தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே பணிப்புறக்கணிப்புகள் தொடர்பாக அமைச்சு மட்டத்தில் பாரபட்சமற்ற விரைவு விசாரணையை நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பணிப்பகிஷ்கரிப்பாளர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பணித்துள்ளார்.
கடந்த மாதத்தில் ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய சுமார் 84 பணிப்பகிஷ்கரிப்பாளர்களினால் தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தினால் ஒரு இளம் மாணவர் உயிரிழந்தார்,
இது தொடர்பான விசாரணைகள் ரயில்வே திணைக்கள மட்டத்திலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினாலும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்திய அரசாங்கம், விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ரயில்வே திணைக்களத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தது.
அத்தியாவசிய சேவைப் பிரகடன விதிமுறைகள் நடைமுறையில் இருந்த போதே, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மற்றும் ரயில்வே துணைக் கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கிடையே சிகரெட் புகைத்தல் தகராறு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு திடீரென ஆரம்பிக்கப்பட்ட ரயில் வேலைநிறுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. இதனால் தினமும் ரயில் சேவையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான அலுவலக ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்த விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்திய அமைச்சர், அமைச்சு மட்டத்தில் விரைவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார்.