Home » வில்லியம்  தோமஸ் கிரீன் மார்ட்டன்

வில்லியம்  தோமஸ் கிரீன் மார்ட்டன்

by Damith Pushpika
October 8, 2023 6:43 am 0 comment

இன்று அறுவைச் சிகிச்சை முதல் பல்வேறு சிகிச்சைகளுக்கு மயக்கமருந்து செலுத்தப்படுகிறது. மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் அமெரிக்கரான வில்லியம் தோமஸ் கிரீன் மார்ட்டன். இவர் தனது உயிரை பணயம் வைத்துதான் மயக்கமருந்து கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் சார்ல்டன் நகரில் 1819-ஆம் ஆண்டு வில்லியம் தோமஸ் ​​​ கிரீன் மார்ட்டன் பிறந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் பால்டிமோர் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். பயிற்சி காலம் முடிந்த பின்னர் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவராக வர முயற்சித்தார். ஆனால் படிப்பை முடிக்க போதுமான பணம் அவரிடம் இல்லாததால் படிப்பு தடைபடவே செய்தது. எனவே அதிகமாக பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

வலியில்லாமல் பற்களைப் பிடுங்கிட புதிய முறையைக் கண்டுபிடித்து அதன் மூலமாக பணத்தை சேர்த்திடலாம் என கனவு கண்டார். அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள டாக்டரிடம் பயிற்சி பெற முடிவு செய்தார். டாக்டர் ஜாக்சன் என்பவர் அவருக்கு பயிற்சி அளித்தார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது பல்லுடன் தொடர்பு கொண்டுள்ள நரம்பை துண்டிக்கும் நேரத்தில் தாங்க முடியாத வலி ஏற்படுவதை விளக்கத்துடன் கூறினார் மார்ட்டன்.

அதைக்கேட்ட டாக்டர் ஜாக்சன் ஈதர் எதில்ஆக்சைட் பல் அருகே தடவிவிட்டால் அந்தப்பகுதியானது மரத்துப்போகும் என்று கூறினார். மறுநாளே சிறிய புட்டி ஈதரையும் உடனே அனுப்பிவைத்தார்.

அந்த நேரத்தில் பல் வலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மார்ட்டனிடம் வந்தாள். அவரோ அப்பெண்ணின் சொத்தைப் பல்லின்மீது சிறிதளவு ஈதரை தடவினார். பின்னர் பல்லைக்குடைந்து எடுத்தார். அந்தப்பெண்ணோ சிறிதும் அழவில்லை, தனக்கு வலி இருப்பதாகவும் கூறவில்லை. ஈதரைப் பயன் படுத்தியே சொத்தைப் பல்லை முழுமையாக எடுத்துவிட்ட மார்டன் அந்த இடத்தின் பள்ளத்தையும் நிரப்பிவிட்டார்.

அந்த சிகிச்சை மூலமாக ஈதர் சிறந்த வலி நிவாரணி என்பதை புரிந்து கொண்டார். அந்த ஈதரின் உதவியால் உடல் முழுக்க உணர்ச்சியை இழக்கச்செய்ய முடிந்தால் சிறிதும் வலியில்லாமல் அறுவை சிகிச்சையை செய்திடலாம் என சிந்தித்தார்.

சிறுபிராணிகளைப் பிடித்து ஈதரின் ஆவியை சுவாசிக்கச் செய்தார். அதன் விளைவாக அவைகள் மடிந்தன. மனிதர்களுக்கும் இந்த நிலையே ஏற்படும் என்பதை உணர்ந்து அச்சமடைந்தார்.

பல் மருத்துவ பணிகளையும் கவனித்துக்கொண்டு தனது இலட்சிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

முதலில் செல்ல பிராணிகளை முகரச் செய்திட அவர் குளோரிக் ஈதரை பயன் படுத்தினார். ஆனால் இப்போதோ தனது செல்ல நாயை முகர வைக்க சல்பூரிக் ஈதர் பயன்படுத்தியதை அடையாளம் கண்டுகொண்டார். இந்த இரண்டு ஈதர்களின் வேறுபாட்டையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்.

தன் உதவியாளர் ஒருவரை அழைத்து சல்பூரிக் ஈதரை வாங்கி வரச் செய்தார். அதைக்கொண்டு ஒரு சிறுவனை முகரச் செய்தார். அந்த சிறுவனுக்கோ மயக்கமே வரவில்லை. இதனால் மறுபடியும் குழப்பமடைந்த மார்ட்டன். தானே கடைக்குச் சென்று நம்பிக்கைக்கு உரியவரிடம் உயர்ந்த சல்பூரிக் ஈதரை வாங்கினார். தனது அறைக்குச் சென்று தனது உயிரையே பணயம் வைத்து அந்த ஈதரை முகர்ந்து மயங்கிவிழுந்தார். பின்னர் மயக்கம் தெளிந்து தான் கண்டுபிடித்த வலிநிவாரணியைப் பயன்படுத்தி ஒரு நோயாளியின் பல்லையும் பிடுங்கினார். தனது சோதனையில் வெற்றி கிடைத்ததும் அறுவை மருத்துவத்தையும் எளிதாக வலியில்லாமல் செய்திடலாமே என்ற எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பித்தார்.

பொது மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஜான் சாலின்ஸ்வார் என்பவரிடம் சென்று தனது எண்ணத்தை தெரியப்படுத்தினார். முதலில் ஏளனம் செய்த அவர் பின்னர் நம்பத் தொடங்கினார். அங்கு கில்பர்ட் என்பவருக்கு அறுவை மருத்துவம் செய்யும் நாளில் மார்ட்டன் வரவழைக்கப்பட்டார். தனது சிகிச்சையைத் தொடங்கினார்.

கில்பர்ட் ஈதரின் ஆவியை முகர்ந்து நினைவிழந்தார். சிகிச்சை முடிந்து நினைவு திரும்பியதும் தன் உடம்பில் கீறியதை எதையும் உணரவில்லை என்று தெளிவுபடுத்தினார். இது மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு சிலர் இது மாயவித்தையோ? இல்லை ஜால வித்தையோ என மார்ட்டனை ஏளனம் செய்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் காலை வெட்டி எடுக்கும் சிகிச்சையை மயக்க மருந்து கொடுத்து, வலியில்லாமல் நடத்தி வெற்றி கண்டார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division