நாட்டில் ரயில் சேவைகளை அதிகரிக்க இந்திய அரசாங்கம் 23 இன்ஜின்களை வழங்க முன்வந்துள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, இந்த ரயில் இன்ஜின்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 23 ரயில் இன்ஜின்களை இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கவுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் ரயில்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த இன்ஜின்கள் மீளமைக்கப்பட்டு, இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
தற்போது ரயில் இன்ஜினொன்றின் விலை 100 கோடி ரூபாவுக்கும் (ஒரு பில்லியன் ரூபா) அதிகமாக உள்ளதாகவும் இதற்கமைய இந்தியாவிலிருந்து வழங்கப்படும் இன்ஜின்களின் பெறுமதி 2,300 கோடி ரூபாவுக்கும் (23 பில்லியன் ரூபா) அதிகமாக உள்ளதாகவும், பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
M8, M10 மற்றும் M11 ரக இன்ஜின்கள் மற்றும் S11, S13 மற்றும் S13A பவர் செட் ரயில்கள் மற்றும் 160 நவீன ரயில் பெட்டிகள் ஹெவி டியூட்டி இந்திய வண்டிகள் மற்றும் இன்ஜின்கள் ஆகியன ஏற்கெனவே இலங்கை ரயில் சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அவை இலங்கையின் மொத்த ரயில் சேவையில் 50% இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.