எட்மண்ட் ரணசிங்க இலங்கை பத்திரிகைத் துறையில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திவயின’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியராவார். தற்போது இந்நாட்டில் இருக்கும் அனுபவம் மிக்க பத்திரிகையாளருமான அவரின் தேசிய ஊடகப் பணியைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒக்டோபர் 03ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மூத்த ஊடகவியலாளர் எட்மண்ட் ரணசிங்கவின் சகாப்தப் பணிகளைப் பாராட்டி ‘எட்மண்டின் பத்திரிகைப் புரட்சி’ நூல் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதோடு, இந்த விழாவில் சிறப்புரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் ஆற்றவுள்ளார்.
தற்போது தனது வாழ்க்கைப் பயணத்தில் தொன்னூற்றி மூன்று வருடங்களைக் கழித்துள்ள திறமைமிக்க ஊடகவியலாளர் எட்மண்ட் ரணசிங்கவின் அபாரமான ஊடகத்துறை, அவருக்கும் சிலுமின பத்திரிகைக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவரது வாழ்க்கை ஆகியவற்றின் பிரதிபலிப்பே இதுவாகும்.
இலங்கைப் பத்திரிகைத் துறையில் அவர் ஒரு விருட்சமாகும். அவர் புதிய தலைமுறைக்கு வழிகாட்டிய பத்திரிகை உலகின் ஒளிரும் நட்சத்திரமும் கூட. அந்த விருட்சத்தின் நிழலில் வளர்க்கப்பட்ட பல செடிகள் இப்போது பெரிய மரங்களாகி இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டுகின்றன. அந்த தனித்துவமான விருட்சம் மூத்த பத்திரிகையாளர் எட்மண்ட் ரணசிங்கவாகும். அவரது பெயர் இந்நாட்டு மக்களுக்கு மிகவும் நெருக்கமானது ‘திவயின’ நாளிதழின் ஸ்தாபக ஆசிரியராக, தேசிய மற்றும் கலாசார ரீதியில் சாதாரண மக்களின் அபிலாஷைகளை சரியாக இனங்கண்டு, சவால்மிகுந்த பத்திரிகைத் துறையினை இந்நாட்டுப் பத்திரிகைத் துறையில் விதைத்த சளைக்காத பத்திரிகை ஆசிரியர் என்ற வகையிலாகும். பாரம்பரிய இதழியலைத் தாண்டிய புரட்சிகரப் பத்திரிகையின் ஆசிரியராகத் துணிச்சலாலும் ஆற்றலாலும் செழுமைப்படுத்தப்பட்ட எட்மண்ட் ரணசிங்கவுக்கு பத்திரிகைத் துறையின் பிறப்பிடமாக அமைந்தது பத்திரிகைத் தாய் வீடானதில் சிலுமினவுக்குப் பெருமையாகும்.
1930 ஆகஸ்ட் 14ம் திகதி அவிசாவளை, புவக்பிட்டியவில் பிறந்த அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தொன் எட்மண்ட் விக்ரமரத்ன ரணசிங்கவாகும். அவரது தந்தை அவிசாவளை பெலயார் தோட்டத்தின் பிரதான எழுதுவிளைஞராகப் பணியாற்றிய தொன் ஆர்னோலிஸ் ரணசிங்கவாகும். தாய் மேரியன் விக்ரமரத்ன. ரணசிங்க தம்பதியினருக்கு எட்மண்ட் உள்ளிட்ட ஐந்து பிள்ளைகளாகும். சிறிய வயதில் எட்மண்ட் ஆரம்ப கல்வியை இரத்தினபுரி பர்கியூஷன் மகளிர் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அவிசாவளை சென் மேரி வித்தியாலயத்திலும் கற்றார். அந்தக் காலத்தில் இருந்த சிரேஷ்ட பள்ளிச் சான்றிதழ் பரீட்சையில் சித்தியடைந்த எட்மண்ட் என்ற இளைஞருக்கு சில மாதங்களிலேயே முதல் தொழிலாக தும்மோதர பாடசாலையில் ஆசிரியராக நியமனம் கிடைத்தது. அந்தக் காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு உயர் வரவேற்பு கிடைத்த போதிலும் வித்தியாசமான யோசனைகளைக் கொண்ட வித்தியாசமான இளைஞரான எட்மண்ட், அந்த வேலையை அதிகம் விரும்பவில்லை. நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் நாட்டுக்கு சேவை செய்வதையே தனது முதல் நோக்காகக் கொண்ட எட்மண்ட் ரணசிங்கவின் மனது அடிக்கடி கூறிய விடயம், இது தனக்குப் பொருத்தமான வேலையல்ல என்பதாகும். இரண்டு வருடங்களில் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் லேக்ஹவுஸ் நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்ட டெய்லி நியூஸ் பத்திரிகையின் விளம்பரம் ஒன்றைப் பார்த்து அவரது சிந்தனையில் புதிய உத்வேகம் உண்டானது. ஒரு பத்திரிகையாளனாக ஆக வேண்டும் என்ற தனது கனவை மேலும் தள்ளிப் போட விரும்பாத எட்மண்ட் உடனே தனது ஆசிரியத் தொழிலுக்கு விடை கொடுத்தார்.
இருபத்தொரு வயதில் எட்மண்ட் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக இருந்த எஸ்மண்ட் விக்ரமசிங்கவை 1952ம் ஆண்டில் சந்தித்தார்.
“அது 1952ம் ஆண்டு பொதுத் தேர்தல் சூடு பிடித்த நேரமாகும். மேற்கூறப்பட்ட நேர்முகத் தேர்வு ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெற்றது. என்னுடன் மீமன பிரேமதிலக, எஸ் சுபசிங்க, தர்மபால வெதசிங்க ஆகியோரும் அந்தத் தேர்வில் கலந்து கொண்டிருந்தனர். அந்த நேர்முகத் தேர்வில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றாலும் எம்மை ஆசிரிய பீடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. எம்மை “பொலிடிகல் டெஸ்க்” கின், பிரசார வேலைகளுக்கே பயன்படுத்தினார்கள். தேர்தலின் பின்னர் எம்மை டெய்லி நிவூஸ், தினமின பத்திரிகைகளின் பாராளுமன்ற செய்தி சேகரிப்பிற்காக நியமித்தார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் அன்று என்னோடுநேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட நான்கு பேரும் பின்னைய காலங்களில் சிலுமின ஆசிரியர்களானோம்” என எட்மண்ட ரணசிங்க தனது கடந்த கால பத்திரிகைத் துறையின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
1952 மார்ச் 21ம் திகதி அவர் ஊடகவியலாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நிவூஸ் பத்திரிகையில் 75 ரூபாய் மாதாந்த சம்பளத்திற்கு இணைந்து கொண்டார். தேர்தலின் பின்னர் பாராளுமன்றச் செய்தியாளராகப் பணியாற்றிய எட்மண்ட், அதில் முழுப் பயன்களைப் பெற்று தனது பத்திரிகைத் துறை ஆற்றலை வளர்த்துக் கொண்டார். இலங்கைப் பாராளுமன்றம் அப்போது புத்திஜீவிகளின் புகலிடமாக இருந்ததோடு, பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆங்கில மொழியிலேயே இடம்பெற்றன. பண்டாரநாயக்க, என். எம், பீட்டர் கெனமன், ரொபட் குணவர்தன, தஹநாயக்க ஜே. ஆர், நடேசன், சுந்தரலிங்கம், ஈரியகொல்ல, கந்தைய்யா, பொன்னம்பலம் போன்ற திறமையான அரசியல்வாதிகளின் உரைகள் மற்றும் வாதப்பிரதிவாதங்களுடன் தொடர்புடைய நாடாளுமன்ற அறிக்கைகளை சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரிப்பது எட்மண்டுக்கு ஏராளமான நடைமுறை அனுபவங்களை அளித்ததோடு, வேகமான மற்றும் துல்லியமான செய்தி அறிக்கையிடல்களால் அவர் ஏனைய ஊடகவியலாளர்களைப் பின்தள்ளிவிட்டு முன்னேறிச் சென்றார். இதனால் அதிக நாட்கள் செல்ல முன்னர் தினமின பத்திரிகையின் பிராந்திய செய்தி ஆசிரியராக அவர் முன்னேறினார். அந்நேரம் தினமினவின் ஆசிரியராகப் பணியாற்றியவர் தர்மபால வெத்தசிங்கவாகும். எட்மண்ட் ரணசிங்கவிடம் இருந்தது படிப்படியாக முன்னேறி வந்த அனுபவங்களினாலும், திறமைகளாலும் பூரணமடைந்த ஒரு பயணமாகும். பின்னைய காலத்தில் அவர் ஜனதா பத்திரிகையின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியதோடு, பின்னர் தினமினவின் ஆசிரியராகவும் நியமனம் பெற்றார்.
ஆரம்பத்திலிருந்தே நேர்மை மற்றும் சுதந்திரமான சிந்தனையினைக் கொண்ட எட்மண்ட் ரணசிங்க, 1970ம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த சமகி பெரமுண அரசாங்கத்தினால் லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து லேக்ஹவுஸிலிருந்து இராஜினாமாச் செய்தார். 1977ம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன் அவர் மீண்டும் லேக்ஹவுஸூடன் இணைந்து கொண்டார். பத்து சத பல்கலைக்கழகம் என்று அக்காலகட்டத்தில் அழைக்கப்பட்ட சிலுமின நாளிதழில் ஒளிரும் அளவுகோலாக மாறும் அதிர்ஷ்டம் 1980ம் ஆண்டில் அவருக்குக் கிடைத்தது. எட்மண்ட் ரணசிங்க 1980 தொடக்கம் 1981 ஜூலை வரை சிலுமின பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, அந்நேரத்தில் ஆசிரியர் பீட அங்கத்தவர்களின் எண்ணிக்கை பத்தாக இருந்தது. பிரதி ஆசிரியர் ஏ. டப்ளிவ். பீ. கே. குணவர்தன, கட்டுரை ஆசிரியர் தயாசேன குணசிங்க, பீ. பி. இலங்கசிங்க, லக்ஷ்மன் ஜயவர்தன, நந்தசேன சூரியாராச்சி, பர்ஷி ஜயமான்ன, சாந்த சேனாதீர, சித்திரப் படக் கலைஞர் குணபால ஹேமச்சந்திர மற்றும் புகைப்படக் கலைஞர் ராஜா பெரேரா ஆகியோரே அவர்களாகும். அதுமாத்திரமின்றி, 2016 ஜூலை 01ம் திகதியிலிருந்து 2017 மார்ச் 31ம் திகதி வரையான காலப்பகுதியிலும் எட்மண்ட் ரணசிங்க இரண்டாவது தடவையாகவும் சிலுமினவின் ஆசிரியராகப் பணியாற்றினார். இதனடிப்படையில் சிலுமின பத்திரிகையின் ஆசிரியராக அவர் இரண்டு வருடங்களும், மூன்று மாதங்களும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் சிலுமின பத்திரிகையின் 92வது வருட நிறைவு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக சிலுமின பத்திரிகையின் அலுவலகத்திற்கு வந்த சந்தர்ப்பம் எட்மண்ட் ரணசிங்கவுக்கு மனதுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தருணமாகியது. சிறந்த இலக்குகளையுடைய தலைமுறையினை உருவாக்கிய ஆத்ம திருப்தியாலும், பணிவான பெருமையாலும் அவரது கண்கள் பிரகாசித்தன. அவரது மகிழ்ச்சியான உணர்வுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது தொடர்பில் எட்மண்ட் ரணசிங்க இவ்வாறு நினைவுபடுத்தினார்.
“சிலுமினவும் நானும், எம்மிருவருக்கும் ஒரே வயது. சில மாத இடைவெளிகள் மாத்திரமே உள்ளது. 1930 மார்ச் 30ம் திகதி சிலுமினவின் பிறந்த நாள். அதற்கு ஐந்து மாதங்களுக்குப் பின்னரே நான் பிறந்தேன். அதேபோன்று 1980ம் ஆண்டில் சிலுமின பத்திரிகைக்கு 50 ஆண்டு நிறைவடைந்த போது அதன் ஆசிரியராகப் பணியாற்றக் கிடைத்தது எனது வாழ்வில் அபூர்வமான சந்தர்ப்பமாகும் என்பதோடு, ஒரு பத்திரிகையாளனாக கிடைக்கக் கூடிய அதிகூடிய மகிழ்ச்சியாகவும் குறிப்பிட முடியும்”
எட்மண்ட் ரணசிங்க என்பவர் தனது தனிப்பட்ட சலுகைகளுக்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும் பதவியைக் காட்டிக் கொடுக்காத ஒரு துணிச்சலான எழுத்தாளராகும். நிறுவனத்தின் நிருவாகத்தினரோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக அவர் லேக்ஹவுஸிலிருந்து வெளியேறியது சிலுமினவின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையிலாகும். அந்நேரம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சரும், பிரபல எழுத்தாளருமான டீ. பி. இலங்கரத்னவின் நெடுங்கதை ஒன்று பகுதி பகுதியாக சிலுமினவில் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. இந்தக் கதையை உடன் நிறுத்துமாறு நிருவாகம் விடுத்த வேண்டுகோளுக்கு எட்மண்ட் ரணசிங்க எதிர்ப்பை வெளியிட்டார். அந்தக் கதையினால் சிலுமினவின் விற்பனை அதிகரித்ததை சாட்சிகளோடு அவர் நிருவாகத்திற்கு விளக்கப்படுத்திய போதிலும், அப்படியாயின் கதையைச் சுருக்கி சீக்கிரமாக கதையை முடிக்குமாறு நிருவாகம் உத்தரவிட்டது. “திறமையான எழுத்தாளரின் நாவலை வெட்டுவது என்பது திறமையான சிற்பி ஒருவர் செதுக்கிய சிலையின் அங்கங்களை உடைப்பது போன்ற கொடூரமான செயலாகும். இலங்கரத்னவின் அரசியல் கருத்துக்கள் இந்தக் கதையில் இல்லை. அந்த யோசனையுடன் என்னால் உடன்பட முடியாது” எட்மண்ட் அவ்வாறு கூறியவாறு நிருவாகத்தினரின் முன்னால் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். அது மாத்திரமின்றி வேறொரு எழுத்தாளரின் அறிவுசார் உரிமைகளுக்காக நிபந்தனைகளின்றி முன்னின்ற அவர் லேக்ஹவுஸில் இருந்து விலகினார்.
அனைத்து எழுத்தாளர்களும் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு பத்திரிகையினுள் ஒரு திறந்த தளத்தை உருவாக்கிக் கொடுத்த இந்த பத்திரிகை ஆசிரியர், தனது வழிகாட்டுதலின் கீழ் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என ஒரு பெரிய குழுவை உருவாக்கியுள்ளார். அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் பத்திகள் வாசகர்களிடையே மிகவும் பிரபலமடைந்ததோடு, அவர் சிலுமின மற்றும் திவயின பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் மக்களின் ஞானத்தை தட்டி எழுப்பினார். ஒரு பத்திரிகையாளராகவும், தேசியப் பத்திரிகையின் ஆசிரியராகவும் மிகவும் பொறுப்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது, ’ஒரு தேசத்தின் கண்ணீர், ஒரு பரம்பரையின் உரிமையாளர்கள், ஸ்ரீயலதா மற்றும் சோம ஹாமதுருவோ பௌத்த அரசியல்’ ஆகிய நான்கு படைப்புகளை எழுதினார்.
கடந்த ஆகஸ்ட் 14ம் திகதி வாழ்க்கைப் பயணத்தில் 93 வருடங்களைக் கடந்த அவர், இன்று மிகவும் இலகுவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார். துணிச்சலான பத்திரிக்கையாளராக நாட்டிற்காக தனது கடமையை நிறைவேற்றிய பெருமை அவரது வயோதிப வாழ்க்கையை இலகுவாக்கியிருக்கின்றது. 1958ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி எட்மண்ட் ரணசிங்க திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதோடு, ஆசிரியராகப் பணியாற்றிய மிலினா குமாரகேவைக் கரம் பிடித்தார். எட்மண்ட் – மிலினா தம்பதியினரின் மூத்த மகள் நிர்மலா ரணசிங்க பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியம் தொடர்பான பட்டம் பெற்ற ஒரு ஆங்கில ஆசிரியராகும். அவரது கணவர் ஒரு சிவில் பொறியியலாளரான லக்பிரிய ரத்நாயக்கா என்பவராகும். இளைய மகள் தர்ஷனி ரணசிங்க, கணினி தரவு உத்தியோகத்தர் என்பதோடு, அவரது கணவர் வர்த்த வியாபாரியான லக்சிரி விக்ரமாராச்சியாகும்.
புதிய தலைமுறையினருக்கு வெளிச்சத்தை வழங்கும் நட்சத்திரமான அனுபவமிக்க ஊடகவியலாளர் எட்மண்ட் ரணசிங்க பத்திரிகைத் துறைக்காக பல தியாகங்களைச் செய்துள்ளார்.
எப்பொழுதும் சூடான செய்திகளைத் தேடுவதிலும், அறிவையும் தகவல்களையும் புதுப்பித்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்ட அவரது நிழலில் புதுமுகங்களாகப் பத்திரிகைத் துறையில் நுழைந்த பலர் இந்நாட்டில் தற்போது பத்திரிகைத் துறையில் அழியாத தடங்களைப் பதித்துள்ளனர்.
குறிப்பாக 2000ம் ஆண்டின் முற்பாதியில் எட்மண்ட் ரணசிங்கவினால் ஈர்க்கப்பட்ட எட்மண்ட் ரணசிங்கவின் சீடர்கள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர் பதவி உள்ளிட்ட உயர் பதவிகளைப் பெற்றிருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடவே வேண்டும்.
விஜய பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர், லங்காதீப தினசரியின் ஆசிரியர் சிரி ரணசிங்க, ரிவிர பத்திரிகையின் ஆசிரியராகச் செயற்பட்ட உபாலி தென்னகோன், ஞாயிறு லக்பிம பத்திரிகையின் ஆசிரியர் சுந்தர நிஹதமானி டி.மெல், லக்பிம தினசரி பத்திரிகையின் ஆசிரியராகச் செயற்பட்ட கித்சிரி நிமல் சாந்த மற்றும் ஜட்டில வெல்லபட, சிலுமின ஆசிரியராகப் பணியாற்றிய கருணாதாச சூரியாராச்சி, தினமின ஆசிரியராக இருந்த மஹிந்த அபேசுந்தர, ரிவிர ஞாயிறு மற்றும் தினசரி பத்திரிகைகளிலும், மவ்பிம தினசரி மற்றும் ஞாயிறு பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய லேக்ஹவுஸின் தற்போதைய ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திர, சிலுமின பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் தர்மன் விக்ரமரத்ன, சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராகச் செயற்பட்ட ஹைரிக பேருசிங்க மற்றும் அநுர சிரிவர்தன, பத்திரிகை நிறுவனம் ஒன்றில் பணிப்பாளராக சில காலம் பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளராகக் கடமையாற்றும் தீப்தி அதிகாரி, ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியின் அரசியல் பிரிவின் பிரதானியாகப் பணியாற்றி பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொலைத் தொடர்பாடல் திணைக்களத்தின் முதலாவது பணிப்பாளர் ஷான் விஜேதுங்க, சிரச டீவி மற்றும் எம்.டி.வி பணிப்பாளர் அசோக டயஸ், செலசினே நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஹரின் குணவர்தன மற்றும் மவ்பிம ஞாயிறு மற்றும் தினசரி பத்திரிகைகளின் தற்போதைய ஆசிரியர் சாமிந்த வாரியகொடவும் உருவாகியது திவயின பத்திரிகையின் ஊடாகவாகும்.
சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்மண்ட் ரணசிங்க, தனது மாணவர்கள் பத்திரிகைத் துறையில் இன்று சிறந்து விளங்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
சுரேகா நில்மினி இலங்ககோன் தமிழில்: எம். எஸ். முஸப்பிர்