சிறுவர்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்கள். அவர்கள் எமது வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையானவர்கள். சிறுவர்கள் இல்லாத வீடும் சிறுவர்கள் இல்லாத நாடும் அழகாக மாட்டாது. சிறுவர்கள் எமது வளங்கள், எமது செல்வங்கள். எதிர்காலத்தில் எமது வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளாக வர இருப்பவர்கள். இதனை நாம் கருத்திற்கொண்டு சிறுவர்களை வழிநடத்த வேண்டியது எமது கடமையாகும். எமது வீட்டில் வளரும் சிறுவர்கள், பள்ளியில் பயிலும் சிறுவர்கள் யாவரும் தங்கள் எதிர்காலத்தை சிறப்பிக்க இருப்பவர்கள். அதனால் ஆசிரியர்களும் பெற்றார்களும் சிறுவர்களை பாதுகாத்து வழிநடத்த வேண்டியது கட்டாய கடமையாகும். ஆசிரியர்கள் சிறுவர்களுக்கான கல்வியையும் ஒழுக்க விழுமியங்களையும் நற்பண்புகளையும் போதிக்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக வர வழிகாட்டுகிறார்கள்.
அதேபோல பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டிலேயே ஒழுங்காகப் படிப்பதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவற்றோடு விளையாடுவதற்கும் சுயமாக தொழிற்படுவதற்கும் சிறுவர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களுடன் அன்பாகக் கதைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளுக்காக பெற்ேறார் ஆவேசப்படக் கூடாது. அவர்களது இளம் உள்ளங்கள் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.
அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரிக்கும் போது, அவர்களது இளம் உள்ளங்கள் விரிவடைகின்றன. பெற்றார்கள் ஒருநாளும் தேவையற்ற கீழ்த்தரமான வார்த்தைகளால் சிறுவர்களை ஏசக்கூடாது. அவர்களை மன அழுத்தங்களுக்கு உட்படுத்தக்கூடாது. பிள்ளைகள் முன்னிலையில் தாய் தந்தையர் பேசிக்கொள்வது, சண்டை போடுவது கூடாது. இதனால் பிள்ளைகளின் மனம் வேதனை அடையக்கூடும். பெற்றார் எப்போதும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும்.
சிறுவர்கள் செய்யும் நல்ல காரியங்களை புகழ்வதும் தீய காரியங்களை கண்டிப்பதும் பெற்றார்களின் கடமை. பிள்ளைகள் எப்போதும் இனிய வார்த்தைகளால் பேசிப்பழக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை செய்வதற்கும், நல்லவர் சொல்கேட்டு நடப்பதற்கும், ஒழுக்கம் பேணுவதற்கும், கடவுளை வழிபடுவதற்கும் தங்களது பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.
சிறுவர்கள் திருந்திவிட்டால் எமது வீடும் நாடும் சிறப்படையலாம் அல்லவா?
இது இப்படியிருக்க, இன்றைய சிறுவர்கள் சன்மார்க்க ரீதியில் வளர்கிறார்களா? வளர்க்கப்படுகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது. இது இன்று ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பள்ளி சென்று பாடங்களை படிக்காமல் காலம் கடத்தும் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள், போதனைகளை அலட்சியப்படுத்தும் சிறுவர்கள் என பலர் இருக்கின்றனர்.
நாட்டின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அங்கெல்லாம் வழிதவறிச் செல்லும் சிறுவர்களை அவதானிக்க முடிகிறது. சிகரெட், பீடி புகைப்பவர்கள், போதைப் பொருள் பாவிப்பவர்கள், கைபேசி, கணினி, தொலைக்காட்சி இவற்றில் காலத்தை கடத்துபவர்கள் என்றெல்லாம் சிறுவர்களை இனம்காணமுடிகிறது. இவர்கள் அனைவரும் தங்களது நாளாந்த முக்கிய அலுவல்களை செய்வதில் தவறி விடுகிறார்கள். இவர்கள் நிலை இப்படி இருக்க ஒழுக்கமுள்ள நல்ல சிறுவர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு ஏனைய சிறுவர்களும் செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 01ஆம் திகதி நாடெங்கிலும் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் தொடர்பான போட்டிகள் விளையாட்டுகள், விழாக்கள் வைபவங்கள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்போது சிறுவர்களுக்கான பரிசுகள் அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படியாக சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விழாக்கள் நடாத்தப்படுவது வரவேற்கக் கூடியதாகும்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள்
இதன் அடுத்த பக்கமாக நாம் பார்க்கும் போது மனவேதனைப்பட வேண்டியுள்ளது. இன்று நாடெங்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இது பற்றிய செய்திகளை நாம் நாளாந்தம் கேள்விப்படுகிறோம். சிறுவர் கல்விக்கு தடைபோடுவது, வேலைப்பளுவை சுமத்துவது, பட்டினியில் வைப்பது, அடித்துத் துன்புறுத்துவது, அவர்களது உரிமைகளை பறிப்பது இவையெல்லாம் சிறுவர் துஷ்பிரயோக வரிசையிலே உள்ளடங்குகின்றன. இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள்
இன்று நாடெங்கும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளாந்தம் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் வெட்கத்துக்குரிய செயலாகும். ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என அதிகமான சிறுவர்கள் இன்று பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாம் கேள்விப்படுகிறோம்.
இதுவெல்லாம் சிறுவர்களின் நல்வாழ்க்கையை கெடுக்கும் சம்பவங்கள் அல்லவா? தங்களிடம் பாடம் படிக்க வரும் சிறுவர்களை தமது பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியர்கள், தந்தைமார், நல்லவர்கள், உறவினர்கள், படித்தவர்கள், மதகுருமார் என பலராலும் இம்மோசமான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்லவா? இது தொடர்பாக நாளாந்தம் பொலிஸ்; விசாரணை, நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருவதையும் அறிகிறோம். இதனால் நாம் தலைகுனிய வேண்டியுள்ளது. இப்படியான நிகழ்வுகள் குறைந்துவிட்டதாகவோ, இல்லாமல் போய் விட்டதாகவோ சொல்வதற்கில்லை. இது கவலைக்குரியதாகும்.
அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சிறுவர்களின் நல்வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் இத்தகைய நபர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் விசாரிக்க வேண்டும். உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
எம்.ஏ.அத்தாஸ் -மாத்தறை