Home » இலங்கை தமிழ்ச்சமூகம் வடக்கு, கிழக்குக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டது அல்ல!

இலங்கை தமிழ்ச்சமூகம் வடக்கு, கிழக்குக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டது அல்ல!

இன்னல்களையும் போராட்டங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உலகம் புரிந்துகொள்ள வேண்டும்' என்கிறார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

by Damith Pushpika
October 8, 2023 6:14 am 0 comment

‘இலங்கைத் தமிழ்ச் சமூகம் வடக்கு, கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக இந்திய வம்சாவளி சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்’ என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

‘தமிழர்களின் உரிமைகள், குறைகள் பற்றி பேசும் போது வடக்கு, கிழக்கு தொடர்பான பிரச்சினைகளில் மாத்திரம் கவனம் செலுத்தும் போக்கு காணப்படுகின்றது. இன்னல்களையும் போராட்டங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உலகம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் குறிப்பிட்டார். பெருந்தோட்ட சமூகத்தை மேம்படுத்துவதற்குக் காணப்படும் சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் உறுதியாகச் செயற்பட்டு வருவதாக அவர் கூறினார். எமது நிறுவனத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜீவன் தொண்டமான் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

கே: பெருந்தோட்ட அரசியல் தலைவர்கள் பெருந்தோட்ட சமூகத்திற்கு சேவைகள் செய்யவில்லை என்ற பொதுவான விமர்சனம் உள்ளது. இதுபற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: மிகவும் ஏழ்மையான மக்களை உள்ளடக்கிய பெருந்தோட்ட சமூகம் உண்மையில் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், இந்த விடயத்தில் அவர்கள் தனித்துவமானவர்கள் அல்ல. இலங்கை முழுவதும் பல்வேறு சமூகங்கள் வறுமையில் வாடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்து, இந்த சமூகங்களுக்கு ஆதரவளிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. எவ்வாறாயினும், பெருந்தோட்ட சமூகத்துக்கு குடியுரிமை வழங்கப்பட்ட போதிலும், பெருந்தோட்டக் கம்பனிகளின் சொத்துக்கள் என்ற வரலாற்று அந்தஸ்து காரணமாக சில வரையறைகளை அம்மக்கள் தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது தொழிலாளர்களின் நலனை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுப்பதால் இந்தச் சூழ்நிலை உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில் அரசு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தலையிட முடியும். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏறத்தாழ 65,000 வீடுகள் கட்டப்பட்டிருப்பதுடன், இந்தச் சமூகம் குறித்துக் கவனிப்பதற்காகத் தனியான அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல் பிரதிநிதிகள் பெருந்தோட்ட சமூகத்திற்கு போதியவற்றை செய்யவில்லை என்ற கருத்து தவறானது. நான்கு தலைமுறைகளாக எமது கட்சிக்கு வாக்களித்த தோட்டத் தொழிலாளர்களின் நீடித்த விசுவாசத்தை நான் கண்டுவருகின்றேன். அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளுக்கான அங்கீகாரமாகவே இந்த விசுவாசத்தை நான் பார்க்கின்றேன். பல தசாப்தங்களாக குடியுரிமை இல்லாத வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள், 2003 ஆம் ஆண்டிலேயே குடியுரிமையைப் பெற்றதால், நாங்கள் இந்த ஓட்டப் பந்தயத்தை தாமதாகத் தொடங்கியுள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகும். அத்துடன் சிக்கலான தன்மையை ஒரே இரவில் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

கே: நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் உங்கள் நிகழ்ச்சி நிரல்கள் கவனம் செலுத்துகின்றன. உங்கள் சமூகம் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை விரிவாகக் கூற முடியுமா?

பதில்: எங்கள் சமூகத்தில் பல குறைபாடுகள் நிலவுகின்றன. சுரண்டல், பாகுபாடு, குடிப்பழக்கம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், அவை அனைத்தும் பிரதான பிரச்சினைகள் என்று வரும்போது பின்னோக்கிச் சென்று விடுகின்றன. இந்த நாட்டில் நாம் யார் என்ற கேள்வியே இந்தப் பிரச்சினையின் சுருக்கமாகும். எமது சமூகம் தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ளது. பரந்த வனப்பகுதிகளை தேயிலைத் தோட்டங்களாக மாற்றியதில் நாங்கள் முக்கிய பங்காற்றினோம், நாட்டின் வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தோம். இருப்பினும், ஒரு காலத்தில் இவ்வளவு பங்களிப்பை வழங்கிய அதே சமூகம் இன்று தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறது. இந்த முரண்பாடே நமது குறைகளின் மையக்கரு.

இந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் என்ற வகையில், சில சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் தடைகளை எதிர்கொள்கிறோம். பெருந்தோட்ட சமூகம் பன்னிரண்டு மாவட்டங்களில் வசித்து வருகிறது. இது ஏறத்தாழ 113 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இந்தச் சமூகம் பரந்து விரிந்திருப்பதால் அந்தப் பகுதிகளில் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவது சவாலாக இருக்கின்றது. இது எமது மக்களின் வளர்ச்சிக்கு முக்கிய இடையூறாகவும் அமைந்துள்ளது. அமைச்சின் எனது பங்களிப்பை எடுத்துக் கொண்டால் 1.5 மில்லியன் மக்களுக்கு சேவை செய்யும் 12 மாவட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக 3 பில்லியன் ரூபா நிதியை நாங்கள் பெறுகிறோம். இந்த ஒதுக்கீடு விரிவான வளர்ச்சியை அடைவதில் குறிப்பிடத்தக்க வரையறைகளைக் கொண்டுள்ளது.

எங்கள் சமூகத்தின் முக்கிய குறை என்னவென்றால் இந்த பன்முகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு கூட்டு மற்றும் நீடித்த முயற்சி தேவைப்படுகிறது. நாம் முன்னேறிச் செல்லும் அதேவேளையில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழித்தல், குழந்தைத் தொழிலாளர்களைக் குறைத்தல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். முழுமையான அபிவிருத்தியின் மூலம் தோட்ட சமூகத்தின் வாழ்க்கை நிலைமையை உயர்த்துவதே எமது இறுதி இலக்காகும்.

கே: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். இந்த முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆற்றிய பங்களிப்பு என்ன?

பதில்: இனப்பிரச்சினையென்பது அரசியல் எல்லைகளைக் கடந்து பலதரப்பட்ட சமூகங்களை உள்ளடக்கியது. தமிழ் அரசியல் கட்சிகளுடனான ஜனாதிபதியின் உரையாடல் ஒரு சாதகமான நடவடிக்கையாக இருந்தாலும், தமிழ் அரசியல் கட்சிகளால் மட்டும் இதற்குத் தீர்வு காண முடியாது என்பதை அங்கீகரிப்பது மிகவும் அவசியமாகும். இந்திய வம்சாவளி தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் தீவிரமாக செயற்படுகின்ற அர்ப்பணிப்புள்ள பிரதிநிதிகள் உள்ளனர். தமிழ் அரசியல் கட்சிகள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்துப் பாராளுமன்றக் குழுக்களையும் உள்ளடக்கும் வகையில் பேச்சுவார்த்தையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். நமது நாட்டின் சவால்களின் சிக்கலான தன்மைக்கு அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டு மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறை தேவைப்படுகிறது.

கே: பொதுச்சேவைகள் இன்டர்நஷனல் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் நீங்கள் நடத்தவிருக்கும் சந்திப்புக்களில் முன்வைக்கவுள்ள நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள் யாவை?

பதில்: இலங்கையில் உள்ள இந்திய வம்சமாவளி சமூகத்தினர் எதிர்கொள்ளும் இருப்பு மற்றும் தனித்துவமான சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே முதன்மையான நோக்கமாகும். இந்திய வம்சாவளி சமூகத்துக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகள் மற்றும் அவர்கள் நடத்திய போராட்டங்கள் பதிவு செய்யப்பட வேண்டியவையாகும். இந்தச் சமூகம் பல்வேறு வகையான அடக்குமுறைகளை அனுபவித்ததுடன், கடந்த காலத்தில் இடம்பெற்ற கிளர்ச்சிகள் மற்றும் கலவரங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகம் தனித்துவமான சவால்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் குரல்களும் செவிமடுக்கப்பட வேண்டும். எனது நோக்கம் பழி சுமத்துவது அல்ல, சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியை பெறுவதாகும். அதேசமயம் இந்தச் சமூகத்தை இலங்கைக்குள் ஒருங்கிணைக்க வேண்டும்.

கே: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நிவர்த்தி செய்வதில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நிவர்த்தி செய்வதில் சர்வதேச சமூகம், குறிப்பாக ஜெனீவா போன்ற மன்றங்களில் ஆற்றிய பங்கை மிகைப்படுத்திக் கூற முடியாது. இலங்கைத் தமிழ்ச் சமூகம் வடக்கு, கிழக்கில் மட்டுப்படுத்தப்படவில்லை மாறாக இந்திய வம்சாவளி சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைகள், குறைகள் பற்றி பேசும் போது வடக்கு, கிழக்கு தொடர்பான பிரச்சினைகளில் மாத்திரம் கவனம் செலுத்தும் போக்கு காணப்படுகின்றது. உலக அரங்கில் அடிக்கடி கவனிக்கப்படாமல் போகும் இன்னல்களையும் போராட்டங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி சமூகம் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கே: நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துள்ளபோதும், பெருந்தோட்ட மக்கள் இன்னும் குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய லயன் அறைகளிலேயே வசிக்கின்றனர். சிறந்த வீடுகள் மற்றும் இதர வசதிகளை வழங்க உங்கள் திட்டங்கள் என்ன?

பதில்: தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு நிலைமையை நிவர்த்தி செய்வது முன்னுரிமை அவசியம். எமது அமைச்சுக்கு 3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான முழுமையான வீடுகளையும் கட்டிக்கொடுப்பதற்குப் போதுமான ஒதுக்கீடு எனது அமைச்சுக்கு வழங்கப்படவில்லை. இந்தப் பிரச்சினையை விரிவாகக் கையாள்வதற்காக காணி மற்றும் வீடுகள், பெண்கள் மற்றும் குழந்தைகள், பாலின சமத்துவமின்மை, பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற குறிப்பிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தும் ஆறு குழுக்களை அமைச்சில் நான் நிறுவியுள்ளேன். எதிர்கால முயற்சிகளுக்கு வழிகாட்டும் மலையக சாசனம் எனப்படும் உருமாற்றத் தீர்வை உருவாக்குவதே அவர்களின் பணியாகும். வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படை விடயம் தோட்ட சமூகத்திற்கு காணி உரிமை உரிமைகளை வழங்குவதாகும்.

கே: எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதற்கு ஆதரவளிக்கும் என்ற பொதுவான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு நீங்கள் எவ்வாறு பதில் வழங்க விரும்புகின்றீர்கள்?

பதில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களில் தெளிவு தேவை. நாம் எந்த அரசியல் சின்னத்தில் போட்டியிட்டாலும், தேர்தலில் வெற்றி பெறுவதில் இ.தொ.கா தனித்துவம் வாய்ந்தது. எங்களுடைய கட்சி மற்றும் தோட்ட சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் அதன் அர்ப்பணிப்பை மக்கள் நம்புவதே இதற்குக் காரணம்.

இ.தொ.காவிற்கு எதிரான விமர்சனங்கள் நியாயமற்ற முறையில் சுமத்தப்படக் கூடாது. சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதத்துடன் தொடர்புகளை மாற்றிக் கொள்கிறார்கள். இது அரசியல் புத்திசாலித்தனமாகப் பார்க்கப்படுகிறது. மாறாக, இ.தொ.கா கூட்டணியை ஏற்படுத்தும்போது நாம் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்படுகிறோம். தோட்ட சமூகத்தின் பாதிப்பை உணர்ந்து அமைச்சரவையில் மலையகப் பிரதிநிதித்துவத்தை இ.தொ.கா தொடர்ச்சியாக பேணி வருகிறது.

கே: இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்? ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் நாடு முன்னோக்கி செல்லும் வழி என்ன என்று நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அனைத்து பங்குதாரர்களும் தமக்கான பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும். பொருளாதார மீட்சிக்கான பாதையில் இலங்கையைக் கொண்டுசெல்வதில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன்.

இருப்பினும், பொருளாதார முன்னேற்றம் சமூக முன்னேற்றத்தால் நிரப்பப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது சமூக முன்னேற்றத்தின் இன்றியமையாத அங்கமாகும். அதிகாரப் பகிர்வு என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அதிகாரப் பிரிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த வாய்ப்புகளை வளர்க்கும் வகையில், உள்நாட்டு அதிகாரப் பகிர்வு தீர்வு உருவாக்கப்பட வேண்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division