Home » விண்பாறை பென்னுவில் இருந்து பெறப்பட்ட மாதிரி மண் பிரபஞ்ச ரகசியங்களை துலக்குமா?

விண்பாறை பென்னுவில் இருந்து பெறப்பட்ட மாதிரி மண் பிரபஞ்ச ரகசியங்களை துலக்குமா?

by Damith Pushpika
October 1, 2023 6:20 am 0 comment
விண்பாறை பென்னு அரிசோனாவில் விண்பாறை தாக்கிய இடம்

நாம் வசிக்கும் சூரிய மண்டலம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கக் கூடும் எனக் கணக்கிடப்படுகிறது. இதே காலப் பகுதியிலேயே பூமியும் உருவாகியிருக்க வேண்டும். சூரிய மண்டலமும் அதன் கிரகங்களும் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன. தூசு மேகங்களும், அமில வாயுக்களும் கலந்ததால் ஏற்பட்ட பிரமாண்ட சுழற்சி வேகத்தின் விளைவாக சூரியனும் கோள்களும் உருவாகியிருக்க வேண்டும் என்பது பொதுவான விண் அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கோட்பாடு.

பிரமாண்டமான ஒரு நட்சத்திர வெடிப்பு நிகழ்ந்ததால் கிரகங்கள் தோன்றின என்றொரு கோட்பாடும் உள்ளது. பிரபஞ்சம் எவ்வாறு ஆரம்பமானது என்பதற்கு பெரு வெடிப்பு கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.

சூரியனும் கிரகங்களும் தோன்றிய பின்னும் எச்சங்களான கோடிக்கணக்கான, பெரிதும் சிறிதுமான கற்பாறைகள் விண்ணில் சுற்றித் திரிகின்றன. கடைக்கோடி கிரகமான பூளுட்டோவுக்கு அப்பால் ஊர்ட்ஸ் மேகம் என்றொரு விண்பாறை மேகம் காணப்படுகிறது. இது வால்நட்சத்திர மேகம் எனவும் அழைக்கப்படுகிறது. வியாழன் கிரகத்தின் பிரமாண்டமான ஈர்ப்பு விசையால் ஊர்ட்ஸ் மேகத்தில் இருக்கும் பனிப் பாறைகள் உள்ளீர்க்கப்பட்டு அவை வால் நட்சத்திரங்களாக சூரியனைச் சுற்றி வருவதை விண் அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இதேபோல வியாழனுக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் இடையே உடைந்த கிரகமொன்றின் பாகங்கள் சுற்றி வருகின்றன. இதை விண்பாறை வளையம் என அழைக்கிறார்கள். இது தவிர, ஏராளமான கற்கள், பாறைகள் – சிறிதும் பெரிதுமாக சூரிய மண்டலத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி வருகின்றன. 2022 நிலவரப்படி 614,690 சிறு விண் பாறைகள் கணக்கெடுக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ஐந்து இலட்சம் விண் பாறைகளுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இவற்றில் ஏழாயிரம் விண் கற்கள்/பாறைகள் பூமிக்கு சமீபமானவை என அறியப்படுகிறது. இந்த பூமிக்கு சமீபமான விண்பாறைகளே பூமியைத் தாக்கி சேதம் ஏற்படுத்தக் கூடியவை. இவைபோக, எண்ணற்ற சிறு விண்கற்கள் தினமும் பூமியின் வளிமண்டத்தினுள் நுழைந்து எரிந்து சாம்பலாகின்றன.

உலகில் 80 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினம் தோன்றியதாக அறியப்படுகிறது. அதன் பின்னர் 12 மிகப் பெரிய அழிவுகள் பூமியில் இடம் பெற்றிருப்பதாகவும் அவற்றில் அதிகமானவை விண்பாறைகள் பூமியைத் தாக்கியதால்தான் நிகழ்ந்துள்ளன எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான ஒரு சம்பவத்திலேயே உலகில் வாழ்ந்து வந்த டைனோசர்கள் அழிந்தன என்ற ஒரு கோட்பாடு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டு உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அரிசோனாவில் காணப்படும் ஒரு பெரும் பள்ளம் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்த விண் பாறையால் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு கி.மீ. குறுக்களவு கொண்ட ‘இகார்ஸ்’ என்ற விண்பாறை 1968ஆம் ஆண்டு பூமியில் இருந்து 40 லட்சம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து சென்றது. இது பூமியில் விழுந்திருந்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கும். 1972ஆம் ஆண்டு ஆயிரம் தொன் எடை கொண்ட ஒரு விண்பாறை பூமியின் வெளிப்புற மண்டலத்தை தொட்டுச் சென்றது. விஞ்ஞானிகள் அதை புகைப்படமாகவும் எடுத்தார்கள். 1989ஆம் ஆண்டு அரை மைல் அகலம் கொண்ட விண்பாறை பூமியைக் கடந்த சென்றது. இதில் என்ன விசேஷம் என்றால், அரை மணித்தியாலத்துக்கு முன்னர் அது கடந்து சென்ற இடத்தில் பூமி சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்பதுதான். அருந்தப்பு என்று சொல்வார்களே அப்படித்தான் நாம் பேரழிவு ஒன்றில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கிறோம்!

அரை மைல் விட்டம் கொண்ட ஒரு விண்பாறை பூமியை படு வேகத்தில் தாக்கினால் நிலநடுக்கம், பெருந்தீ, சுனாமி போன்ற பேரழிவுகளை மனிதகுலம் சந்திக்க வேண்டியிருக்கும்! விண்பாறை வெடிப்புக்கு சமீபத்திய உதாரணமாக 1908 ஜூன் மூன்றாம் திகதி ரஷ்யாவின் துங்கஸ்கா நதியோரமாக வீழ்ந்த விண் கல்லைச் சொல்வார்கள். அது வீழ்ந்த இடத்தைச் சுற்றி 40 கி.மீ. பரப்பளவு காடுகள் தீப்பற்றி எரிந்தன. பேரிடியோசை கேட்டதுடன் எழுந்த பேரொளி பத்திரிகை வாசிக்கக் கூடிய அளவுக்கு ஐரோப்பாவில் வெளிச்சத்தைத் தந்ததாம்! அப்போஃபிஸ் 99942 என்ற விண்பாறை 370 மீட்டர் சுற்றளவு கொண்டது. 2004ஆம் ஆண்டு கண்டறியப்பட இந்தப் பாறை 2029ம் ஆண்டு பூமியைத் தாக்கும் என முதலில் கண்டறியப்பட்டாலும் பின்னர் அவ்வாறான சாத்தியம் கிடையாது என விஞ்ஞானிகள் அக்கூற்றை நிராகரித்து விட்டார்கள். எனினும் 190 தடவைகள் விண்பாறைத் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாகவே விண்ணியலாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்காவை ஒரு பத்து கி.மீ அகலம் கொண்ட விண்பாறை தாக்கியது. இதனால் ஏற்பட்ட பெரும் பள்ளத்தின் சுற்றளவு 172 கி.மீட்டர். ஆழம் 40 கி.மீ. விண்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெரும் பள்ளமாக இது அறியப்படுகிறது.

ஜெர்மனியில் ரைஸ் பள்ளம் என்ற பெருங்குழி காணப்படுகிறது. ஒரு கோடி 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் 2,625 அடி சுற்றளவு கொண்ட ஒரு விண்பாறை மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டிருக்க வேண்டும் என புவியியலாளர்கள் கருதுகின்றனர். இப்பள்ளத்தின் சுற்றளவு 26 கி.மீட்டராகும்.

இவ்வாறு பல விண்பாறை மோதல்களால் பூமியில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான, பூமிக்கு அண்மித்ததாக சுற்றிவரக் கூடிய ஒரு விண்பாறையே 101955 பென்னு என்ற விண்பாறை. 1999ஆம் ஆண்டு இது அடையாளம் காணப்பட்டது. சூரியனை ஒரு தடவை சுற்றிவர இது 437 நாட்களை எடுத்துக் கொள்கிறது. அரை மைல் அகலம் கொண்ட இவ்விண்பாறை பூமியில் இருந்து 186,000 மைல் தொலைவில் உள்ளதாவது, இந்தத் தூரத்தில் தான் இது பூமியைக் கடந்து செல்கிறது. நிலவின் சுற்று வட்டப் பாதையை விட இத் தொலைவு குறைந்தது என்பது கவனத்துக்குரியது. அதன் சுழற்சியை அவதானிக்கும் விண் அறிவியலாளர்கள் 2300ஆம் ஆண்டுகளுக்குள் இது பூமியைத் தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே கருகிறார்கள். இது தாக்குமானால் பேரழிவு நிச்சயம். இது தாக்கும் இடத்தில் 6.4 கி.மீ அகலம் கொண்ட பள்ளம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பம்பரத்தை ஒத்த உருவம் கொண்ட பென்னு, வினாடிக்கு 28 ஆயிரம் மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. எனவே விஞ்ஞானிகளின் கவனத்தை இப்பாறை ஈர்த்ததில் வியப்பிருக்க முடியாது. ஒரு விண்கலத்தை அனுப்பி அதை ஆராய்வது என்றும், விண்பாறையில் இறங்கி, மண் எடுத்து வந்த ஆராய்வது என்றும் முடிவெடுத்தது நாசா. இதன் பிரகாரம் ஓசிரிஸ் – ரெக்ஸ் என்ற பெயர் கொண்ட கலம் 2018ஆம் ஆண்டு நாசாவினால் ஏவப்பட்டது. இரண்டு வருட பயணத்தின் பின்னர் பென்னுவை அடைந்த ஓசிரிஸ்-ரெக்ஸ் கலம், அதை வலம் வந்தபடி அறிவியல் ரீதியாக ஆராயத் தொடங்கியது. பின்னர் அதில் இறங்கிய இக்கலம், விசேடமாக வடிவமைக்கப்பட்ட இயந்திர கையால் சுமார் 250 கிராம் அளவுக்கு எடைகொண்ட மண் மாதிரியை சேகரித்துக் கொண்டது. அதன் பின்னர் இரண்டு வருட பயணத்தின் பின்னர் பூமியில் இருந்து 63 ஆயிரம் மைல் தொலைவுக்கு வந்த விண்கலம், செப்டெம்பர் 24ஆம் திகதி மண்மாதிரி அடங்கிய சிறு கலத்தை பூமியை நோக்கி ஏவியது.

2004ஆம் ஆண்டு சூரிய காற்றின் சூரியத் துகள்களை கைப்பற்றி திரும்பி வந்த விண்கலம், ‘பரசூட்’ குடைவிரியாததால் பூமியில் விழுந்து சிதறியது. இம்முறை அவ்வாறு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதால் மிகக் கவனமாக இக்கலம் தரை இறக்கப்பட்டது. உட்டா மாநில பாலைவனத்தில் தரையிறங்கிய மண் மாதிரிகள் தற்போது ஆய்வுக்காக நாசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இம் மண் மாதிரிகளை ஆராய்வதன் மூலம் சூரிய குடும்ப தோற்றத்தின் இரகசியங்களை அறிய முடியும் என்பது விண் அறிவியலாளர்களின் எதிர்பார்ப்பாகும். பென்னு விண்கல் அடிப்படையில் கரிம தாதுக்களினால் ஆனது என்றும் எனவே கரிய மூலக்கூறுகள் அடங்கியதாகவும், ஹைட்ரஜனும் கார்பனும் கலந்த நீராகக் கரிமம், அமீனோ அசிட், கடல் படுக்கையில் காணப்படக் கூடிய ஹைட்ரோ வெப்ப படிமங்கள் என்பன இம் மண் மாதிரிகளில் அடங்கியிருக்கக்கூடும் என்பதும் விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

இவை அனைத்தும் ஒரு கிரகத்தின் உயிரின தோற்றத்துக்கு இன்றியமையாதவை. விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்புகள் இம் மண் மாதிரிகளில் அடங்கியிருக்குமானால், பூமியில் உயிரின வளர்ச்சி எவ்வாறு உருவாகியிருக்க முடியும், விண்கற்கள் மூலம் இது சாத்தியமாகியிருக்கக் கூடுமா, பூமியை ஒத்த வேறு கிரகங்களில் உயிரின வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாமா? என்பது போன்ற ஆய்வுகள் இதுவரை மூடப்பட்டிருக்கும் கதவுகளைத் திறக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதே சமயம், ஏற்கனவே நாம் பார்த்த மற்றொரு பூமிக்கு அண்மையில் சுற்றிவரக்கூடிய எப்போஃபிஸ் என்ற விண்பாறை 2029ஆம் ஆண்டு பூமிக்கு அண்மித்ததாக, 20 ஆயிரம் மைல் (32,000 கி.மீ) தொலைவில் வரும்போது அதன் மண் மாதிரிகளை எடுத்து வருவதற்காக ‘ஓசிரிஸ்-ரெக்ஸ் எபெக்ஸ்’ என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலம், வில்ட்-2 என்றழைக்கப்படும் வால் நட்சத்திரம் 2029ஆம் ஆண்டு பூமிக்கு அருகே வரும் அதன் மாதிரிகளை எடுத்துவரவும் நாசா திட்டமிட்டுள்ளது. இவ் வால்வெள்ளி 2029 மே மாதம் பூமிக்கு அருகாமையில் வரும் போது, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க பிராந்திய மக்களால் வெறுங் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

மதங்கள் சொல்வது போல உலகம் மற்றும் பிரபஞ்சம் படைக்கப்பட்டது அல்ல என்பது முடிவான விஷயம். இது உருவானது. படைப்பு என்பது தொடர்ந்து நிகழ்ந்துவரும் ஒன்று. நாசா ஒரு வருடத்துக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் என்ற புதிய அண்டவெளி தொலை நோக்கியை விண்ணுக்கு அனுப்பி வைத்திருந்தது. அது 390 ஒளியாண்டுகளுக்கு அப்பால் ஒரு பிரபஞ்சம் உருவாகி வருவதையும் சுமார் 50 சூரியனை ஒத்த நட்சத்திரங்கள் தோற்றம் பெற்று வருவதையும் படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இவற்றை குழந்தை சூரியன்கள் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

ஆக, படைப்பு இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அருள் சத்தியநாதன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division