தேசிய அரசுகளுக்கு இடையிலான உறவே சர்வதேச அரசியல் என்று கருதப்படுகிறது. நாடுகளின் அரசியல், பொருளாதார, இராணுவ தேவைகளுக்கான உறவு பரஸ்பரம் சுமூகமான சூழலால் நிகழ்ந்து வருகிறது. இதில் நெருக்கடி நிலை ஏற்படுகின்ற போதே இராஜதந்திர உறவில் விரிசலும் மோதலும் நிகழ்கிறது. அத்தகைய இராஜதந்திர விரிசலுக்கான ஒரு களத்தை உலகம் தற்போது எதிர்கொண்டுள்ளது.
கனடாவும் -இந்தியாவும் தமக்குள்ளே ஏற்படுத்தியுள்ள முறுகல் நிலையை இராஜதந்திர எதிர்ப்பு சக்தி என்றே அரசறிவியல் அளவீடு செய்கிறது. அதாவது Diplomatic Immunity என்ற வார்த்தையால் அளவிடப்படுகிறது. இரு நாடுகளும் தமக்குள் எழுந்துள்ள இராஜதந்திர முறுகலை சரிசெய்ய எடுக்கும் நடவடிக்கையாகவே தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு நிபந்தனை விதித்துள்ளதாக அமைந்துள்ளது. அதனையே Diplomatic Immunity எனும் வார்த்தையினால் அழைக்கின்றனர். இதனை புரிந்து கொள்வது சீக்கியர்களுக்கான விடயமாக உள்ளதோ இல்லையோ தெரியாது. ஆனால் நிச்சயம் இலங்கைத் தமிழருக்கு அவசியமானது. காரணம் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் என்றவகையில் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர முறுகலை நிரந்தரமான பகையாகவோ முரண்பாடாகவோ கொள்ள முடியாது என்ற அடிப்படை புரிதல் அவசியமானது. இக்கட்டுரையும் அத்தகைய முறுகலின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்புக்களையும் விளங்கிக் கொள்வதாக அமையவுள்ளது.
முதலில் கனடாவுக்கும் இந்தியாவுக்குமான முறுகலுக்கான அடிப்படையை விளங்கிக் கொள்ள முயல்வோம். கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இந்தியாவால் தேடப்படும் பிரிவினைவாதி எனவும் இந்தியாவிலிருந்து தப்பி கனடாவில் குடியேறிவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த கொலையுடன் இந்திய அரச முகவர்களின் தலையீடு உள்ளதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் இந்தியா தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இத்தகைய குற்றச்சாட்டை அடுத்து இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது. பதிலுக்கு கனடா நாட்டு அதிகாரியை 5 நாட்கள் அவகாசத்தில் வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே கனடாவில் வசிக்கும் இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டுமென சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே நேரம் 2017இல் போலிக்கடவுச் சீட்டு மூலம் பஞ்சாப்பிலிருந்து தப்பிச் சென்ற காலிஸ்த்தான் பிரிவினைவாதியான சுக்தூல் சிங் 21.09.2023 அன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆரம்பத்தில் குழுக்களுக்கிடையிலான மோதலாக கருதப்பட்டாலும் தற்போது இந்திய அரச அதிகாரிகளின் நடவடிக்கை என்றே உரையாடப்படுகிறது.
இதனை நிரந்தரமான முரண்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனைப் பொறுத்தே இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை அதீதமானதாக அமைகிறதா என்ற கேள்வி இயல்பாகவே உள்ளது. காரணம் கனடா பயங்கரவாதத்தின் புகலிடம் எனும் வார்த்தைப் பிரயோகத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன் கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கான வீசா வழங்கும் நடைமுறையை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியா கனடா செல்லும் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு 20.09.2023 முதல் தொடர்ச்சியாக பயண எச்சரிக்கை விடுத்து வருகிறது. மறுபக்கத்தில் கனடா தனது புலனாய்வுத்துறையினரது விசாரணை மூலம் குற்றவாளிகளை கண்டறிய முயலுகிறது. அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே கனேடியப் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக கனேடிய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இந்தியா இவை அனைத்தையும் நிராகரித்து வருகிறது. சீக்கிய பிரிவினைவாதிகளது கனடா படுகொலைக்கும் இந்தியத் தரப்புக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது என இந்தியா விவாதிக்கின்றது.
இதேநேரம் இந்த விவகாரத்தைப் பொறுத்து இரு விவாதங்கள் எழுந்துள்ளன. ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறை இதில் தொடர்புபட்டதென்றும் அது இந்திய புலனாய்வுக்கே சிறப்பான செயல் என்றும் அதன் துணிச்சலையும் உத்தியையும் வேறு புலனாய்வுத் துறையுடன் தொடர்புபடுத்தி விவாதிக்கின்றனர். இரண்டு, காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் இந்திய ஒன்றியத்திற்குள் ஆபத்தான அரசியலாகவே உள்ளது எனவும், பொற்கோயில் தாக்குதலுடன் அது முடிவுக்கு வரவில்லை என்பதையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது சார்ந்து இந்தியப் புலனாய்வு செயல்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. ஆனால் இதனைக் கடந்து இதன் உரையாடல் பார்க்கப்பட வேண்டும். காரணம் இரு நாட்டுக்குமான இராஜதந்திர முறுகலை சர்செய்வதில் உலக நாடுகள் அதிக முனைப்புக் கொள்கின்றன. அதற்கான நியாயப்பாடுகள் அதிகமாக உள்ளன.
ஒன்று, இந்தியா வளர்ந்துவரும் நாடு மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் மூலோபாய நாடு இந்தியா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதன் புவிசார் அமைவிடத்தால் மட்டுமன்றி மக்கள் தொகையாலும் பொருளாதார உறவினாலும் இராணுவ நலன்கருதியும் கேந்திர முக்கியத்துவம் பொருந்திய நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கும் அதே அளவான முக்கியத்துவம். சீனா, ரஷ்யாவுக்கும் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க கண்டத்து நாடுகளுக்கும் இந்தியா மூலோபாய சக்தியாக திகழுகிறது. இது கனடாவுக்கும் பொருந்தும்.
இரண்டு, இதனை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளும் விதத்திலேயே மேற்குலக நாடுகளின் அறிவிப்புகள் அமைந்துள்ளன. குறிப்பாக அமெரிக்க-, இந்திய உறவுக் கட்டமைப்பு உறவாக மாறியுள்ளது. பனிப்போருக்குள் சோவியத் யூனியனுடன் கொண்ட உறவை இந்தியா தற்போது அமெரிக்காவுடன் ஏற்படுத்துவதில் முன்னேறியுள்ளது எனலாம். இதற்குள் குவாட் நாடுகளது இந்தோ-, பசுபிக் உறவும், நேட்டோ நாடுகளுடனான உறவும் அடங்கும். இந்தியா நேட்டோவுடன் நேரடியாக பங்கெடுக்காத போதும் நேட்டோ நாடுகளுடன் உறவை பேணுவதில் கவனம் கொண்டு செயல்படுகிறது. கனடா ஒரு நேட்டோ நாடு என்பதை கவனத்தில் கொள்வதுடன் அமெரிக்காவின் பாதுகாப்பு நிழலிலேயே கனடாவின் உலகளாவிய அரசியல் போக்கு காணப்படுகிறது. அதனால் அமெரிக்காவின் நலனுக்குள் கனடாவின் நலனும் உட்பட்டுள்ளது. அதனாலேயே அமெரிக்கா கனடா, -இந்திய இராஜதந்திர முறுகலை பற்றி ஆழ்ந்த கவலை கொள்வதாகவும் கனடாவின் விசாரணை தொடர்வதும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிக முக்கியமானதென தெரிவித்துள்ளது. கனடா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிகமான சீக்கியர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாக உள்ளனர். அதேநேரம் அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்று ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில் கவலையை பகிர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. பிரிட்டனைப் பொறுத்தவரை இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடுவதனால் அதிக கவனமாக செயல்படுகிறது. குறிப்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி, கனடா எழுப்பும் கேள்விகளுக்கு பிரிட்டன் செவிசாய்க்கும், அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எனவும் இரு நாடுகளும் பிரித்தானியாவின் நெருக்கமான நண்பர்கள் என்பதையும் கோடிகாட்டியுள்ளார்.
மூன்று, கனடாவின் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் நிலையில் சீக்கியரது வாக்குகளை இலக்காக கொண்ட அரசியல் ஒன்றுக்கான வாய்ப்புப் பற்றிய உரையாடலும் உண்டு. அத்தகைய உரையாடல் இந்தியாவுக்கும் உண்டு. குறிப்பாக இந்தியாவின் தற்போதைய ஆட்சியை நீடிக்கும் திட்டமிடலுடன் பாரதீய ஜனதாக் கட்சியின் அரசியல் நகர்வுகள் அமையும் போது இந்திய தேசத்தின் பிரச்சினையாக கனடாவுடனான உறவு பார்க்ப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல நீயூயோர்க் ரைம்ஸ் கூட இந்த விவகாரத்தை முன்னிறுத்தி உரையாடிவருகிறது. கனடா பிரதமரது குற்றச்சாட்டு பீரங்கிக் குண்டுகளுக்கு ஒப்பானதென நீயூயோர்க் ரைம்ஸ் அறிவித்துள்ளது. இந்திரா காந்தியின் படுகொலை பற்றிய உரையாடலை முதன்மைப்படுத்தாது இந்தியா, சீக்கியர் மீதான நடவடிக்கைகளை அந்த செய்தியறிக்கை முன்னிலைப்படுத்தியுள்ளதுடன் சீக்கிய சமூகம் அவுஸ்ரேலியாவிலும் கனடாவிலும் வலுவான சமூகமாக எழுச்சி பெறுவதாக குறிப்பிடுகிறது. எனவே இந்தியாவளவில் மட்டுமல்ல உலகளாவிய தளத்திலும் இந்தியாவினதும் இந்தியப் பிரதமரதும் தனித்துவம் உச்சரிக்கப்படுகிறது. அடுத்து இந்தியாவின் ஆட்சியை பாரதீய ஜனதாக்கட்சி கைப்பற்றுவது மேற்குலகத்திற்கு இலாபகரமானதாக அமையும் என்ற எடுகோள் காணப்படுவதாகவே தெரிகிறது.
எனவே இந்திய−கனடா இராஜதந்திர முறுகலானது unwelcome person எனும் நிலையை எட்டியுள்ளது. இது ஒரு இராஜதந்திர சொல்லாடல். இதன் மூலம் இலத்தீனிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறியது. இலத்தீனில் persona non grata என்றே அழைத்தனர். இதுவே Diplomatic Immunity என்பதற்கான அடிப்படை நியதியாகும். இதனால் எந்த சீர்குலைவும் உறவுகளில் ஏற்படுவதில்லை. மாறாக அத்தகைய வலுவூட்டலை ஏற்படுத்தி உறவை பாதுகாத்துக் கொள்வதாகும். இதற்காக தேசிய இனங்கள் தமது இருப்பினை இராஜதந்திர முறுகலுக்கூடாக வெற்றி கொள்ளலாம் என்று கருதுவது கடினமாகவே தெரிகிறது.