“நான் போகமாட்டன்”. நான் போகமாட்டன்” அக்காவோட அவவோட வீட்டுக்கு நான் போகமாட்டன்.”
ஜெனீபருடைய சத்தத்தில் அந்த வார்டே அதிர்ந்து போகிறது. சற்று முன்புவரை அங்கிருந்த எல்லோருடனும் சகஜமாகப் பேசிச் சிரித்துக் கொணடிருந்தவள் இப்போது அந்த வார்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியோடு பார்க்கும்படியாக கத்திக்கதறி அரற்றிக் கொண்டிருக்கிறாள்.
அந்த வார்டின் முன்புறமாகக் கம்பிகளாலான ஓர் அறை. அதில் ஜெனீபர், அக்கா மரியா, டாக்டர் சுஜாதா, நர்ஸ்மார் சிலர் எனக் குழுமியிருக்கிறார்கள். வார்டிலே இருபது நோயாளிகள். அவர்களில் பலருக்கு உடனிருந்து உதவி செய்ய வந்திருக்கும் உறவினர்கள், பராமரிப்புச்சேவை செய்யும் சிலர் ஆகியோரோடு அந்த மனநல சிகிச்சை வார்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. கூச்சல், கூப்பாடு என்று அங்கே பெரிதாய் ஒன்றுமில்லை. மின்சார வலிப்புச் சிகிச்சை முடித்த சிலர் உணர்வற்ற நிலையில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஒருசிலர் கூடிக்கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் துன்ப துயரங்களை மெல்லிய அழுகையோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஓரிருவர் தத்தம் கட்டில்களிலேயே மௌனத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். மூலைப் புறமாக அமைத்திருந்த இருகம்பிக்கூடு அறைகளில் ஒன்றில் மட்டும் ஒருபெண் ஏதேதோ சொல்லி அரற்றிக் கொண்டிருக்கிறாள்.
பார்வையாளர் நேரம் முடிந்து வந்தவர்களும் சுகமான நோயாளர்களும் வெளியேறிவிட்டார்கள். அந்த வார்டிலே ஜெனீபருடைய சத்தம்தான் இப்போது பெரும் ஓலமாய் கேட்டுக் கொண்டிருக்கிறது.
“உனக்கு இப்போ நல்ல சுகம் ஜெனீபர். உன்னை டிஸ்சார்ஜ் பண்ணியிருக்கிறம். இனி அடுத்த மாசம்தான் உனக்கு திருப்பியும் மருந்து தரவேணும். உன்ன கூட்டிப்போக அக்கா வந்திருக்கிறா. இந்த வார்டில யாரும் தொடர்ந்திருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நீ சந்தோசமா அக்காவோடு போ. சொல்வதைக் கேள் ஜெனீபர்….”
தலைமை நர்ஸ் ரேணுகா அவளிடம் கனிவாகப் பேசி; நிலைமையை எடுத்துச் சொல்கிறாள்.
“எனக்கு அக்காவோடு போகேலாது… அப்பாவ வரச்சொல்லுங்கோ. நான் அவரோட போறன்…”
ஜெனீபர் விடாப்பிடியாய் நிற்கிறாள்.
“மிஸ், அப்பா இத்தாலியில இருக்கிறார். நினச்ச மாதிரி அவரால இஞ்ச வரேலாது..”
மரியா பட்டென்று பதில் சொல்லுகிறாள்.
ஒரு வருஷத்துக்கு முன்பு அப்பா, அம்மா, ஜெனீபர் என மூன்று பேரும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு விடுமுறையில் வந்திருந்தபோதுதான் அந்த இழப்பு ஏற்பட்டது. அம்மாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அது மரணத்தில் முடிய, அப்பா சில நாட்களில் தனியாகவே இத்தாலி நோக்கிப் புறப்பட்டுப் போனார்; அம்மா இல்லாமல் ஜெனீபர் கஷ்டப்படக் கூடாதென்றும், அவளைக் கட்டிக் காப்பது தனக்குக் கஷ்டமென்றும் உணர்ந்து ஜெனீபரை மூத்த மகள் மரியாவிடம் விட்டுப் போனார் அவர்.
அப்பா போய் இரண்டு மாதங்களின் பின் அங்கே இத்தாலியப் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்த செய்தியை அறிவித்தபோது கலங்கித்தான் போனாள் ஜெனீபர். ஒருசில மாதங்களிலேயே அப்பா-_மகள் உறவின் இடைவெளி யாரோ, யாரோ என்ற நிலையிலே நீண்டு போகிறது. மாதா மாதம் ஜெனீபரின் செலவுக்கென ஒருதொகைப் பணம் வரும். அன்றைக்கு மட்டும் பிள்ளைகளோடு அவளையும் வெளியே அழைத்துச் செல்வாள் மரியா. விதவிதமான உணவுகளோடு வினோதமாய் அன்றைய நாள் கழியும் அவளுக்கு. மற்றைய நாட்களில் ‘தண்டச்சோறு’ என்ற பட்டமும் கடுகடுவென்ற பேச்சும் அவளைச் சுட்டுப் பொசுக்கிப் போடும்.
“அக்கா எனக்கொரு வேல பார்த்துக்கொடேன்…”
அக்காவைக் கேட்கிறாள் அவள்.
“நீ இன்னும் சின்னப்பொண்ணு. வயசு பதினெட்டு கூட நிரம்பேல்ல, ஆபீசுக்கெல்லாம் போகேலாது”
“அப்போ நான் தொடர்ந்து படிக்கவாவது வழிசெய் அக்கா…”
“அதுக்கெல்லாம் செலவுபண்ண என்னட்ட காசு இல்ல…”
“அப்பாட்ட சொன்னால் அனுப்புவார்தானே..”
“ஓம், உனக்கு செலவுக்கு காசே கம்மியாத்தான் அனுப்புறார். இதிலை வேற படிக்கவெண்டு கேட்டா அதையும் அனுப்பமாட்டார். பின்ன நான்தான் செலவுபண்ண வேணும். எனக்கும் ரெண்டு பொம்புள பிள்ளையளிருக்கு…ரெண்டுமூணு வருஷத்தால அப்பாவ வரச்சொல்லி கல்யாணம் ஒன்ற முடிச்சு வைக்கிற வரைக்கும் வீட்டோட இரு. எனக்கும் பிள்ளையளுக்கும் உதவியா இருக்கும்…”
கடுமையான அவளின் பேச்சை எதிர்த்துப் பேசமுடியாது ஊமையாகிப் பொகிறாள் ஜெனிபர்.
“மரியா நீ யோசிக்காதை, அவளோட படிப்புக்கு நான் செலவுபண்ணுறன்…”
“என்ன…?”
நெற்றிப் புருவம் உயர, முறைத்த பார்வையோடு கேட்கிறாள் அவள். அந்த வார்த்தையின் அதிகாரத்தில் அடங்கிப் போகிறார் அவள் கணவர் ரொபர்ட். ஜெனீபரைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது அவருக்கு.
ரொபர்ட், மரியாவைத் திருமணம் செய்யும் போது எட்டே வயதான சிறுமி அவள். அவளைப் பார்க்கையில் டெங்குக் காய்ச்சலால் சிறுவயதில் இறந்துபோன தன் தங்கை திரும்பக் கிடைத்தது போன்ற உணர்வு அவருக்கு. இத்தாலியிலே பெற்றோரோடு இருந்த ஜெனீபர் இன்று ஓர் அழகிய யுவதி. செல்லமாக வளர்ந்தவள். இன்று உறவு இருந்தும் உரிமையற்றவளாக…உதாசீனப்பட்டு பாவப்பட்ட ஜென்மமாய்… சே, சின்னப்பெண்ணாக இருக்கும் போது காட்டிய அன்பையும் ஆதரவையும் இப்போது காட்ட முடியாதுள்ளதே என வருந்துகிறது அவர் மனம்.
அந்த வீட்டுக்கு இப்போது வேலைக்காரி வருவதில்லை. எல்லோருடைய அழுக்கு உடைகளையும் தோய்ப்பது, அயர்ன் பண்ணுவது முதல் டிபன் பொக்ஸ், லன்ச்பொக்ஸ்களுக்கு சாப்பாடு சமைத்து நிரப்புவது, பாடசாலை போக பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவது, வீடு, வாசல் தோட்டத்தை சுத்தமாய் அழகாய் வைத்திருப்பது என அப்பப்பா..ஒரே வேலை. ஓர் இயந்திரமாகிப் போகிறாள் அவள்.
நாளாக நாளாக உடலும் மனமும் சோர்ந்து போகிறது அவளுக்கு. களைப்பு, தவிப்பு, விரக்தி, வெறுப்பு எல்லாம் சேர தன்னை மறந்து போகிறாள். உணவில்லை; குடிப்பில்லை; குளிப்பில்லை; சுருண்டு சுருண்டு படுப்பது மட்டுமே சுகமாக இருக்கிறது அவளுக்கு. அக்காவின் ஏச்சும் பேச்சும் அதட்டலும் மிரட்டலும் இப்போது அவளை எதுவுமே செய்வதில்லை.
ஒருநாள் மாலை. மரியாவின் கைபேசியை எடுத்து அதிலுள்ள சில இலக்கங்களுக்கு உரியவர்களோடு ஏதேதோ பேசிக் கொணடிருக்கிறாள் ஜெனீபர். தூங்கி எழுந்து வந்த மரியா அதைக்கண்டு கொதித்துப் போகிறாள். ஏச்சும் பேச்சும் அடியும் உதையும்..வீடு இரண்டு படுகிறது.
“மம்மி..யூ ஆர் வெரி பேர்ட்..”
சித்திக்குப் பரிந்து பேசிய சியாமளாவின் கன்னத்தில் விழுகிறது ஓர்அறை. இளையவள் ரெஜினா எதுவுமே பேசாமல் வாயைப் பொத்திக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொள்கிறாள்.
“ அம்.. மா..அ.ம்.மா…” ஜெனீபர் விம்முகிறாள்.
விம்மலோடு ‘அ..ம்,.மா…’ என்ற அந்த சொல் மட்டும் அங்கே விட்டு விட்டுக் கேட்கிறது. கன்னங்களிலும் கைகால்களிலும் ஏற்பட்ட தழும்புகளை கண்களிலிருந்து வழியும் கண்ணீர் தொட்டுச் செல்கிறது. எரியும் வேதனையைத் தாங்க முடியாமல் துடிக்கிறாள் அவள்.
“சும்மா நடிக்காதேயடி, என்ர கண் முன்னால நில்லாம எங்கேயாவது போய்த் தொலை…”
மரியாவின் வார்த்தைகள் விஷ ஊசிகளாக அவளைக் குத்துகின்றன. வலியோடு மெல்ல எழுந்து அகன்று போகிறாள். நேரம் மெல்ல ஊர்ந்து போகிறது. வெளியே போயிருந்த ரொபரட் திரும்பி வருகிறார்.
வீட்டின் அசாதாரண சூழ்நிலை புரிகிறது அவருக்கு. மரியாவிடமிருந்து ஜெனிபரை விடுவிப்பது தொடர்பாக யோசிக்கத் தொடங்குகிறார் அவர்.
இரவு உறங்கப் போகும் சமயம் மாத்திரை போத்தலொன்றுடன் ஜெனிபரைக் காண்கிறாள் மரியா.
‘எதற்கு’ என்று கேட்க ஜெனீபர் சொன்ன பதிலால் அதிர்ந்து போகிறாள். அப்பாவுக்குத் தெரியப் படுத்துகிறாள். நீண்ட நேரம் கதைத்துவிட்டு அவர் சொல்கிறார்.
“சைக்கியாரிட்ஸ் ஒருத்தரிட்டை காட்டிப் பார்ப்பம். எவ்வளவு செலவெண்டாலும் அனுப்பி வைக்கிறன். இஞ்சை மட்டும் எடுக்கேலாது.”
தன்னிடம் சாட்டப்பட்ட பொறுப்பினால் குமைந்து போனவள் தணியாத கோபத்தோடு ரொபர்ட்டோடு கதைக்கிறாள்.
“இவள் ஏடாகூடமாக எதையாவது செய்து போட்டால் நாங்களல்லோ பிரச்சினைக்கு ஆளாக வேண்டி வரும். நாளைக்கே சைக்கியாரிட்ஸ் ஒருத்தரிட்டை கூட்டிப் போவம்….”
மறுநாள் மரியாவும் ரொபர்ட்டும் விசேட மனநல வைத்தியர் ஒருவரிடம் ஜெனிபரை அழைத்துப் போகிறார்கள். டாக்டர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஏதேதோ பதிலாய் சொல்கிறாள் அவள். அம்மா இறந்ததையும் தந்தை விட்டுச் சென்றதையும் வேறுகல்யாணம் செய்ததையும் விபரமாகச் சொல்கிறாள் மரியா. ஜெனீபரின் கைகளிலே காணப்பட்ட தழும்புகளும் கண்களிலே காணப்பட்ட ஏக்கமும் டாக்டருக்கு மீதியைப் புரிய வைக்கின்றன.
“மனசு ரொம்ப குழம்பிப் போயிருக்கிறா. வார்டில அட்மிட் பண்ணினால்தான் சுகமாக்க முடியும்”
“ஓகே டாக்டர்…”
சிகிச்சை முறைகள், மருத்துவச் செலவுகள் பற்றி டாக்டர் விபரிக்கிறார்.
“பிரைவேட்ல அந்தளவு செலவுபண்ண எங்களால முடியாது டொக்டர். நான் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போறன்… நீங்க கடிதம் ஒண்டுமட்டும் தயவுசெய்து தாங்கோ டொக்டர்…”
அப்பா கைவிட்டால் செலவுப்பொறுப்பு தனக்காகி விடும் என்ற பயத்தில் தனியார் வைத்திய சிகிச்சை முறைக்கு மறுப்புத் தெரிவித்து, டாக்டரின் கடிதம் ஒன்றைப்பெற்றுக் கொண்டு எல்லோருமாய் வெளியேறுகிறார்கள்.
தன்னைச் சுற்றிலும் நடப்பது எதுவுமே புரியாத நிலையில் அரசாங்க மனநல காப்பகம் ஒன்றில் ஜெனீபர் அனுமதிக்கப்பட்டு மாதங்கள் இரண்டு கடந்து போய்விட்டன. மருந்து, மாத்திரைகள், மின்வலிப்புச் சிகிச்சை என சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இப்போது நன்கு தேறியவளாய், தன்னைப்புரிந்து கொண்டவளாய் இருக்கிறாள் அவள். வட்டமான அந்த அழகான முகத்திலே அழகிய சிரிப்பைப் பார்க்க முடிகிறது. காதோரம் சுருண்டு விழுந்து கிடக்கும் தலைமயிர் அவள் முகத்துக்கு அலாதியான அழகைத் தருகிறது. கலகலவென்ற அவளின் பேச்சும் சிரிப்பும் அந்த வார்டிலே ஓர் இனிய இசையாய் கேட்கிறது.
எல்லோருக்கும் பிடித்த ஒருத்தியாய் வலம் வந்த அவளை அடுத்தமாத சிகிச்சைக்குத் திகதி குறித்து இன்று டிஸ்சார்ஜ் பண்ணியிருக்கிறார்கள். இடைக்கிடை கணவரோடு மரியா வந்துவிட்டுப் போகும் போது ஒன்றும் சொல்லாதவள் இன்று வீட்டுக்கு அழைத்துப் போகப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சியின் வெளிப்பாடுதான் “நான் அக்காவோடு போகமாட்டேன்…” என்னும் கூப்பாடாய் போயிற்று.
டாக்டர், நர்ஸ்மார் என எல்லோரும் எவ்வளவோ இதமாய் எடுத்துச் சொல்லியும் அவள் கேட்டபாடாய் இல்லை. டாக்டர் சுஜாதா அனுதாபத்தோடு அவளைப் பார்க்கிறார். சிகிச்சைகளின்போது
அவள் அக்காவின் கொடுமைகளை அழுதழுது சொன்னதெல்லாம் அவர் மனதில் ஒருபடம் ஓடிக்கொண்டிருக்கிறது. பரிதாபத்தோடு ஜெனீபரைப் பார்க்கிறார் அவர்.
“ ஓகே ஜெனீபர் , நீ உன் கட்டிலுக்குப் போ.”
டாக்டர் சுஜாதா கூறியதும், அக்கா மரியாவைத் திரும்பியும் பார்க்காமல் ஓடிவந்து கட்டிலில் ஏறிப்படுத்துக் கொள்கிறாள் அவள்.
எல்லோர் முன்னிலையிலும் தன்னை அவமதித்த அவளை வெறுப்போடு பார்த்தபடி பற்களை நறநறவென்று கடிக்கிறாள் மரியா.
“கோவப்படாதீங்க. அவள் ஒரு மனநோயாளி. கொஞ்சம் சமாளிச்சுத்தான் போகணும். நாங்க பக்குவமா அவளுக்கு எடுத்துச் சொல்லுறம். நீங்க நாளைக்கு வந்து அவள கூட்டிப் போங்க.”
மரியாவிடம் டாக்டர் சுஜாதா கூறுகிறார்.
“நாளைக்கு சண்டே. எனக்குப் பார்ட்டி ஒன்டு இருக்குது. வர இயலாது. கிடந்து சாகட்டும்.”
படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு வேகமாக வார்டிலிருந்து வெளியேறுகிறாள் மரியா. ஆஸ்பத்திரிக்கு வெளியே காரோடு காத்து நிற்கும் ரொபர்டை கோபத்தோடு முறைத்துப் பார்த்தபடி கார்க் கதவைத் திறந்து ஏறிக் கொள்கிறாள். கறுப்புநிற ஜீன்சும் சிகப்புநிற டீசர்ட்டுமாக பெருங்கோபத்துடன் நிற்கும் அவளைப் பார்க்கப் பயந்தவராக காரை ஸ்டார்ட் பண்ணுகிறார் ரொபர்ட்.
“மம்மி… ஜெனிசித்தி வரேல்லயா?” இளைய மகள் ரெஜினா ஏக்கத்தோடு கேட்கிறாள்.
“வாயை மூடிக்கொண்டு வா.” அந்த அதட்டலில் மகள்மார் இருவரும் மௌனித்துப் போகிறார்கள்.
“என்ன நடந்தது?.” கொஞ்ச தூரம் வந்ததும் ரொபர்ட் மெதுவாக விசாரிக்கிறார்.
“ஹ்..ம் வரமாட்டாளாம். நம்மட வீட்டுக்கு வர முடியாதாம். எக்கேடும் கெட்டுப் போகட்டும். இனி கூப்பிடப் போகமாட்டன். அவள் எங்கட வீட்ட வரவும் கூடா. சொல்லிப் போட்டன்…”
ரொபர்டின் முகத்துக்கு நேரே விரலை உயர்த்தி அவர் முகத்தைப் பார்த்தபடி அழுத்தமாகக் கூறுகிறாள் மரியா. பெருமூச்சு விட்டபடியே காரை ஓட்டி வந்து வீட்டுவாசலில் நிறுத்துகிறார் அவர்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை.
காலையிலேயே வீடு அமர்க்களப்படுகிறது. பெறுமதியான, அழகான உடுப்புகளையெல்லாம் மரியா உடுத்தி உடுத்தி கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கிறாள். கடைசியில் ஜெனிபர் இத்தாலியிருந்து கொண்டு வந்திருந்த உடையொன்று அழகாக பொருத்தமாக இருக்க அயர்ன் பண்ணுவதற்காக மேசையருகே வருகிறாள். பக்கத்து அறையில் பிள்ளைகள் இருவரும் விளையாடும் சத்தம் கேட்க மெல்ல எட்டிப் பார்க்கிறாள்.
ஜெனீபருடைய உடுப்பு ஒன்றை உடுத்தியபடி ரெஜினா சுருண்டு படுத்துக் கிடக்கிறாள். சியாமளா ஜீன்சும் பேண்டும் அணிந்து, கைகளை இடுப்பில் குத்தி மிடுக்காய் நின்றபடி பேசுகிறாள்.
“என்னடி… சும்மா சும்மா படுத்துக் கிடக்கிறாய்.? ஒரு வேலயும் இப்போ செய்யுறதில்ல..கேட்டால் ஒரே தலைவலி..தலைவலி. ஊத்தை உடுப்பெல்லாம் மலைபோல குவிஞ்சு கிடக்கு. கிச்சனில எச்சில் பாத்திரமெல்லாம் அப்படியே கிடக்கு. வீடு வாசலெல்லாம் ஒரேகுப்பை. சும்மா சோறு சாப்பிடுற உனக்கு இதையெல்லாம் செய்யுறதுக்கென்ன..? டொய்லட் பாத்ரும் எல்லாம் நாறுது. எழுந்திரடி. போய் வேலைகளைப் பார். ம்…ம்..எழுந்திரு.”
ரெஜினாவைக் காலால் எகிறியபடி சியாமளா மரியாவாக மாறி நிற்கிறாள். மரியா பேச்சற்று உறைந்து போய் நிற்கிறாள். அயர்ன் பண்ணுவதற்காக கையில் வைத்திருந்த உடை நழுவி கீழே விழுகிறது.
“ஏய், கைக்குள்ள என்ன பொத்தி வச்சிருக்கிறாய்..? காட்டு.”
சியாமளாவின் அதட்டலுக்குப் பயந்து ரெஜினா கையை விரிக்கிறாள். அவள் கையிலிருந்து சில மாத்திரைகளும் மணிகளும் தரையெங்கும் சிதறி ஓடுகின்றன.
“ஏதுக்கடி இந்த மாத்திரை மணிகளெல்லாம்…?”
ஜெனீபர் அன்றொரு நாள் தனக்குச் சொன்ன அதே பதிலை ரெஜினா இப்போது கூறுகிறாள்.
“இதைக் குடிச்சிட்டு நான் செத்துப் போறன்.”
“ நோ…..”
மரியாவின் அலறல் சத்தம் அந்த அறைச்சுவர்களில் மோதித் தெறித்து எதிரொலிக்கிறது.
பிள்ளைகள் இருவரும் மிரண்டு போய் எழுந்து நிற்கிறார்கள். கையில் இருந்த மொபைல் போனை போட்டுவிட்டு ஓடி வருகிறார் ரொபர்ட். மரியா குலுங்கிக் குலுங்கி அழும் சத்தம் அந்த வீடெங்கும் கேட்கிறது.
நடந்தது எதையும் அறியாத ரொபர்ட் அவளை ஆதரவாக அணைத்தபடி அமைதிப்படுத்த முயல்கிறார். பிள்ளைகள் இருவரும் அவளின் கால்களைக் கட்டிக் கொண்டு அவளை மிரள மிரளப் பார்க்கிறார்கள்
மரியா அழுகிறாள்; ஏங்கி ஏங்கி அழுகிறாள். அவளின் விசும்பலினூடே “ஜெனி..ஜெனி.” என்ற வார்த்தை மட்டுமே அப்போது அங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது.
எம். ஏ. ரஹீமா