Home » ”கிசுகிசுவெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது”

”கிசுகிசுவெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது”

by Damith Pushpika
October 1, 2023 6:30 am 0 comment
அபிராமி

தமிழில் ‘வானவில்’ படத்தின் மூலம் அர்ஜூன் ஜோடியாக நடித்து அறிமுகமானவர், அபிராமி. ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘தோஸ்த்’, ‘சமுத்திரம்’, ‘சார்லி சாப்ளின்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

2015-ம் ஆண்டில் வெளியான ’36 வயதினிலே’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த அபிராமி, சினிமாவில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார். அதேபோல மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் ‘ஆர் யூ ஓகே பேபி’ படம் வெளியாக இருக்கிறது.

மீண்டும் பிசியான நடிகையாக மாறியிருக்கும் அபிராமி நட்சத்திர பேட்டிக்கு மனம் திறந்தார். சிரிப்பு மாறாமல் அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

சினிமாவில் உங்கள் அறிமுகம்?

நான் ஆரம்பத்துல டி.வி. தொகுப்பாளராகத்தான் இருந்தேன். அப்படித்தான் படிப்படியாக சினிமா வாய்ப்பு கிடைச்சது.

இப்போதும் தொகுப்பாளரை போல படபடவென பேசமுடியுமா?

நாம சேஞ்ச் ஆகும்போது, நம்ம பாணியும் சேஞ்ச் ஆகத்தான் செய்யும். ஆனால் அப்போ இருந்த ஸ்பீடு, இப்போ இருக்குமான்னு கேட்டா, கொஞ்சம் தடுமாறும் அவ்வளவு தான் (சிரிக்கிறார்). என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

தெலுங்கில் ‘வாஷிங்மெஷின்’ படத்துல நடிச்சு முடிச்சுருக்கேன். இன்னொரு புதிய படத்திலும் நடிச்சுட்டு இருக்கேன். தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மகாராஜா’ படத்துல நடிச்சுருக்கேன். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஆர் யூ ஓகே பேபி’ படத்தில் சமுத்திரகனியுடன் நடித்துள்ளேன். சக்தி சிதம்பரம் இயக்கும் ‘ஜாலியோ ஜிம்கானா’, விஷால் வெங்கட், லோகேஷ் உள்ளிட்டோரின் படங்களிலும் நடிச்சுட்டு இருக்கேன். 2 புதிய படத்துல நடிக்க ஓகே சொல்லிருக்கேன். இதுதவிர விஜய் மில்டன் டைரக்டு செய்யும் வெப் சீரிஸ்-லும் நடிக்கிறேன். மலையாளத்தில் ‘கருடன்’ படத்துல நடிக்கிறேன்.

அப்படி என்றால் 2-வது இன்னிங்சில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கியாச்சு?

ஆமா… ஆமா… (சிரிக் கிறார்)

‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம்?

மறக்க முடியாத விஷயம் அது. கமல்ஹாசன் அப்படிங்கிற மிகப்பெரிய ஸ்டார் கூட நடிக்கும்போது நாமும் நம்மோட ‘பெஸ்ட்’டை கொடுக்கணும் அப்டின்னுதான் என் மூளைக்குள்ள ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதுக்காக என் திறமை எல்லாத்தையுமே வெளிப்படுத்தினேன். சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படம் அது.

அந்தப் படத்தில் தெக்கத்தி பாஷையில் கலக்கி இருப்பீர்களே… எப்படி தயாரானீங்க?

படப்பிடிப்பின்போது, என்னை சுற்றி ஏராளமான மதுரைக்காரங்க இருந்தாங்க. அவங்க கிட்ட பேசும்போது, அவங்க பேச்சில் உள்ள நுணுக்கங்களை அறிந்து, புரிந்து நடித்தேன்.

நான் ஏதாவது தப்பா டயலாக் பேசிட்டா கூட, கமல் சார் அதை திருத்தி அன்பா சொல்லித்தருவாரு.

முன்னணி நடிகையாக இருக்கும்போதே, சினிமாவில் இருந்து 10 ஆண்டு காலம் ஓய்வு எடுத்துவிட்டீர்களே… ஏன்?

நான் படிக்க ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் அந்த ‘கேப்’ தேவைப்பட்டுச்சு. நான் மிடில் கிளாஸ் பேமிலியில் இருந்து வந்தவ. சினிமாவுல எனக்கு யாரும் காட்பாதர் கிடையாது. தானா முளைச்சு வந்த மரத்துல நானும் ஒன்னு.

அந்த மரம் நல்லா தழைச்சு வரும்போது, ‘ஓ.கே. நம்ம செய்ய வந்த வேலையை செஞ்சாச்சு’ அப்படிங்கிற ஒரு திருப்தியோடதான் நான் போனேன்.

மன அழுத்தத்தால்தான் இந்த முடிவு எடுத்துவிட்டீர்கள் என்று பேசப்பட்டதே?

அப்படியெல்லாம் கிடையாதே…

20 படங்களிலேயே உங்கள் சினிமா பயணம் முழுமையடைந்து விட்டதாக உணர்ந்துவிட்டீர்களா?

சினிமா, எல்லா காலத்துக்கும் கைகொடுக்குமான்னு தெரியாது. நான் அப்போ பிளஸ்-2தான் முடிச்சிருந்தேன்.

2 வருஷத்துல சினிமா இல்லைன்னு ஒரு ஸ்டேஜ் வந்தா நான் என்ன செய்வேன்?

அப்படி ஈசியா இருந்துடக் கூடாது இல்லையா… வாழ்க்கையில் எல்லாத்துக்கும் ‘பிளான் பி’ ஆப்ஷன் இருக்கணும்.

எல்லா விஷயத்திலும் பிளான் பி தேவையா?

நிச்சயமா இருக்கணும். ஒன்னையே நம்பியிருந்தா நாம தான் முட்டாள். நாம் ஆசைப்பட்ட விஷயம் திடீருன்னு நம்ம கைய விட்டு போயிருச்சுன்னா என்ன செய்ய முடியும்?

இந்த வயதிலும் இளமையாக இருக்கீங்களே… எப்படி?

அதென்னங்க இந்த வயசுலும்… ஏன் அப்படி என்ன வயசாயிருச்சு எனக்கு (கொஞ்சலாக அதட்டுகிறார்). எனக்கு ஒன்னும் பெரிசா வயசு ஆகல. ஆனாலும் என் அழகுக்கும், இளமைக்கும் காரணம் இருக்கு… அது என் அம்மாவும், அப்பாவும்தான்.

உலகத்தில் அதிர்ஷ்டசாலியாக யாரைப் பார்க்கிறீர்கள்?

நான்தான். இந்த இளமையை சந்தோஷமா அனுபவிச்சுட்டு வரேன்ல. எனக்கும் வயசாகும். முடி நரைக்கும். முகத்தில் சுருக்கம் வரும். அப்போதும் நான் அதிர்ஷ்டக்காரின்னுதான் சொல்வேன்.

உங்களுடன் இணைந்து நடித்ததில் பிடித்த நடிகர் யார்?

அப்படியெல்லாம் நான் நினைச்சது இல்ல. எல்லா ஹீரோக்களும் எனக்கு ‘பெஸ்ட்’டாத்தான் அமைஞ்சுருக்காங்க…

நடிக்கச் செல்லும் முன்பு ‘ஹோம் வர்க்’ செய்யும் பழக்கம் உண்டா?

இல்ல. எந்த குழப்பமும் இல்லாம மனசை ஓபனா வச்சு நடிக்கணும். அப்படி நடிக்க ஆரம்பிச்சா, எந்த கஷ்டமான விஷயமும் ஈசிதான்.

நடிகர்-நடிகைகள் அரசியலுக்கு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். இஷ்டம்னா வரலாம்.

நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் 2-ம் பாகம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?

‘விருமாண்டி’னு சொன்னா அதில் அன்னலெட்சுமி செத்து போயிட்டா… சோ எனக்கு வாய்ப்பில்ல.

ஆனாலும் அன்னலெட்சுமி மகள், தங்கச்சி அப்படி, இப்படின்னு ஏதாவது ஒரு கேரக்டர் இருக்கும் பட்சத்துல, ‘விருமாண்டி-2’ வரணும்னு ஆசைப்படுவேன்.

திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது?

அட்டகாசமாப் போகுது. என்ன புரிஞ்சுகிட்ட கணவர் கிடைச்சதுல ஐயம் வெரி ஹேப்பி.

கணவர் உங்களுக்கு கொடுத்த முதல் கிப்ட் என்ன?

ஏதோ ஒரு பொம்மைக்குட்டின்னு நினைக்கிறேன்.

குடும்பத்துடன் சமீபத்தில் சுற்றுலா சென்ற வெளிநாடு?

ரீசண்டாதான் லண்டன் போனோம்.

தவறவிட்டு வருத்தப்பட்ட படம் இருக்கிறதா?

அந்த மாதிரி எதுவும் இல்லை.

‘கிசுகிசு’ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னை பத்தி ‘கிசுகிசு’ வந்ததில்ல. சோ கவலைப்பட தேவையில்லைன்னு நினைக்கிறேன். தேவையில்லாத ‘கிசுகிசு’ எப்போதுமே தப்புதான்.

கனவு கதாபாத்திரம் என்று ஏதாவது இருக்கிறதா?

அந்த மாதிரி எதுவுமில்ல. கிடைக்கும் ரோல் எல்லாமே என்னோட ட்ரீம் ரோல்தான். அப்படி நினைச்சுதான் நடிப்பேன்.

காதல் பற்றி…

காதல் எப்பவுமே பெஸ்ட்தான்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக ரஜினிகாந்த் – கமல்ஹாசனிடம் கேட்க விரும்பும் கேள்வி?

‘டக்’குன்னு தோணல… இருந்தாலும் எப்படி இருக்கீங்கன்னு? ஆரம்பிப்பேன்.

மற்ற மொழி சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா?

மொழியும், கலாசாரமும் மட்டும்தான் வித்தியாசம். வேற எதுவும் இல்ல.

2-வது இன்னிங்ஸ் ஆட எந்த நோக்கத்துடன் வந்திருக்கிறீர்கள்?

நல்ல படங்கள் நடிக்கணும்னு மோட்டிவோட… இப்படி நம்பிக்கையுடன் முடித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division