Home » செயற்கை நுண்ணறிவு கற்கைநெறிகளை கொண்ட இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம்

செயற்கை நுண்ணறிவு கற்கைநெறிகளை கொண்ட இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம்

விஷேட நேர்காணலில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

by Damith Pushpika
September 24, 2023 6:03 am 0 comment

கிழக்கு மாகாணத்திற்கான முக்கிய நுழைவாயில்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான பாதையின் தொடக்கத்தில் அமைவுற்றுள்ள ரிதிதென்னவில் பெட்டிக்கலோ கெம்பஸ் (Batticaloa campus) எனப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகத்தை அன்றைய அரசாங்கம் 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினரின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்தது. என்றாலும் இப் பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்னாள் ஆளுநரும் இப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் 2023 செப்டம்பர் 2ஆம் திகதி மீண்டும் கையளிக்கப்பட்டதோடு இராணுவத்தினரும் அங்கிருந்து வெளியேறினர். இது தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அளித்துள்ள விஷேட பேட்டியை இங்கே தருகின்றோம்.

கேள்வி: உங்களிடம் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் நீங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில்: 2019ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவிருந்த சூழலில் தான் இப்பல்கலைக்கழகத்தை அரசாங்கம் இராணுவத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வந்தது. அன்று தொடக்கம் கடந்த ஐந்து வருடங்களாக இராணுவத்தின் பொறுப்பில் தான் இருந்த இப்பல்கலைக்கழகத்தை மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதற்கேற்ப பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள், பேச்சுவார்தைகள் நடாத்தப்பட்ட பின்னர் மீண்டும் இப்பல்கலைக்கழகம் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கே புகழனைத்தும்.

இப்பல்கலைக்கழகத்தை சட்ட ரீதியாக எம்மிடம் ஒப்படைப்பதில் ஜனாதிபதி விஷேட கவனம் எடுத்துக் கொண்டார். அதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எமது விஷேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப் பல்கலைக்கழகத்தை ஒப்படைப்பதற்காக ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும், பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரட்நாயக்க அதிக பங்களிப்புக்களை நல்கினார். அத்தோடு ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அமைச்சின் உயரதிகாரிகள், இராணுவத் தளபதி உட்பட இராணுவ உயரதிகாரிகள் அடங்கலாக சகலரும் தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் எம் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அதேபோன்று இப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையேற்றது முதல் மீண்டும் எமக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த எல்லா மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

கேள்வி: நாட்டில் எத்தனையோ தனியார் பல்கலைக்கழகங்கள் இருந்த போதிலும் இப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் இராணுவத்தின் பொறுப்பில் கொண்டு வரக் காரணம் எதுவாக இருக்குமெனக் கருதுகிறீர்கள்?

பதில்: இப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமான காலப்பகுதி முதல் இப் பல்கலைக்கழகம் குறித்து காழ்ப்புணர்வைக் கொண்டிருந்தவர்கள் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். சில இனவாதிகள் இப் பல்கலைக்கழகத்தை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இதனை ஷரிஆ பல்கலைக்கழகம் என்றார்கள்.

இப் பல்கலைக்கழகத்திற்கான பணம் சட்டத்துக்கு முரணான முறையில் கொண்டு வரப்பட்டதாகக் கூறினார்கள். இவ்வாறான பின்புலத்தில் தான் இப் பல்கலைக்கழகம் இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாகக் கருதுகிறேன். அதுவும் பாதுக்கவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்துடன் (Sri lnaka Technological Campus) இணைந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு உடன்படிக்கை செய்திருந்த சூழலில் தான் இப்பல்கலைக்கழகம் பொறுப்பேற்கப்பட்டது.

ஆனால் இப்பல்கலைக்கழகம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள், உண்மைக்குப் புறம்பானவை என்பன உறுதியாகியுள்ளது. உண்மைகள் ஒரு போதும் அழியாது. நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும். இப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக நான் எடுத்த முயற்சிகள், பட்ட கஷ்டங்களை என் இறைவன் நன்கறிவான். அதனால் அவன் என்னை ஒரு போதும் கைவிட மாட்டான் என்று நான் உறுதியாக நம்பி இருந்தேன். அந்நம்பிக்கை வீண் போகவில்லை. பல்கலைக்கழகம் தற்போது எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி: நீங்கள் இவ்வாறான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்ததற்கான நோக்கம் யாது?

பதில்: 2030ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு பொறியியலாளர், ஒரு மருத்துவர், ஒரு ரொபோ பொறியியலாளர், தொழில்நுட்ப நிபுணர் இருக்க வேண்டும். ஏழை, எளிய குடும்பங்களில் இருந்தும் அவர்கள் உருவாக வேண்டும். எல்லா மக்களும் வளமான கல்வி ஊடாக முன்னேற வேண்டும்.

அத்தோடு தமிழ், முஸ்லிம், சிங்களம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா இன, மத மாணவர்களும் ஒன்றாகக் கல்வி பெற வேண்டும். அதன் ஊடாக பல்லின மாணவர்கள் மத்தியில் சமய, கலாசார புரிந்துணர்வுகள் ஏற்படும். கருத்துவேறுபாடுகள் நீங்கும். அவ்வாறான ஒரு சமுதாயம் உருவாகும் போது நாட்டில் அமைதி, சமாதானம் தளைத்தோங்கும். அது உண்மையாகவே நாட்டை நேசிக்கும் சமுதாயமாக இருக்கும். அதற்காக ஒரு பத்தாயிரம் மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பெறக்கூடிய பல்கலைக்கழகமொன்றை நான் கனவு கண்டேன். அக்கனவை நனவாக்கும் வகையில் பல முயற்சிகளை முன்னெடுத்தேன். இது தொடர்பில் சவுதி அரேபியாவுக்கு சில தடவைகள் சென்று சந்திப்புக்களை மேற்கொண்டேன். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்காவின் இமாம் அல் ஜுப்பாலி என்னுடன் தொடர்பு கொண்டு வரவழைத்து 180 கோடி ரூபாவை மனமுவந்து வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு எனது கனவை நனவாக்கும் வகையில் இப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தேன். இதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் எம்மிடமில்லை.

கேள்வி: தற்போது பல்கலைக்கழகம் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள்?

பதில்: நாம் ஏற்கனவே எஸ்.எல்.ரி.சி பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க உடன்படிக்கை செய்துள்ளதற்கு அமைய அதே பல்கலைக்கழகத்துடன் இணைந்து இங்கு கற்கை நெறிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். எஸ்.எல்.ரி.சி பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் கற்கை நெறிகளான பொறியியல், தொழில்நுட்பம் உட்பட வரைபடக்கலை, விவசாயம், விவசாய தொழில்நுட்பம் போன்ற கற்கை நெறிகளை ஆரம்பிப்பது குறித்தும் ஒவ்வொரு கற்கை நெறிக்கும் எவ்வளவு மாணவர்களை சேர்த்துக் கொள்வது குறித்தும் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம்.

எதிர்வரும் ஒன்றரை மாத காலத்திற்குள் இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக சேவைகள் அனைத்தையும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கேற்ப துணைவேந்தர், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஆளணியினரை நியமிக்கும் பொறுப்பு எஸ்.எல்.ரி.சி பல்கலைக்கழகத்திற்கு உள்ளது. அதனடிப்படையில் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஆளணியினரை ஆட்சேர்க்கவும் கற்கை நெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளவுமென ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பங்களைக் கோர உள்ளோம். ஜனவரி முதல் மாணவர்கள் உள்வாங்கப்படுவர்.

கேள்வி: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கற்கை நெறிகள் இப்பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: நிச்சயமாக. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) கற்கை நெறிகள் இப்பல்கலைக்கழகத்தில் விஷேடமாக ஆரம்பிக்கப்படும். இதன் ஊடாக இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிகளை உள்ளடக்கிய பல்லைக்கழகமாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் விளங்கும். இது தொடர்பில் எஸ்.எல்.ரி.சி பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடியுள்ளோம்.

செயற்கை நுண்ணறிவுத் துறையானது தற்போது உலகில் வளர்ச்சி பெற்றுவரும் முக்கிய துறைகளில் ஒன்று என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் அல்லது பெப்ரவரி முற்பகுதியில் இப்பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: இப்பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்ப்பு எவ்வாறு இடம்பெறுமென சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: ஆம். பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு என்பவற்றின் ஒழுங்குவிதிகளுக்கு அமையவே இப்பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்கள் உள்வாங்கப்படுவர். உயர்தரக் கல்வி பெறுபேறுகளுக்கு அமைய எஸ்.எல்.ரி. பல்கலைக்கழகம் மாணவர் சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும். எமது விருப்பப்படியோ வேறு எவரது தேவைக்கு அமையவோ மாணவர்கள் உள்வாங்கல் இடம்பெறாது.

நாட்டின் எப்பகுதியைச் சேர்ந்த மாணவரும் இங்கு சேர்ந்து கற்க முடியும். இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான பல்கலைக்கழகம் அல்ல. நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் உரியது. அனைத்து இன, மத மக்களுக்கும் இங்கு சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்கவே எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: நீங்கள் குறிப்பிடும் கல்வி நடவடிக்கைகளுக்காக பல்கலைக்கழகம் கொண்டுள்ள வசதிகள்?

பதில்: இப் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் தங்கியிருந்து கற்பதற்கான தங்குமிட வசதி உள்ளது. 1200 ஆளணியினர் இங்கு கடமையாற்ற முடியும்.

அதேநேரம் ஸ்மார்ட் வகுப்பறைகள், தொழில்நுட்ப வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், சிவில் பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல், இலத்திரனியியல் பொறியியல், வரைபடக்கலை, குவண்டிட்டி சேர்வே, விவசாய தொழில்நுட்பம் ஆகிய கற்கைகளுக்கு அவசியமான வசதிகளும் இங்குள்ளன.

அத்தோடு பொதுவான விரிவுரை மண்டபங்கள், 600 மாணவர்கள் அமர்ந்து கற்கக்கூடிய விரிவுரை மண்டபங்கள், 300 மாணவர்கள் அமர்ந்து கற்கக்கூடிய விரிவுரை மண்டபங்கள் என்பனவும் இங்குள்ளன. இவ்வாறான வசதிகள் நாட்டில் வேறு எங்கும் இல்லை. இங்கு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாது அடுத்த மட்டத்தில் இருக்கும் மாணவர்கள் புலமைப்பரிசில் அடிப்படையில் இப்பல்கலைக்கழகத்தில் கற்கவும் வாய்ப்பளிக்க இருக்கின்றோம்.

கேள்வி: நிறைவாக நீங்கள் குறிப்பிட விரும்புவதென்ன?

பதில்: இப்பல்கலைக்கழகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கும் இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி அவர்களை சிறந்த ஆளுமை மிக்கவர்களாக உருவாக்குவதற்கான விஷேட பல்கலைக்கழகம் இது.

ஜப்பான், தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் போதே மாணவர்களுக்கு துறைசார் தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவது போன்று இங்கும் தொழில்சார் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

அதனால் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாட்டின் நலன்களை முன்னிலைப்படுத்தி சகல அரசியல் தலைமைகளும் இம்முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division