முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜாவின் பதவி விலகலின் பின்னணியில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்ச்சி இருக்கலாம். இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமென, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, “முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் சி.ஐ.டி. ஊடாக தனியான விசாரணையை முன்னெடுத்து வருகின்றது.
தனக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால், பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த நீதவான் இது தொடர்பாக முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
அவர் அவ்வாறு எந்தவொரு முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லையென்பதுடன், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் தெரியப்படுத்தவில்லை.
எனவே, இங்கு பாரிய சூழ்ச்சி இருப்பது தெளிவாகின்றது. அவர் வெளிநாடு செல்வதற்கு முன்னர் மேற்குல நாடுகளின் இராஜதந்திரிகள் இருவரை சந்தித்துள்ளாரெனக் கூறப்படுகின்றது.
எனவே, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது தான் செய்த குற்றங்களிலிருந்து விடுபடுவதற்காக நாட்டை விட்டு வௌியேறினாரா? என்பது தொடர்பாக ஆராய வேண்டும் என்றார்.