ஒக்டோபர் முதலாம் திகதி என்றதுமே எமது கவனம் ஈர்க்கப்படுவது சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச முதியோர் தினம் ஆகியவற்றின் மீதாகும். சிறுவரும், முதியோரும் ஒரு சமூகத்தின் பிரதான இரு தூண்களாவர்.
ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் பிரகடனங்கள் அடிப்படையில் 1954 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று 1991 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச முதியோர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை, பிறகு மாணவன், பின்னர் வாலிபப் பருவம். திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் குடும்பஸ்தன் ஆகிறான். காலச்சக்கரத்தின் சுழற்சியில் இறுதியில் உடல் நலிந்து முதுமையடைகிறான். மனித வாழ்க்கை இன்பம், துன்பம், சாதனைகள், சோதனைகள் நிறைந்த மாயையாக முடிவடைகிறது.
ஒவ்வொரு மனிதரதும் வாழ்வில் சிறுபராயம் என்பது மிகவும் இனிமையான காலமாகும். முதுமைக் காலம் என்பதும் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கடந்த ஓய்வுநிலைக் காலமாகும்.
சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சமூக அச்சாணியாக இருப்பவர்கள். எனவே சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக அதிக ஆர்வம் செலுத்த வேண்டியது பெரியோரின் கடமையாகும்.
சிறுவர்கள் சகல உரிமைகளோடும் வாழ்வதற்கும் வளர்ச்சி பெறுவதற்குமான உரிமைகளைப் பெற்றுள்ளனர். சிறுவர்களினதும் முதியோர்களினதும் உரிமைகள், நலன்களில் அக்கறை கொண்டு அவர்களது பாதுகாப்பு வாழ்வியல் விடயங்களை முதன்மைப்படுத்தும் முகமாக புரிந்துணர்வையும், பொதுநிலைப்பாட்டையும் வலியுறுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
உலகமயமாக்கல் என்ற கோட்பாடுகள் எவ்வாறாக இருக்கின்ற போதிலும் நாடுகள், பிரதேசங்கள் சமூகங்கள் எதுவாக இருக்கின்ற போதிலும் மனிதவுரிமைகள் அடிப்படையில் அனைவரும் ஒரு கட்டமைப்புக்குள் அடங்குகின்றனர்.
இன்று உலக மக்கள் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் சிறுவர்களாவர். அதேபோன்று உலகளாவிய ரீதியிலான 60 கோடி முதியவர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சுமார் 22 இலட்சம் முதியோர் உள்ளனர். மொத்த சனத்தொகையில் இது 13 சதவீதமாகும். சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார சமூக நலன்கள், வசதிகளை பெறும் உரிமை, ஆரம்பக் கல்வி தொடக்கம் போதிய அறிவுக்கான வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெறும் உரிமைகள் அனைத்து சிறுவருக்கும் உரித்தானதாகும்.
பொருளாதார சுரண்டல்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உரிமை, பாலியல் வல்லுறவுகளில் இருந்து பாதுகாக்கும் உரிமை, சித்திரவதைகள் மற்றும் குரூரமாக நடத்தப்படுதல் போன்ற தண்டனைகளில் இருந்து தம்மை தவிர்த்துக் கொள்ளும் உரிமை, சட்டரீதியான, சாதாரண வழக்கு விசாரணைக்குள்ள உரிமைகள் உள்ளிட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்குமான அனைத்து உரிமைகளும் சிறுவர்களுக்கு உரித்தானவையாகும்.
சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அனைத்துவித தவறுகளையும் உள்ளடக்குகின்றது. சிறுவர் மீதான துஷ்பிரயோகம் என்ற விடயமானது இன்று ஒட்டுமொத்த உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கும் பேராபத்தாக உள்ளது. சமூக கட்டமைப்புகள் அடிப்படையில் ஆண்பிள்ளைகளானாலும், பெண்பிள்ளைகளானாலும் சரி இன்று பெற்றோர் அவர்களது பிள்ளைகள் வளர வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்வதாகவே உணர்கின்றனர்.
அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக குடும்பங்கள் ரீதியாகவும் சமூகங்கள் ரீதியாகவும் ஏற்படும் சூழ்நிலைகளால் சிறுவர்கள் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில் மிகவும் அதிகமான கொடுமையாகக் கருதப்படுவது யாதெனில், விபரமறியா சிறுவர், சிறுமியரை வயதில் மூத்தவர்கள் தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்குவதாகும். சிறுவர்களை வேலைக்கமர்த்தும் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களது உரிமைகளும் மறுக்கப்படுகின்றமை வேதனைக்குரியது மட்டுமல்லாமல், தண்டனைக்குரிய பாரிய குற்றமுமாகும்.
நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், ஆபாச மற்றும் கொடூர காட்சிகளைக் கொண்ட சினிமா, போதை மற்றும் புகைத்தல், ஏனைய சமூக காரணிகள் காரணமாக சிறுவர்கள் பல்வேறு பாதிப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்குகின்றனர்.
தாய், தந்தையர் வெளிநாடுகளில் வேலை செய்தால் அல்லது சிறைவாசம் அனுபவித்தால் அல்லது பெற்றோர் விவாகரத்து பெற்றால் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. பலவிதமான ஆபத்துகள் நிறைந்த இடங்களில் சிறுவரின் பாதுகாப்பு உத்தரவாதமில்லாமல் போகின்றது. பொலிசார், நீதிமன்றம் சார்ந்த அமைப்புகள், சிறுவர் நலன்கள் தொடர்பான பாதுகாப்பு அதிகாரசபை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் எவ்வளவுதான் சட்டதிட்டங்களை, சுற்றுநிருபங்களை, அறிவிப்புகளை பகிரங்கப்படுத்துகின்ற போதிலும் தெருவோரங்களில் பிச்சையெடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சிறுவர்களை பார்க்கும் போது வேதனை வருகின்றது.
சிறுவர்கள் உடல்ரீதியாக, பாலியல் ரீதியாக, உளரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை முழுமையாக தடுப்பதற்காக ஐ.நா. சிறுவர் உரிமை சாசனத்தின் புதிய வழிகாட்டல்கள் அடிப்படையில் சிறுவர் மீதான வன்முறைகளுக்கு எதிரான தண்டனைச்சட்டக் கோவையை பலப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தை வலியுறுத்த வேண்டும்.
சிறுவர்களால் எப்போதும் தங்களை வெளிப்படுத்த முடிவதில்லை. நலிவுற்றவர்களாக மற்றும் தீங்கு விளைவிக்கப்படும் அல்லது சுரண்டப்படும் அபாயத்தில் உள்ளவர்களை மீட்க வேண்டும். கட்டாய வேலைக்கமர்த்தல், உடல், பாலியல் மற்றும் உள உணர்ச்சிரீதியான பாதிப்புகளுக்கு எதிராக அதிகார பதவிகளில் இருப்பவர்கள், பெற்றோர், ஆசிரியர், மதத்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ஊடகவியலாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சிறுவர்கள் மட்டுமல்ல முதியோர்கள் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான அமைச்சுக்கள் அரச திணைக்களங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேச செயலகப் பிரிவுகள், கிராம சேவகர் வட்டாரம் வரை விழிப்புணர்வு மாதத்தை திட்டமிட்டு, நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
முதியோரின் பாதுகாப்பு, உணவு உறைவிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சமூகம் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பளித்தல், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை முதியோர் அனுபவிக்க வழிவகை செய்தல் போன்ற முதியோர் நலன்கள் தொடர்பான விடயங்களிலும் கவனம் செலுத்துதல் அவசியம்.
தெய்வானை சிவலிங்கம் JP (மனிதவுரிமை ஆர்வலர்)