உறுதிமொழிகளை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளதா, அனைத்து விடயங்களும் சரியான பாதையில் முன்னேறி வருகின்றனவா என்பதை சர்வதேச நாணய நிதியம் மதிப்பாய்வு செய்துள்ளது.
இதற்காக இலங்கை வந்திருந்த விசேட குழுவினர் மதிப்பாய்வை நடத்திவிட்டுச் சென்றுள்ள நிலையில், சர்வதே நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு இறுதித் தீர்மானத்தை எடுக்க உள்ளது. இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மாநாடும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாள்ரகள் மற்றும் முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.
இரண்டாவது கட்டத்துக்கான கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதில் சாதகமான நிலைமை இருப்பதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதியைப் பெற்றுக் கொள்வதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
உள்நாட்டு கடன் மேம்படுத்தல் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் சர்வதேச கடன்மறுசீரமைப்புக் குறித்த அடுத்த கட்டக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் குறித்த இணக்கப்பாட்டுக்கு சீனாவின் எக்சிம் வங்கி முன்வந்திருப்பதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார். இருந்தபோதும் சீனாவுடனான கடன் இணக்கப்பாடு குறித்து தமக்கு இன்னமும் எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லையென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்கும் சந்தர்ப்பத்தில், இலங்கையின் சனத்தொகையில் 12.3 மில்லியன் பேர் பொருளாதார ரீதியான ஆபத்துக்களை எதிர்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அண்மைய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்பரிமாண ஏதுநிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பத்துப் பேரில் எட்டுப் பேர் சமூக பொருளாதார ஆபத்து வலயத்தில் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் பொருளாதார ஆபத்துக்கள் அதிகமாக இருப்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய மூன்று பிரதான விடயதானங்களில் 12 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் பின்னணியில் வெளியாகியிருக்கும் அந்த ஆய்வு அறிக்கை குறித்து பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு இதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் காலத்தில் நிலைமை மோசமடைந்துவிடும் என்று அக்குழு எச்சரித்திருந்தது.
நாட்டை சரியான பாதையில் கொண்டு வரும் முயற்சிகளில் இதுபோன்ற ஆய்வு அறிக்கைகளில் உள்ள விடயங்களைத் தவிர்க்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி உதவியை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
இவ்வாறு உருவாக்கப்படும் சமூகப் பாதுகாப்பு வலைகளில் பயனாளிகள் தெரிவு வெளிப்படையானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. விசேடமாக சமுர்த்தி கொடுப்பனவுகளைப் பெறுபவர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் இருப்பவர்கள் என்பதை உலக வங்கியின் மற்றொரு ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனவேதான் சமுர்த்திப் பயனாளிகள், மாற்றுத் திறனாளிகள் என நான்கு பிரிவுகளைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கியதாக ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தது. இதன் பயனாளிகள் தெரிவிலும் ஒரு சில குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மேன்முறையீடுகளுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிந்திய ஆய்வு அறிக்கையில் உள்ள விடயங்களைக் கவனத்தில் கொண்டு நலன்புரித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வழிவகைகள் பற்றிய குழு அதிகாரிகளிடம் வலியுறுத்தியது.
இதுபோன்ற விடயங்களில் ஏற்படக் கூடிய முன்னேற்றங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான காரணிகளாக அமையும். சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வின் பிரதிபலன் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இலங்கையின் முன்னேற்றம் குறித்து உள்நாட்டு அரசியல் வாதிகள் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதில் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், சர்வதேச நாணய நிதியம் என்பது தொண்டு நிறுவனம் அல்ல, இது பல்தரப்புக் கடன்களை வழங்கும் நிதி நிறுவனமாகும். இதற்கு சில அடிப்படைகள் காணப்படுகின்றன.
கடன் பெறும் நாட்டின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஒரு முக்கியமான காரணியாகும். எனவே கடனைப் பெறும் அரசாங்கங்கள் நிதிரீதியில் ஒழுக்கம் மிக்கவையாக இருக்க வேண்டும் என்பதுடன், தேவையற்ற செலவுகளைக் குறைத்து வரி வசூலிப்புக்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
அதேநேரம், சர்வதே நாணய நிதியம் வழங்கும் இந்த நிதி ஒத்துழைப்பை பிணை எடுப்பு எனக் கூற முடியாது. தம்மால் வெறுக்கக் கூடிய தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளை அரசாங்கங்களே எடுக்க வைக்கும் நிதிநிர்வாகி என்ற வகிபாகமே இதன் மூலம் ஆற்றப்படுகிறது. எனினும், சர்வதேச நாணய நிதியம் வந்தவுடன் எமது அனைத்துப் பிரச்சினைகளும் மறைந்துவிடும் என்ற எண்ணப்பாடும் எம்மத்தியில் பொதுவாகக் காணப்படுகிறது.
ஆனால் அது அப்படி அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் வருகையுடன் கடன் வரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கு நீண்ட வரிசைகள் இல்லை. இருப்பினும், இந்த முன்னேற்றங்களால் அனைவரின் வாழ்க்கையும் மீட்கப்படவில்லை. இந்த நிலைமைகள் நாட்டில் தொடர்ந்தும் காணப்பட வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியின் அடுத்த கட்டங்களும் பெறப்பட்டாலே சாத்தியமாகும்.
இதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாத்திரமன்றி சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு முக்கியமானதாகும். அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவினர் நாட்டின் வரி வருமானம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லையென்றும், அரசாங்க நிறுவனங்களில் பதவி உயர்வு உள்ளிட்ட செயற்பாடுகளில் ஊழல் மோசடிக் காணப்படுவதுடன், திறமையைவிட சிரேஷ்டத்துவம் போன்ற விடயங்களே அதிகம் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அரசாங்கம் சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அவற்றைத் துரிதப்படுத்தி செயற்படுத்துவதில் அரசாங்க அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு இயங்குவதன் ஊடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணையையும் பெற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும்.