யதார்த்தன் என்கின்ற புனைப் பெயரில் எழுதுகின்ற பிரதீப் குணரட்ணம் தாயகத்தில் சரசாலை எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இது யதார்த்தனின் முதல் நாவலாக இருந்த போதும் இவர் 2017இல் வெளிவந்த ‘மெடூஸாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். அத்தோடு தொடர்ச்சியாக மரபுரிமைகள் தொடர்பாக வெளிவருகின்ற ‘தொன்ம யாத்திரை’ இதழின் ஆசிரியர்களில் ஒருவராகவும் விளங்குகிறார்.
இந்நாவல் இந்தியாவில் வடலி வெளியீடாக ஆவணி 2022இல் வெளியிடப்பட்டிருக்கிறது. மிக அழகான, தடிமனான அட்டையுடன் (Hard back cover) 479 பக்கங்களுடன் படைக்கப்பட்டிருக்கும் இந்நாவல் குறித்துப் பேசப்பட வேண்டிய விடயங்கள் ஏராளம் உண்டு. இவ்விமர்சனம் ஒரு சிறு அறிமுக உரையாடலை மட்டுமே ஆரம்பித்து வைக்கக் கூடிய சிறு தீப்பொறியாக இருந்தாலே போதுமானது.நாவல்களும் சிறுகதைகள் போல ஒரு புனைவு இலக்கியம் தான் என்றாலும் சிறுகதைகள் போல் அல்லாது, நாவல்கள், அதன் எழுதப்படும் காலம், அதற்கான தளம், அதில் வாழும் மாந்தர்கள் என மூன்று விடயங்களிலும் சிறுகதைகளை விட ஆழமாகவும் விரிவாகவும் கவனத்தோடு, செதுக்கப்பட வேண்டும். அவ்வகையில் நகுலாத்தை தன் பங்கைக் கவனமாகக் கையாண்டிருக்கிறாள் என்றே தோன்றுகிறது.
உள்நாட்டு யுத்தம் நடை பெற்றதுக்கு அடையாளமாக இருந்த பல சான்றுகள் இல்லாமற் போயிருக்கும் தற்காலப்பகுதியில் எமது போர்க்காலத்தை அடையாளப்படுத்தும் வகையில் படைக்கப்படும் புனைவுகளில் நாவல்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிப்பவை. இவ்வகையில் இவை வரலாற்று ஆவணங்களாகப் பதிவு செய்யப்படலாமா என்கின்ற ஒரு கேள்வியும் இங்கே எழுகிறது. இதை பிறிதொரு தளத்தில் உரையாடலுக்கான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ளலாம். பேராசிரியர் அ. இராமசாமியின் கூற்றிலிருந்து ஈழத்து இலக்கியங்களில், நாவல்களை ஏனைய புனைவு இலக்கியங்கள் போலவே நான்கு பெரும் பிரிவாக்கலாம் என்பது இங்கு சரியானதென்றே கருதக்கூடியதாய் இருக்கிறது. அதன் படி, முதலாவது வகை போர்க்களத்தில் பங்கேற்று அதன் அனுபவங்களைத் தம் சாட்சியங்களாக எழுதுபவையாகவும் , இரண்டாவது வகை, போர்க்காலத்தில் பங்கேற்காமல், ஆனால் அவற்றை நேரில் பார்த்தோ அல்லது தம் அனுபவங்களின் மூலமாகவோ எழுதப்படுபவகை ஆகவும், மூன்றாவது வகையைச் சேர்ந்தவை, புலம் பெயர்ந்து வந்து தம் தாயக அனுபவங்களை, தாம் கேள்விப்படுபவற்றை தொகுப்பவையாகவும், இறுதியாக நான்காவது வகையைச் சேர்ந்தவை ஆயுதப்போர் சார்ந்து முழுவதுமாக விடுதலைப் புலிகளின் பக்கம் இருந்து எழுதப்படுபவையாகவும் இருக்கின்றன. இவ்வகையில் யதார்த்தனின் நகுலாத்தை இரண்டாவது வகையைச் சேர்ந்த நாவலாக இருக்கிறது. இக்கதையின் களம், அங்கு வாழும் மாந்தர்கள், அவர்களுடைய பண்பாடுகள், விழுமியங்கள் எனப் பலதும் கிளிநொச்சி, இயக்கச்சி என வன்னி நிலப்பரப்பின் பாடுகளை மிக ஆழமாகப் பேசிப் போகின்றன. மிகத் தொன்மையான மரபு வழி நம்பிக்கைகளை, குறிப்பாக பெண்களை முதன்மைப் படுத்தும் தாய் வழிபாடு குறித்து ஒரு வித ஓர்மத்தோடு பேசிப் போகிறது நகுலாத்தை. நகுலம் என்றால் கீரி, கீரியை கீரிப்பிள்ளை என்பார்கள். நகுலாத்தை, கீரிப்பிள்ளை என்கின்ற அம்மன், அந்தக் கிராமத்தை காப்பவள். நகுலாத்தை ஒரு கிராம தேவதை. கீரிப்பிள்ளையை ஒரு தாய் வடிவில் வழிபட்ட மரபையும் அம்மரபைப் பின்பற்றிய கிராமத்தையும் இந்நாவல் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆத்தை என்ற சொற்பதமும், குளுவன் பிடிப்பது, அதை அடக்குவது. உக்குழுவான் பிடிப்பது, கீரிப்பிள்ளை பாம்பை மயக்கி அடக்குவதற்கு போடப்படும் நாண வட்டம், அதன் பிறகு தோன்றுகின்ற ராஜமாதா போன்ற கீரி, அதன் அமைதியான தாக்குதல் போன்று இன்ன பிற சொற்பதங்களும் சம்பவங்களும் வன்னி மண்ணின் தொன்மையை, அதன் வட்டார மொழியை ஆங்காங்கே சுட்டிக்காட்டத் தவறவில்லை. நகுலாத்தையின் கோவிலை மையமாக வைத்தே அந்த ஊர் கீரிப்பிள்ளை மேடு என அழைக்கப்படுகிறது. அங்கிருக்கும் கீரிக்குளம், அதற்கான சடங்குகள், சொத்தி முனி என்கின்ற குளத்தின் காவல் தெய்வம் எனப் பலதும் இங்கே பேசப்படுகிறது.
கீரிப்பிள்ளை மேட்டின் காடுகள், வயல், வாவி, குளம், கோவில்கள். கட்டடங்கள் என அனைத்திலும் அம் மக்களின் ஊடாட்டங்களை யதார்த்தன் யதார்த்தம் சிதையாமல் மிக இயல்பாக விபரமாகத் தருகிறார். கிராமிய மணம் தவழும் கீரிப்பிள்ளை மேட்டின் இயற்கை அழகு, அதன் பண்பாட்டு அம்சங்கள், அதோடு தொடர்பான விழுமியங்கள், கலாசாரக் கூறுகள், மனித உணர்வுகள், மனித நேயம், அக் கிராம மக்களின் அன்றாட வாழ்வியல், அடிப்படைப் பொருளாதாரம், அவர்கள் சார்ந்த அரசியல் எனப் பலதும் இணைந்து இந்நாவலை செதுக்கியிருக்கின்றன.
நகுலாத்தை ஆத்தை வளவில் வீற்றிருக்கிறாள். ஆத்தை வளவு கீரிப்பிள்ளை மேட்டில் அமைந்திருக்கிறது. அங்கு பெண்கள் ஆண்களுக்கு இணையாக கிராமத்தை இயக்குகிறார்கள். அங்கு ஆண்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படுவதில்லை. முக்கியமாக நிலங்கள் ஆண்களின் பெயரில் வாங்குவதோ அல்லது பெயர் இடப்படுவதோ இல்லை. விளையும் பெருநிலமும் காடும் பெண்களுக்காகவே இருந்தன. இதன் பிரதானமான தளம் வன்னியை மையம் கொள்கிறது. கீரிப்பிள்ளை மேடும் அங்கு குடியிருந்த மாந்தர்களும் ஒருவருக்கொருவர் தமக்கேற்றவாறு தம்மை தகவமைத்துக் கொண்டிருந்தனர் என்பதோடு, நகுலாத்தையின் வளவை மையப்படுத்தி எழுதியிருக்கும் காடு குறித்த வர்ணனைகள் அபாரமாக அமைந்திருக்கின்றன.
எழுத்தாளர் நொயல் நடேசன் ‘நிமித்தம்’ என்கின்ற எஸ். இராமச்சந்திரனின் நாவல் குறித்த விமர்சனத்தில் குறிப்பிட்டது போல சம்பவங்களால் மட்டும் கட்டமைக்கப்பட்டது ஒரு நாவல் ஆகாது. இங்கும் அங்குமாக சம்பவங்களைக் கோர்த்து விட்டால் அது நாவல் எனப்படாது. அங்கு கட்டமைக்கப்படும் காத்திரமான பாத்திரங்களே ஒரு நாவலை அல்லது ஒரு இலக்கியத்தை வாழ வைக்கும் தன்மையைக் கொண்டன. ஒரு நாவலில் அல்லது சிறுகதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் வாசகர் மனங்களில் நிலைத்து நிற்க வேண்டும். அந்த வகையில் நகுலாத்தையில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஆச்சியும், தாமரையும், வெரோனிக்காவும் மனதில் ஆழமாகப் பதியக் கூடியவர்கள். தாமரை, வெரோனிகா என்ற இரு இளம் பெண்களுக்கிடையே இயல்பாக ஏற்படுகின்ற நெருக்கமான, இறுக்கமான உணர்வுகளை யதார்த்தன் மிக நுட்பமாகக் கையாண்டிருப்பதும் அவரது மொழிவளத்தை அடையாளப்படுத்துகிறது.
கீரிப்பிள்ளை மேட்டை மையமாக வைத்தே இங்கு கதை மாந்தர்கள் உருவாகுகிறார்கள். நகுலாந்தைக்கு மடை வைப்பது, சாந்தி செய்வது, அவளுக்கு முன்னாள் ஊர் மக்களுக்கு குறி சொல்வது, கிராமத்தை அன்பால் கட்டி ஆள்வது எல்லாம் ஆச்சி என்று அழைக்கப்படும் தாமரை என்கின்ற ஒரு இளம் பெண்ணின் பாட்டி தான். ஆச்சியைக் கேட்காமல் அல்லது அவளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை என்பதோடு ஆச்சியுடைய ஆழமான குல தெய்வ நம்பிக்கையை அந்த ஊர் மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆச்சி பாத்திரம் இறுதி வரை தன் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதற்குக் காரணம் ஆச்சி எப்போதும் தான் எப்படியான சூழலில் வாழ்ந்தாலும் அங்கு வாழ்வதற்கான ஒரு அர்த்தத்தை நகுலாத்தை என்கின்ற குல தெய்வதினூடு கண்டுகொள்வதுதான். வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட ஏராளமான கதாபாத்திரங்கள் ஒரே வெளியில் தோன்றி மறைகிறார்கள். சிலர் திரும்பவும் வருகிறார்கள். சின்னான், சின்ராசு, காங்கேயன், துரிதம், விந்தன், ஆச்சி, மகன் சண்முகம், மனைவி யோகம், பிள்ளைகள் தாமரை, அனு, அட்சயன், அதன் பின் மாவீரனான மரியதாஸ், அவருடைய மனைவி நிர்மலா, மகள் வெரோனிகா, மதர் ஏவா, வைகாசிக் கிழவர், கிளி அன்றி, தமயந்தி, குழந்தை கோதை, சக்கடத்தான் எனப்படும் வேட்டை நாய் என எண்ணற்ற கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தாமரை, வெரோனிகா, ஆச்சி போன்ற கதாபாத்திரங்கள் மிகக் காத்திரமாக சித்தரிக்கப்படுகின்றன. சின்ராசுவும் அவன் நாய் சக்கடமும் கூட மனதை விட்டு அகலாமல் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், யதார்த்தன் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்திருந்தால் பிரதான பாத்திரங்களின் காத்திரத்தன்மையை இன்னும் அதிகரித்திருக்கலாம் என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
ஆத்தை வளவும், கீரிப்பிள்ளை மேடும், உள்நாட்டு யுத்தத்தின் உக்கிரத்தினால் குலைக்கப்பட்டு, நகர்ந்து சுதந்திரபுரம் அடைகிறது. கட்டாய ஆட்சேர்ப்பு என்பது எவ்வாறு இக்கிராமத்தில் ஊடுருவுகிறது, உருவாகிறது என்பதும், மக்கள் அனைவரும், முக்கியமாகப் பெற்றவர்கள் கையறு நிலையில் தம் குழந்தைகளுக்காய் கண்ணீர் விடுவதும், சுய சிந்தனை அற்ற மக்களாய் அனைவரும் அல்லாடுவதும் நிகழ்கின்றது. கட்டாய ஆட் சேர்ப்பில் இணைந்தவர்கள் கூட, அதன் பின்னர் ஒரு இயக்க ரீதியாக – அமைப்பு ரீதியாக இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை குறித்து அறிய நேர்கிறது. மனித மனங்களின் உணர்வுகளை, ரசனைகளை, அகக் குமுறல்களைத் தட்டி எழுப்பி அவ்வழியே விரிந்து செல்கிறது நகுலாத்தை. பல்வேறுபட்ட கோட்பாட்டு சிந்தனைகளும், தர்க்க முரண்பாடுகளும் நாவல் எங்கும் உரையாடல்கள் மூலமாக நகர்ந்து செல்கின்றது. மக்கள் அரச ஒடுக்குமுறைக்கு மட்டுமல்ல எமக்கிடையே நிகழ்ந்த ஜனநாயக ஒடுக்கு முறைக்கெதிராகவும் போராட வேண்டிய சூழலில் எவ்வாறு அல்லற் பட்டனர் என்பது துல்லியமாகப் பேசப்படுகிறது.
நாவலாசிரியருக்கு அழகை மட்டுமல்ல அரசியலையும் தன் மையத்திலிருந்து ஆழமாக, துல்லியமாகப் பார்க்கத் தெரிந்திருக்கிறது. தன்னைச் சுற்றி நடந்தவற்றை தன் படைப்பினூடாகத் தருவது சரியாகவே கைகூடியிருக்கிறது. இந்த வகையில் ஒரு மக்கள் குழுமத்துடைய, சமூகத்தினுடைய வரலாறு என்பது இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் நகுலாத்தை ஒரு வகையில் எமது சமூக வரலாறை எழுதிப் போகிறது.
பூங்கோதை