நான் 34 வருடங்களுக்கு முன்னர், 1989ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு, பல அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வகித்து, ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற வகையில், நாடும், நாட்டு மக்களும் முகங்கொடுத்துள்ள பாரியளவிலான நிதி நெருக்கடி தொடர்பில் விடயங்களை மக்களுக்குத் தெரிவிப்பது எனது கடமையாகவும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
இதனடிப்படையில் பெரும் நிதிக் கஷ்டங்களுக்கு மத்தியில் மத்திய அரசாங்கம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் நிதிப் பங்களிப்புடன் பகுதி பகுதியாக 15 மாதங்களினுள் நிறைவு செய்யப்படவுள்ள யட்டியந்தோட்டை கராகொடை பாலத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில், யார் நாட்டில் ஜனாதிபதியாக இருந்தாலும், யார் நிதியமைச்சராக இருந்தாலும், எந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தாலும் கண்டிப்பாக முகங்கொடுக்க வேண்டிய முதல் சவால் தொடர்பில் பின்வரும் விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டன.
2022ம் ஆண்டில், வருமான மட்டங்களில் மாற்றங்கள் இன்றி அனைத்து மக்கள் மீதும் விதிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி (மறைமுக வரிகள்) மற்றும் நேரடியாக நபர்களிடமிருந்து அறவிடப்படும் நேரடி வரிகள் மூலம் திறைசேரியினால் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 1751 பில்லியன் ரூபாய்களாகும். இதனை விடவும் தொடர்ந்தும் மக்கள் மீது வரிச் சுமைகளை சுமத்துவது மிகவும் சிரமமான விடயம் என்பதால் வரி வருமானத்தை உயர்த்தும் பெரும் சவாலுக்கு அதிகாரத்திற்கு வரும் எந்த ஒரு அரசாங்கமும் முகங் கொடுக்க நேரிடும். 1751 பில்லியன் மொத்த வருமானத்தில் 1265 பில்லியன் ரூபாய் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த வருமானத்தில் 72 வீதம் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
எனது அறிவு மற்றும் நம்பிக்கையின் பிரகாரம் உலகில் எந்த ஒரு நாட்டிலும் மொத்த வரி வருமானத்தில் நான்கில் மூன்று பகுதியை அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடுவதில்லை. இவ்வாறான நிலையினுள் ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கத்திடமும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய மாற்று நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா என நான் கேள்வி எழுப்பினேன்.
1751 பில்லியன் ரூபாய் மொத்த வரி வருமானத்தில் 506 பில்லியன் ரூபாய் சமுர்த்தி உள்ளிட்ட நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரி வருமானத்தில் 28 வீதம் செலவிடப்படுவது நிவாரணங்களுக்காகும்.
இதனடிப்படையில் அரச மொத்த வரி வருமானத்தினால் அந்த வருடத்தில் முக்கியமான இரண்டு செலவுகளைக் கூடச் செய்து கொள்ள க் கூடியதாக இருக்கவில்லை என தரவுகளுடன் நான் நிரூபித்துள்ளேன். 2022 ஆம் ஆண்டு அரசின் மொத்த வரி வருமானம் 1751 பில்லியன் ரூபாயாகும். அரச ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக 1265 பில்லியன் ரூபாய். சமுர்த்தி நிவாரணத்துக்காக 506 பில்லியன் ரூபாய். இந்த இரண்டு செலவுகளின் மொத்த தொகை 1771 பில்லியன் ரூபாய்களாகும். எனவே இந்த இரண்டு பிரதான செலவுகளைச் செய்வதற்குக் கூட அரசாங்கத்தின் வரி வருமானம் போதுமானதாக இல்லை.
இது இரண்டு செலவுகள் மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் அன்றாட இயக்கத்தின் போது செய்யப்படும் தொடர்ச்சியான செலவுகளின் பெறுபேறாக செலவிடப்படும் காலத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படும் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டி ஏற்படும் செலவுகள் தொடர் செலவுகள் அல்லது மூழ்கிய செலவுகள் எனப்படும். 2022ம் ஆண்டில், அரச கடன்களுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனாளிகளுக்குச் செலுத்தப்பட்ட வட்டி 1565 பில்லியன் ரூபாவாகும். 1751 பில்லியன் வரி வருமானத்தில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நிவாரணங்களை வழங்கியதன் பின்னர் ஒரு சதமேனும் திறைசேரியில் மீதப்படாத போது கடன்களுக்கான வட்டி எவ்வாறு செலுத்தப்பட்டது என எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதை நான் ஒருபோதும் காணவில்லை.
2022ஆம் ஆண்டில், வீதிகள், மின்சாரம், சுகாதாரம், கல்வி, அணைக்கட்டு, வேலி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் மூலதனப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2022ம் ஆண்டில் செய்யப்பட்ட செலவு 715 பில்லியன் ரூபாயாகும். அப்போது மொத்த வரி வருமானத்தில் சம்பளம், ஓய்வூதியம், நிவாரணங்களை வழங்கிய பின்னர் இந்த 715 பில்லியன் ரூபாய்கள் மூலதனச் செலவு எப்படிச் செலுத்தப்பட்டது?
புள்ளி விபர தரவுகளைச் சரியாகவே குறித்துக் கொண்டால் அரச வரிகள் மற்றும் வரிகள் அல்லாத மொத்த வருமானம் 1979 பில்லியன் ரூபாய்களாகும். (வருடத்துக்கு 2000 பில்லியன் ரூபாவினைக் கூட பெற்று கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முடியவில்லை) தொடர்ச்சியான மற்றும் மூலதனச் செலவுகளின் மொத்த தொகை 4472 பில்லியன் ரூபாவாகும். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான பற்றாக்குறை 2493 பில்லியனாகும். இலங்கை அரசாங்கம் பல்வேறு அவமானங்கள் விமர்சனங்களுக்கு மத்தியில் ரூபாய் 2000 பில்லியனுக்கும் குறைந்த வருமானத்தை ஈட்டிக் கொண்டு 4472 பில்லியன் ரூபாய் செலவு செய்து பற்றாக்குறையான 2493 பில்லியன் ரூபாவை எவ்வாறு பெற்றுக் கொள்வது? இதற்கான எளிய பதில் கடன் பெறுவதும், பணம் அச்சிடுவதுமாகும்.
வரும் காலங்களில் பதவிக்கு வரும் அரசாங்கங்களுக்கு வரவு செலவு திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு அதிக வெளிநாட்டு கடன்களைப் பெறுவது பாரிய சவாலாக இருக்கும். காரணம் 2022 டிசம்பர் 31ல் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 -முதல் 6 வருடங்களினுள் பதவிக்கு வரும் அரசாங்கம் அதன் கடன் தொகையில் 37வீதத்தையே செலுத்த வேண்டும். செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு கடன்களில் 51வீதம் அடுத்த 6 -முதல் 20 வருடங்களினுள்ளேயே முடிவடையும்.
சிறில் லியனராச்சி
தமிழில் – எம். எஸ். முஸப்பிர்