நல்லதை சொல்கிறோம்
பிற மொழிகளை கற்றுக் கொள்வோம்!
இலங்கையின் பிரதான பேசும் மொழிகளாக இருப்பவை சிங்களமும் தமிழும் ஆகும். ஆங்கிலம் இருதரப்பினருக்கும் பொதுவானதாகவும், இணைப்பு மொழியாகவும் இருக்கிறது. இவை தவிர மலாய், அரபு, உருது, ஹிந்தி மொழிகளும் இலங்கையில் சிறிய அளவில் சிலரால் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கை வாழ் மக்கள் பிரதானமாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தொடர்புகொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மொழியென்பது ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்வதற்கும், அவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்த்துக்கொள்வதற்கும் அவசியமான ஊடகமாக திகழ்கிறது. ஒரு மொழியை பேசுகின்ற மக்களோடு உரையாடி உறவாடி தொடர்புகளையும், நல்லுறவையும், சகவாழ்வையும் விருத்தி செய்து கொள்வதற்கு அம்மொழியை தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை.
இலங்கையில் பெரும்பான்மையின மக்கள் சிங்களத்தையே தமது தாய் மொழியாக கொண்டிருப்பதுடன், அவர்களில் பெரும் சதவிகிதத்தினர் தமிழில் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியாதவர்களாகவே இருக்கின்றனர். தமிழில் பேசுவதை சிறிய அளவில் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதே நிலை பெரும்பாலான தமிழ் பேசும் மக்களிடையேயும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
தென்னிலங்கை சிங்களவர்கள் வட இலங்கை தமிழர்களின் தமிழ் மொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். இவ்வாறே வட இலங்கை தமிழர்கள், தென்னிலங்கை சிங்களவர்களின் சிங்கள மொழியை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். சிங்களவர்களை தமிழர்களும், தமிழர்களை சிங்களவர்களும் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதிருப்பது மிகவும் துரதிர்ஷ்டமான நிலைமையாகும். இதனால் ஒருவரையொருவர் சரியாக விளங்கி, நல்ல புரிந்துணர்வோடு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முடியாதிருப்பதோடு ஒருவர் மீது மற்றவர் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதற்கும், தவறான முடிவுகளுக்கு வருவதற்கும் காரணமாகிறது.
இவை மட்டுமன்றி அயலவர்களாக இருக்கும் பிறமொழி பேசுபவர்களோடு, திறந்த மனதோடு தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கும், நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும் இயலாமல் போகிறது. இவை போன்ற எண்ணற்ற எதிர் விளைவுகள் உருவாகுவதை பலரும் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர்.
இத்தகைய நிலைமையில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழியை, குறிப்பாக சிங்களவர்கள் தமிழையும், தமிழர்கள் சிங்களத்தையும் கற்றுக்கொள்ள முன் வர வேண்டும். எழுதுதல் வாசித்தல் என்பவற்றை இரண்டாவது கட்டத்தில் வைத்துக்கொண்டாலும், பேசுவதற்கும் பிறர் பேசுவதை விளங்கிக் கொள்வதற்கும் போதுமான அளவிலேனும் மற்ற மொழியை கற்றுக்கொள்ள ஒவ்வொரு இலங்கையரும் முன்வரவேண்டும்.
இவ்வாறு, இவ்விரு மொழிகளையும் பேசுவோரையும் சுதந்திரமாக தொடர்பு படுத்தக்கூடிய நிலைமை வரும்வரை, தற்போது இணைப்பு மொழியாகத் திகழும் ஆங்கில மொழியிலான ஆற்றல்களையும், அதன் பாவனையையும் விருத்தி செய்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வம் செலுத்த வேண்டும்.
சகவாழ்வையும், நல்லுறவையும், ஒருவருக்கொருவர் மீதான நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளவும், நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவவும் இன முறுகல்கள் மறைந்து, சகவாழ்வு சிறப்புறவும் பிற மொழிகளைக் கற்றுத்தேறுதல் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
நெஞ்சுக்கு நீதி
பிற மொழிகளைக் கற்றறிவது தனித் திறமை
நல்லுறவுகள் வளர்வதற்கு அதுவும் வலிமை
அறிஞர்கள் சொல்கிறார்கள் அதன் பெருமை
அம்மொழிகளை கற்றிட்டால் வரும் மகிமை
வாசித்ததில் வசீகரித்தது
பரிபூரணமான உடல் நலம்
இன்று உடல் நோயைக் குணப்படுத்த எத்தனையோ விதமான மருத்துவ முறைகள் உள்ளன. அவை எதைக் காட்டுகின்றன வென்றால் மக்களிடையே நோய்கள் அதிகமாகப்பரவியுள்ளன என்பதைத்தான். இந்த மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் மக்களின் உடல் நோய்களை அறவே இல்லாது அழித்தொழிக்காவிட்டலும் ஏதோ இயன்றவரை மக்களின் துன்பம் துடைக்கின்றன.
மக்களின் உள நோய்களை நீக்க எத்தனையோ மதங்கள் தோன்றிய போதிலும் பாவமும் துயரும் இன்னும் உலகில் நிலவி வருவது போன்று மக்களின் உடல் நோய்களைப் போக்க எத்தனையோ மருத்துவ முறைகள் தோன்றிய போதிலும் இன்னும் நோயும் நொம்பலமும் உலகில் இருந்து கொண்டுதான் உள்ளது.
பாவத்தையும் துயரத்தையும் போன்று நோயும் நொம்பலமும் மருந்துகளால் முற்றிலும் அழித்தொழிக்க இயலாவண்ணம் மனித சமுதாயத்திலேயே ஊறிப்போயுள்ளன. நம்முடைய நோய்களுக்கான முக்கிய காரணம் நம்முடைய உள்ளத்தில் பதிந்திருக்கும் எண்ணங்களாகும்.
இவ்வாறு நான் கூறுவதிலிருந்து உடல் நிலைக்கும் நோய்க்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஒருபோதும் பொருள்படாது. உடல் நிலையானது நோய்களை உண்டுபண்ணுவதில் முக்கியமான பாகம் வகிக்கிறது.
காலரா நோய்க்குக் காரணம் என்ன? காலராக் கிருமிகள் அக்கிருமிகள் உற்பத்தியாவதற்குக் காரணம் துப்புரவு இன்மை. துப்புரவு இன்மை எதனால் ஏற்படுகிறது? மனிதனின் ஒழுக்கங்கள் சீர்குலைந்து இருப்பதனால்தான்.
கண்ணுக்குத் தெரியக்கூடிய எண்ணம் தான் செயல். நாம் நோய் என்று கூறும் உடல் கோளாறானது, பாவத்தோடு தொடர்பு கொண்டுள்ள மனிதனுடைய தவறான எண்ணங்களினால் ஏற்படுகின்றது.
மனிதனுடைய மனதில் பல்வேறு மாறுபட்ட எண்ணங்கள், ஆசைகள் படையெடுத்து அதன் அமைதியைக் குலைத்துக் கொண்டுள்ளன. அதன் காரணமாக அவனுடைய உடல் நிலையும் சீர்குலையத் தொடங்கிவிடுகிறது.
மிருகங்களுக்கு இவ்விதம் மாறுபட்ட பல்வேறு எண்ணங்களும் ஆசைகளும் தோன்றுவதுமில்லை. அவற்றால் அவை நோய் வாய்ப்படுவதுமில்லை. அவை தங்களுடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வண்ணம் வாழ்கின்றன. அவற்றுக்குக் கவலையும் ஏக்கமும் ஏற்படுவதுமில்லை அதனால் அவற்றுக்கு எவ்வித நோயும் உண்டாவதில்லை.
மனிதன் மகான் தன்மையை நோக்கி உயரும் பொழுதுதான் தன்னுடைய மனதைக் குழப்பமடையச் செய்யும் எண்ணங்களையும் ஆசைகளையும் விட்டொழித்து தன்னுடைய பாவங்களையும் பாவ உணர்ச்சிகளையும் வெற்றிகொண்டு துன்பத்தையும் துயரத்தையும் விரட்டியடிப்பான். இவ்வாறு அவன் தன்னுடைய எண்ணங்களைச் சீர்படுத்தி மன அமைதி பெற்றுப் பரிபூரணமான உடல் நலத்தைப் பெற்று விடுவான்.
நூல்:- மனதை வெல்லுவாய் மனிதனாகுவாய், ஆசிரியர்:- அப்துற் ரஹீம், முதற்பதிப்பு:- ஆகஸ்ட் 1958, பக்கங்கள்:- 96, வெளியீடு:- யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் சென்னை.
சிந்தனை செய் மனமே
வேகம்! விவேகம்!
ஒரு டீ கடைக்காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஒரு முறை டீ கடைக்காரனுக்கும், மல்யுத்த வீரனுக்குமிடையில் தகராறு வந்தது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை தன்னுடன் மல்யுத்த சண்டைக்கு அழைத்தான். அவர்களது இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானமாகக் கருதப்படும். எனவே டீ கடைக்காரன் அந்த சவாலுக்கு ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் எனப் பயந்தான். எனவே ஒரு துறவியை சந்தித்து இவ்விடயத்தில் தனக்கு அறிவுரை வழங்குமாறு வேண்டினான். அவனது மல்யுத்த வீரனுடனான கதையை முழுமையாகக் கேட்ட துறவி, “சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன” என்று கேட்டார்.
“முப்பது நாட்கள்” என்றான் அவன். “இப்போது நீ என்ன செய்கிறாய்?” என்று அவர் கேட்டார்.
” டீக்கடையில் டீ ஆற்றுகிறேன்” என்றான்.
அதற்கு அந்த துறவி, “அதையே தொடர்ந்து செய்” என்றார்.
ஒரு வாரம் கழித்து வந்த டீக் கடைக்காரன். துறவியிடம்,” எனக்கு பயம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?” என்று கேட்டான்.
“இன்னும் கூடுதலான ஈடுபாட்டோடு, இன்னும் வேகமாக டீ ஆற்று” என்றார் துறவி.
தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீஆற்றினான் டீக் கடைக்காரன்.
இரண்டு வாரம் முடிந்தது. அப்போதும் அதே அறிவுரைதான். “வேகமாக டீ ஆற்று”.
போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீக் கடைக்காரன் நடுக்கத்துடன் அந்த துறவியிடம், “நான் இப்போது என்ன செய்ய வேண்டும் ஐயா?” என்று கேட்டான்.
“போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என்று நீ அவனைக் கூப்பிட்டு, அவன் பார்த்திருக்க நீ அதி வேகமாக டீ ஆற்று” என்றார் துறவி.
மல்யுத்த வீரன், குறிப்பிட்ட நாளன்று போட்டிக்கு வந்து விட்டான். “வா.. முதலில் டீ சாப்பிடு” என்றான் டீக் கடைக்காரன். “சரி” என்று அமர்ந்தான் மல்யுத்த வீரன்.
டீக் கடைக்காரன் துறவி சொன்னதுபோல், அவனுக்கு முன்னாள் மிக வேகமாக டீ ஆற்றத் தொடங்கினான். அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான் மல்யுத்த வீரன். இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை, மல்யுத்த வீரன் பார்த்திருக்கிறான். ஆனால் இப்போது அவனது வேகம் எவ்வளவு கூடியிருக்கிறது. என்ன ஒரு வேகம்!
ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே அவன் இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தால், போட்டிக்கு எந்த அளவுக்கு தன்னை தயார் செய்திருப்பான். அவனோடு என்னால் போட்டி போட முடியுமா? என்று தனக்குள்ளேயே எண்ணி, அச்சம் கொண்டு போட்டியே வேண்டாம்’ என சென்று விட்டான்.
இப்பத்தியில் இடம்பெறும் அம்சங்களின் நோக்கை, போக்கை, அமைப்பை, அளவை, அழகை பின்பற்றி எவரும் எழுதலாம்.
“படித்ததும் பகர்வதும்” பகுதியுடன் தொடர்பு கொள்ள, மின்னஞ்சல் (email): [email protected], வாட்ஸ்எப் (WhatsApp): 0777314207