உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, சஹ்ரான் தலைமையில் இயங்கிய பயங்கரவாதக் குழுவொன்று மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவைச் சேர்ந்த சனல்-4 தொலைக்காட்சி அண்மையில் வெளியிட்டிருந்த ஆவணப்படமானது இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் விடயத்தில் தேவையற்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் விதைத்திருந்தது.
இது விடயத்தில் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வந்த நிலையில், சர்வதேச விசாரணைக்கான எவ்வித தேவையும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் வெளிநபர்கள் எவரும் தொடர்புபடவில்லையென ஐக்கிய அமெரிக்காவின் உளவுப் பிரிவான எஃப்.பி.ஐ அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
அது மாத்திரமன்றி அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதுகுறித்து விசாரணைகளை நடத்தியுள்ள நிலையில், மீண்டும் சர்வதேச விசாரணைக்கான தேவை இல்லையென்பதை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜேர்மனிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,DeutscheWelle ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் வழங்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றியும் அதன் விசாரணைகள் பற்றியும் கேள்வி எழுப்பியமை தொடர்பில் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், ‘சர்வதேச விசாரணைகள் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது’ எனக் கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை விடுத்து, சனல்-4 தொலைக்காட்சி முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மேலைத்தேய நாடுகள் ஏன் தூக்கிப்பிடிக்கின்றன? என்ற கேள்வியையும் ஜனாதிபதி அப்பேட்டியின் போது முன்வைத்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து விசாரிப்பதற்கு குழுவொன்றைத் தான் நியமித்திருப்பதாகவும், இது விடயத்தில் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய தீர்மானங்களைப் பாராளுமன்றமே எடுக்கும் என்றும், சர்வதேச ரீதியிலான விசாரணைகளுக்கு இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
‘மேற்கத்தேய ஊடகங்கள் எங்களைத் தவறானவர்கள் எனச் சித்திரிக்கும் நிலைமையொன்று உள்ளது. எமது உள்நாட்டுப் பணியாளர்களைப் பயன்படுத்தி எமது வழியிலான விசாரணைகளை மேற்கொள்வோம். எந்தவொரு பிரச்சினையிலும் எங்களிடம் சர்வதேச விசாரணைகள் இல்லை. பிரித்தானியா சர்வதேச விசாரணையைப் பெறவில்லை. ஜேர்மன் அதனைப் பெறவில்லை. நீங்கள் மேற்கொண்ட சர்வதேச விசாரணைகள் என்ன? இங்கிலாந்து சென்ற விசாரணைகள் எவை? ஏன் இந்த ஏழை இலங்கை ஆசியர்கள் மாத்திரம் செல்ல வேண்டும்? நாம் என்ன இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கின்றீர்களா?’ என ஜனாதிபதி அப்பேட்டியின் போது கேள்வியெழுப்பியிருந்தார்.
உண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து புதிய விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளது. இருந்தபோதும், இவ்விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசம் மீண்டும் இலங்கை விடயத்தை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதையே ஜனாதிபதி தனது இந்த செவ்வியில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மீண்டும் பேசப்பட்டுவரும் நிலையில், இலங்கையின் நிலைப்பாடு ஜனாதிபதியினால் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த அறிக்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பிழையாகச் செயற்பட்டுள்ளது என ஜனாதிபதி தனது செவ்வியில் கூறியுள்ளார்.
தனது காலத்தில் மனித உரிமை பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லையெனச் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு சட்டங்களுக்கு அமையப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி நீதிமன்றங்களுக்கு அறிக்கையிடுவார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். தற்போது கட்சிகளைப் போன்றே மேற்கத்தேய நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். செனட் சபை உறுப்பினர்களுக்கும் தலையீடு செய்ய முடியும். உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான சட்டத்தை வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
சில மேற்கத்தேய நாடுகள் தமது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், தமக்கான நிகழ்ச்சி நிரல்களை முன்கொண்டு செல்லும் வகையிலும் ஆசிய நாடுகளை நோக்கும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்கின்றன என்ற விடயம் ஜனாதிபதியினால் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மேற்குலகின் சில நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாடுகளைத் தொடர்ந்தும் தமது பிடிக்குள் வைத்திருப்பதற்கு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முனைப்புக் காட்டுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடாகவே ஜனாதிபதியுடனான இந்த நேர்காணலைப் பார்க்க முடியும்.
இருந்தபோதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மீண்டும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருப்பதால் இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என்பதையும் மறுத்துவிட முடியாது. பக்கச்சார்பற்ற உள்ளக விசாரணைகளை நடத்தி சனல்-4 தொலைக்காட்சி முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு மேற்கொள்வதன் ஊடாக உள்ளகப் பொறிமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அது மாத்திரமன்றி வெளிநாடுகளின் அவசியமற்ற தலையீடுகளையும் தடுக்க முடியும். இல்லாவிடின் இதுபோன்ற விடயங்களை மேலைத்தேய நாடுகள் தங்களது நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியவாறு இலங்கையின் தேசிய விடயங்களில் மூக்கை நுழைப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். அரசியல்வாதிகள் மாத்திரமன்றி அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பற்ற முறையில் நடந்து கொள்வது முக்கியமாகும்.
இது இவ்விதமிருக்க, அரசியல் ரீதியில் மக்களிடம் செல்ல முடியாதுள்ள அரசியல்வாதிகள் இவ்விடயத்தை மீண்டும் கையில் எடுத்து அரசியல் செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை காலமும் மௌனம் காத்துவந்த அவர்கள் அரசியல் துரும்புச்சீட்டொன்று தமக்குக் கிடைத்திருப்பது போன்று சொந்த அரசியல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது நிச்சயம் அடுத்த தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தலே அன்றி வேறு எதுவும் இல்லை என்பதை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். இதற்கிடையில் முல்லைத்தீவு நீதிபதி விவகாரமும் அரசியலில் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியாகவும் சிலர் இதனை விமர்சிக்கின்றனர். இதன் உண்மைத் தன்மையைப் பகிரங்கப்படுத்த வேண்டிய கடப்பாடும் அரசாங்கத்துக்குக் காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கையானது அணிசேராத வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் அதன் பூகோள அமைவிடம் மற்றும் பூகோள ரீதியான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக ஏதாவது ஒரு விடயத்தைக் கையில் எடுத்து இலங்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பல நாடுகள் ஆர்வமாக இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த குற்றச்சாட்டு விவகாரத்தையும் இதன் ஒரு அங்கமாகப் பார்க்க முடியும். மேலைத்தேய நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது இரட்டை நிலைப்பாடுகளை எடுக்காது, அந்தந்த நாடுகளுக்குக் காணப்படும் இறைமைகள் மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்து சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்க வேண்டும்.