இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடந்த 19 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. பல வரலாற்று தருணங்களுக்கு சாட்சியாக இருந்த பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு இந்தியா விடைகொடுத்தது.
நள்ளிரவில் இந்த நாடாளுமன்ற வளாகத்தினுள் இந்திய நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இதை ‘ஜனநாயக அருங்காட்சியகம்’ ஆக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பழைய கட்டடத்துக்கு ‘சம்விதன் சதன்’ என்று பெயரிடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
இப்போது புதிய இந்தியாவின் வருங்காலம் புதிய பாராளுமன்ற கட்டடத்தில் உருவாக்கப்படும். பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு கடந்த 18 ஆம் திகதி கடைசி நாள் ஆகும். புதிய பாராளுமன்ற கட்டடத்தில் பணிகள் தொடங்கியுள்ளன.
டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டடம் உலகப் புகழ் பெற்ற அரசியல் தொடர்புடைய கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட வட்டவடிவ பாராளுமன்றக் கட்டடம் இங்கிலாந்து கட்டடக்கலை பாணியில் உருவானதாகும்.
1927 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இந்தக் கட்டடத்தை ஆங்கிலேயப் பிரதிநிதி இர்வின் பிரபு திறந்து வைத்தார். இன்னும் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டடம் நூற்றாண்டு விழாவை காணப் போகிறது. கடந்த 97 ஆண்டு கால வரலாற்றில் இந்த பாராளுமன்றக் கட்டடத்தில் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மையமாக இந்த பாராளுமன்றக் கட்டடம் திகழ்கிறது. பழைமை காரணமாக இந்தக் கட்டடத்துக்கு விடைகொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன் பேரில் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்றக் கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு புதிய பாராளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டது. என்றாலும் பாராளுமன்ற கூட்டத் தொடர் பழைய பாராளுமன்ற கட்டடத்திலேயே நடந்து வந்தது.
இந்த நிலையில் அந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு கடந்த திங்கட்கிழமை விடைகொடுக்கப்பட்டது. இதன் மூலம் புகழ்பெற்ற இந்திய பாராளுமன்ற வட்டவடிவ கட்டடம் கடந்த திங்கட்கிழமை மாலை முதல் ஓய்வுக்குச் சென்றது. அதற்கு விடைகொடுக்கும் வகையில் கடந்த திங்களன்று பாராளுமன்றத்தில் ‘75 ஆண்டு கால வரலாற்றுப் பயணம்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் உரையாற்றினார்கள்.
இதன் மூலம் பழைய பாராளுமன்ற கட்டடம் கடந்த திங்கட்கிழமை தனது கடமையை வெற்றிகரமாக முடித்துள்ளது. மறுநாள் செவ்வாய் முதல் பாராளுமன்ற அலுவல்கள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் இப்பாராளுமன்ற கட்டடம் 96 ஆண்டுகள் பழைமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.
சமீப காலமாக பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் இரு அவைகளிலும் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. பழைய பாராளுமன்றம் தற்போதைய தேவைக்கு தகுந்தபடி இல்லை. அதாவது, இட வசதியாக இருக்கட்டும், பிறவசதிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் தற்போதைய காலத்திற்கு ஈடு கொடுக்கும் வசதியாக இது இல்லை.
பழைய கட்டடத்தில் பாராளுமன்ற மக்களவை மற்றும் மத்திய அரங்கு போன்றவை நெருக்கமானதாகவும் நிரம்பியும் உள்ளன. இதற்கு மேல் இந்த கட்டடங்களை விரிவுபடுத்த முடியாமல் போய்விட்டது. அமைச்சர்களுக்கான அலுவலகங்கள், சந்திப்பு அறைகள், உணவு அருந்துவதற்கான இடம், பத்திரிகையாளர்களுக்கான அறை ஆகியவை போதுமான இடவசதியுடன் இல்லை. எனவேதான் புதிய பிரமாண்டமான நாடாளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.
பழைய பாராளுமன்ற கட்டடத்தில் இருக்கும் மின்சார கட்டமைப்புகள், ஏ.சி வசதி, லைட்டிங், ஓடியோ விஷுவல் போன்ற வசதிகள் தற்போதைய தேவைக்கு ஏற்ற விதத்திலும் நவீனமாகவும், இல்லை.
பாதுகாப்பு ரீதியிலும் பழைய பாராளுமன்ற கட்டடம் உகந்ததாக இல்லை. அதாவது நிலநடுக்கம், தீவிபத்து ஆகிய பேரிடர்கள் ஏற்பட்டால் எம்.பிக்கள், ஊழியர்கள் வெளியேறுவதற்கான போதிய வசதி அங்கு இல்லை.
65 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் போதுமான அளவுக்கு இடவசதியும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் பல வசதிகள் உள்ளன. ரூ.850 கோடிக்கும் மேலாக செலவிட்டு பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும், கூட்டுக்கூட்டத்தில் 1,272 பேரும் அமரவும் இருக்கை வசதியுடன் இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது.
அரசியல் சாசன மண்டபம், உறுப்பினர்களுக்கான ஓய்வறைகள், நூலகம், நிலைக்குழு விசாரணை அறைகள், உணவு விடுதி, வாகன நிறுத்துமிடம் என இந்த நாடாளுமன்ற கட்டடம் பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ளது.
எஸ்.சாரங்கன