Home » சுவனத்துப் பூங்காவை நோக்கி…!

சுவனத்துப் பூங்காவை நோக்கி…!

by Damith Pushpika
September 17, 2023 5:25 am 0 comment

தினம் தினம் சுடுகின்ற மனத்தினளாய் சுமையா வெந்து தணிந்து கொண்டிருக்கின்றாள். அவளது இதயத்து வேதனையை எவராலும் புரிந்துகொள்ளவியலாத இருள் சூழ்ந்த வாழ்க்ைகயோட்டத்தில் தனித்து விடப்பட்டவள் போன்று மனம் குமுறிக்ெகாண்டிருக்கின்றாள், அந்த இளம் மொட்டு.

சுமையாவை பொறுத்தவரை கடந்து போதல் என்பது காலத்தின் கட்டாயமானதே. இரவும் பகலும் அவளுக்கு ஒன்றுதான். இப்போதெல்லாம் அவளை யாரும் கண்டுகொள்வதில்லை. வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவள் ஜடமாகவே இருந்தாள். மனது கொதித்துக் கொண்டே இருந்தது.

ஒரு போதும் முக்காடு கழற்றாத ஒரு பிறவி அவள். குறைவில்லாத அழகு நிரம்பியவள். பார்ப்போர் கண்படுமளவுக்கு சுந்தரியாகவே காணப்பட்டாள். ஆனால் அவள் அனுபவிக்கின்ற துயரத்தை அவளைப் பெற்றெடுத்த தாய் சுபைதா மட்டுமே அறிவாள். குடும்பத்துக்கு தானொரு சுமை என்ற வேதனையில் கடந்து போகிறது சுமையாவின் காலம்.

இரவும் பகலும் சுமையாவுக்கு ஒன்றுதான். சுமையா பிறந்து பத்து வயது வரையில் ஊரின் இயற்கை அழகில் மயங்கிக் கிடந்தாள். தோழிகளோடு துள்ளி விளையாடிய அந்தக் காலம் அவளைால் மறக்கவே முடியாதது. படிப்பிலும் கெட்டிக்காரியாகவே இருந்தாள். அந்தப் பத்து வயது வரை, ஐந்தாம் வகுப்பு வரை படித்தவள், அதுவரையில் இயற்கையை கண்கூடாகவே கண்டு ரசித்தவள் அதன் பின்னர் சிறிது சிறிதாக தன் பார்வையை இழக்க தொடங்கினாள்.

இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாகவே சுமையாவை சிறந்த கண் மருத்துவரிடம் காட்டினர். அடுத்தடுத்து கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதும் அவளது கண் நோயை சரியாக அடையாளம் காண முடியாது டாக்டர்கள் தடுமாறிப் போனார்கள். கண்ணுக்கு கண்ணாடி போட்டுப் பார்த்தார்கள். அதனால் எந்தப் பயனும் கிட்டவில்லை.

கொழும்பில் கண் மருத்துவமனையில் பல மாதங்களாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போதிலும் சுமையாவின் கண்ணில் ஏற்பட்ட வியாதியை கண்டு பிடிக்க முடியவில்லை.

டாக்டர்களும் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பதிமூன்று வயதாகும்போது சுமையாவின் பார்வை முழுமையாக குன்றிப் போய்விட்டது. சுமையாவின் தந்தை முஸ்தகீம் ஹாஜியார் தனது முழுச் சொத்தையும் இழக்கத் தயார். தன் ஒரே மகளின் கண்பார்வை கிட்டினால் போதுமென்று எதிர்பார்த்தார். ஆசையோடு பெற்றெடுத்த மகளின் நிலை கண்டு வேதனைக்குள் தள்ளப்பட்டார். முஸ்தகீம் ஹாஜியாரும் சுமையாவின் தாய் சுபைதாவும் ஐவேளை தொழுகையில் இறைவனிடம் கரமேந்திப் பிரார்த்தித்தார்கள்.

அந்தத் தாயும் தந்தையும் கண்ணீர்விட்டு அழாத நாளில்லை. அந்த வீடே இருள் சூழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்களுக்கு உலகமே இருண்டு போனது. பெரும் கவலையில் மூழ்கினர். இறைவனிடம் மன்றாடாத நாளே இல்லை. படைத்தவன் தனது மகளைக் கைவிட்டான் என்ற உணர்வில் குடும்பமே துவண்டுபோனது.

இப்படியே காலம் கரைந்தோடியது. சுமையா இப்போது இருபது வயதைத் தாண்டிவிட்டாள். தன்னால் இனிமேல் இந்த உலகத்தையும், தாய் தந்தையையும் உறவுகளையும் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தில் மூழ்கிப்போனாள். இப்போதெல்லாம் சுமையா எல்லாவற்றையும் தன் மகன் கண்ணால் மட்டுமே பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

மகளின் வாழ்க்ைக இருளாகிப் போன வேதனையில் தாயும் தந்தையும் அனைத்துச் சந்தோஷங்களையும் இழந்து போனார்கள். அந்த இளம் மொட்டு மொட்டிலேயே கருகிப்போன வேதனையால் ஊரே கலங்கி நின்றது. காலக்ெகாடுமை இந்தப்பிள்ளைக்கு வருவதற்கு என்ன பாவமோ என்று ஊரே வேதனையில் மூழ்கியது.

சுமையாவின் காலம் தொழுகை விரிப்போடு முடங்கிப்போனது. சில சந்தர்ப்பங்களில் தாயும் மகளும் ஒரே தொழுகை விரிப்பில் நின்றுகொண்டு இரவு நீண்ட நேரம் கால்கடுக்க நின்றவண்ணம் தொழுவதிலும், பிரார்த்தனை செய்வதிலும் செலவிட்டனர். இறைவனிடம் மன்றாடினர்.

தாயும், மகளும் இரவு பூராவும் தொழுகையில் அழுதழுது பிரார்த்திப்பதை பார்த்து முஸ்தகீம் ஹாஜியார் அழுதுபுலம்பினார். சிறு பாவமேனும் செய்ய நினைக்காத தமது குடும்பத்திற்கு இப்படியொரு சோதனையைா? யா அல்லாஹ் உனது பெருங் கருணையை எனது மகள்மீது சொரிய மாட்டாயா? என்று தொழும் பாயிலிருந்தபடியே அழுது புலம்பினார்.

இப்படியே காலவோட்டம் நீண்டுகொண்டே போனது. தனது பிள்ளைக்கு ஒரு நல்வழியை காட்டுமாறு பள்ளிவாசலுக்குப் போய் தொழும் நேரங்களிலெல்லாம் துஆச் செய்யத்தவறமாட்டார். ஊரே அந்தப்பிள்ளைக்காக பிரார்த்தித்தது இப்படியொரு சோதனை எதற்காக நாம் பாவப்பட்ட ஜன்மங்களா? என குடும்பமே கவலையில் மூழ்கியது.

வீடும், ஊரும் ஏன் உலகமே தனக்காக அழுவதை பொறுத்துக்ெகாள்ள முடியாமல் சுமையா தான் தொழும் போதெல்லாம் அவர்களுக்காகவும் பிரார்த்திக்கத் தவறவில்லை. ஒரு நாளா இரண்டு நாளா இருபது வருடங்கள் அந்த ஊரே இருள் சூழ்ந்து வெறுமையில் துவண்டுபோனது.

காலவோட்டத்தில் ஒரு நாள் சுமையா பஜ்ர் தொழுகையை முடித்துவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது அவளது உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அவளது மனக்கண் திறந்து கொண்டது போன்ற உணர்வுடன் கூடிய மகிழ்ச்சி பூத்தது. காலையில் கவலையில்லாத மனத்துடன் வாப்பாவையும், உம்மாவையும் பார்த்து எனக்கு ஒரு ஆசை. அதை நிறைவேற்ற உதவ முடியுமா? எனக் கேட்டாள்.

மகள் நீ இந்த உலகில் எதைக்ேகட்டாலும் நிறைவேற்றுவேன் என்றார் தகப்பன் முஸ்தகீம் ஹாஜியார்.

வாப்பா! என்னை ஒரு தடவை உம்ராவுக்கு அழைத்துச் செல்வீர்களா? எனக் கேட்டாள். சுமையாவின் கண்களை பறித்த இறைவன் அவளது மனக்கண்களை திறந்துவிட்டான். அவளிடம் ஆன்மீக பண்புகள் வளர்ந்தோங்கத் தொடங்கின. காலையும் மாலையும் ஒவ்வொரு தொழுகையின் போதும் குர்ஆனை ஓதிவந்தாள். தனது பெற்றோருக்காக ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்திக்கத் தவறமாட்டாள்.

தமது மகளின் மனக்கண்ணை இறைவன் திறந்துவிட்டான் என்பதை அந்தக் குடும்பம் உணர்ந்துகொண்டது. கருணை மிக்க இறைவன் தங்களது பிரார்த்தனைக்குப் பதில் தந்துவிட்டதாக நினைத்து தாயும், தகப்பனும் ஆறுதலடைந்தனர்.

மறுநாள் காலை, பஜ்ர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் சென்ற முஸ்தகீம் ஹாஜியார் பள்ளிவாசல் இமாம் முஸ்தபா ஆலிமைச் சந்தித்து, தமது மகளின் கோரிக்ைகயை முன்வைத்தார். இமாம் முஸ்தபா ஆலிம், தனது தொழுகை முஸல்லாவில் இருந்தபடியே புன்முறுவல் பூத்தவராக இரு கரமேந்தியபடியே இறைவனுக்கு நன்றி கூறிப் பிரார்த்தித்துவிட்டு “ஹாஜியார்! உங்கள் மகள் சுமையாவின் இதயக் கண்களை படைத்த ரப்பு திறந்துவிட்டான். அந்தப் பிள்ளையின் ஆசையை உடனடியாக நிறைவேற்றுங்கள் எனக்கூறி அவசரப்படுத்தினார்.

முஸ்தகீம் ஹாஜியார் உடனடியாக மகளுக்கும், மனைவிக்கும் பாஸ்போர்ட் செய்து உம்ரா பயணத்துக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தினார். மறுவாரமே அவர்களது பயணத்துக்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டன. அவர்களுக்காக உறவுகளும் ஊராரும் இறைவனிடம் பிரார்த்தித்தனர்.

உம்ராவுக்குப் புறப்படும் நாளில் தனது உறவுகளையும் தனக்காக பிரார்த்தித்த ஊர் மக்களையும் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து தனக்காக துஆச் செய்யுமாறு வேண்டிக்ெகாண்டாள். அத்தோடு எல்லோரையும் ஒருவேளை கூடத் தவறமல் தொழுது வருமாறும் வலியுறுத்திக் கூறிய சுமையா தனக்காக, இரவு பகல் பாராது பிரார்த்தித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தாள். இறைவன் நம் அனைவரையும் சுவனத்தின் பக்கம் பொருந்திக்ெகாள்வானாக என்றும் மனநிறைவோடு அவள் து ஆச் செய்தாள்.

அன்றிரவு சுமையாவின் வீடும், அந்த ஊரும் சந்தோஷப்பட்டதோடு மறுபுறம் அனைத்து வீடுகளிலும் பெண்கள் கூடி இறை பிரார்த்தனையிலீடுபட்டனர்.

நாளை விடியும் வேளையில் பள்ளிவாசல் வழமைக்கு மாறாக மக்களால் நிரம்பி வழிந்தது. பஜ்ர் தொழுகையை அடுத்து சுமையா தனது தாய் தந்தையருடன் விமான நிலையத்தை நோக்கிப் புறப்படத் தயாரானாள். வீட்டைவிட்டு வெளியே வந்தபோது சுமையாவின் கண்கள் தன்னை அறியாமலேயே கண்ணீரை கொட்டியது. அவளது விழியோரமாக கண்ணீர் ஆற்றுவெள்ளம் போல் கரைந்தோடியது. தனது தாய் மண்ணுக்கு திரும்பி வரப்போவதில்லை என்ற உணர்வு அவளில் நிலைகுத்தி நின்றது.

வெளியே வந்த சுமையா எல்லோருக்கும் சலாம் உரைத்தாள். தனது புறக்கண்களால் அங்குகூடி நின்றவர்களைப் பார்க்க முடியாத போதும் எல்லோரையும் அகக்கண்களால் கண்டாள். அவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. விம்மிய இதயத்தோடு தாயின் உதவியுடன் வாகனத்தில் ஏறிக்ெகாண்டாள். தந்தை முஸ்தகீம் ஹாஜியாராலும் பேசமுடியவில்லை. வாயடைத்துப் போனவராக வாகனத்தில் ஏறிக்ெகாண்டார்.

கூடிநின்றவர்கள் உரத்த தொனியில் சலாமுரைக்க சுமையா மௌனியாக கையசைத்து விடைபெற்றாள். முஸ்தபா ஆலிம்கூட மனசு வெம்பிய நிலையில் அந்த மொட்டுக்காக மனதளவில் பிரார்த்தித்தார்.

விமான நிலையத்திற்கு ஒரு மணி நேரப் பயணம் சுமையா மௌனியாக தாயின் மடியில் சாய்ந்து கொண்டாள். தாயுடனான இறுதி அணைப்பு என்பதை அவள் புரிந்துகொண்டாள். தாய்க்கும், தந்தை முஸ்தகீம் ஹாஜியாருக்கும் கூட இது புரியாமலில்லை. அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அந்த சுவனத்து மலருக்காக மனதளவில் துஆச் செய்தனர். விமான நிலையம்வரை யாருமே பேசவில்லை.

இதோ ஜித்தாவை நோக்கி விமானம் புறப்பட்டுவிட்டது. சுமையாவையும், தாய், தகப்பனை சுமந்துசென்றது அந்த விமானம். சுமையா தனது மனக்கண்கள் மூலம் ஈமானியத்தை வென்றவளாக மதீனத்து மண்ணின் சுவனத்துப் பூங்காவை நோக்கி பயணிக்கிறாள். சுவனத்து மங்கையரோடு கலப்பதற்காக…!

ஈழத்து நூன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division