2024ஆம் ஆண்டை இ-மொபைலிட்டி ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்காக அனைத்துத் துறையினரின் பங்களிப்புடனும் நாட்டில் முதல் தடவையாக மின்சார போக்குவரத்து முறைகள் தொடர்பான தேசிய கண்காட்சி மற்றும் மாநாடு எதிர்வரும் நவம்பரில் நடத்தவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு உலக போக்குவரத்து தினத்துடன் இணைந்ததாக நவம்பர் 10ஆம், 11ஆம், 12 ஆம் திகதிகளில் ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தை மையமாகக் கொண்டு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்துக்கான தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டை (பசுமை நகர்வு கண்காட்சி மற்றும் மாநாடு) நடத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் எண்ணக்கருவுக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கண்காட்சி மற்றும் மாநாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (13) போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, சுகாதார அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுடன் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தக் கண்காட்சி மற்றும் மாநாட்டுக்கு பங்களிப்பு வழங்கவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.