சர்வதேச சமூகம் போட்டித்தன்மை வாய்ந்த புதிய பொருளாதார திட்டங்களின் ஊடாக ஒரு உற்பத்தி விநியோக வலையமைப்பு மற்றும் சந்தை ஆக்கிரமைப்பை அணுகுகிறது. வேகமாக முன்னேறுவது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் நோக்கமாக மாறியுள்ளது. காலாவதியான பொருளாதாரக் கட்டமைப்புக்குப் பதிலாக புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதையும், பழைய கட்டமைப்பை உடைக்க புதிய கூட்டணிகள் உருவாக்கப்படுவதையும் குறிப்பிடலாம்.
புதுடில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் முடிவில், தெற்காசியாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக ஐரோப்பாவிற்கு தரை மற்றும் கடல் வழியாக ஒரு கலப்பு (ஹைபிரிட்) பாதை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் இதுவரை கிட்டாத புதிய வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் ஐரோப்பா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பத்தொன்பது நாடுகளுடன் ஆபிரிக்க ஒன்றியமும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. உலக மக்கள் தொகையில் அறுபது சதவீதம் இந்நாடுகளில் அடங்குகிறது. இந்நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியானது உலக சராசரியின் எண்பது சதவீதம் ஆகும். சர்வதேச வர்த்தகத்தில் எழுபத்தைந்து சதவீதம் இந்நாடுகளுக்குச் சொந்தமானது என்பதோடு, இதன் மூலம் இவற்றின் பலம் தெளிவாகத் தெரிகிறது.
பல நாடுகளை இணைக்கும் புதிய பாதை அமைக்கப்பட்ட பின்னர் பெருமளவு நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. எரிபொருளை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க முடியும் என்று காட்டப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையே பயணம் செய்வதில் நேரத்தை மீதப்படுத்துவதோடு, விமானப் பயணங்களுக்குப் பதிலாக பசுமை எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் போக்குவரத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மசகு எண்ணெய் மற்றும் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்தை கூட குறுகிய பாதையில் விரைவாக மேற்கொள்ள முடியும், மேலும் இது வாடிக்கையாளர் மீது சுமத்தப்படும் செலவையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மின்சார விநியோக கம்பி தொகுதியும், ஹைட்ரஜன் குழாய் அமைப்பும் மூன்று வலயங்களையும் இணைக்கும் பாதையில் சேர்க்கப்படும்.
இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முன்மொழிந்த பாதையை நிலம் மற்றும் கடலைப் பயன்படுத்தி அமைக்க இந்தியா கொள்கை முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், அந்த நாடுகளின் தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் சவுதி அரேபியாவில் சந்தித்து உத்தேச பாதையின் அடிப்படைக் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துள்ளனர். பின்னர், ஐரோப்பிய ஒன்றியமும் அதற்கு ஒப்புக்கொண்டது.
தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் மூன்று பகுதிகளை வெளிப்புற ஆற்றல் மற்றும் டிஜிட்டல் தொடர்பு மூலம் இணைத்த பிறகு, உலகின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு நவீன உற்பத்திகளாலான வளர்ந்து வரும் பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பாக கொண்டுள்ள கொள்கை இப்புதிய தோற்றத்தின் மூலம் தெரியவருகிறது. அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட வெளிப்படையான முறைகள் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தை அபிவிருத்தி அடையச் செய்யும் மாறுபாடான பாரிய முயற்சி இதுவாகும்.
மத்தியகிழக்கு நாடுகள் புதிதாக முன்மொழியப்பட்ட பாதை குறித்து நம்பிக்கையுடன் பார்க்கின்றன. பெட்ரோலியத்திற்கான தேவை குறைந்த பிறகு, உயிர்வாழ்வதற்கான நவீன நடவடிக்கைகளுக்கான அணுகுமுறையாக இது தோன்றுகிறது. 2031 ஆம் ஆண்டளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நாணயத்தில் நான்கு ட்ரில்லியன் வரை பெட்ரோலிய வர்த்தகத்திற்கு வெளியே மற்றைய துறைகளில் முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வகையில், பல அரபு நாடுகள் 26 புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன. இந்த பாதையை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் மற்றும் நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கவும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவைப்படுவதால், வளரும் நாடுகளில் திறமையான தொழிலாளர்களின் மகிழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டம் நிறைவடைந்த பிறகு, ஐரோப்பாவுக்கு இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நேரம் நாற்பது சதவீதமும், முப்பது சதவீத செலவும் குறைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அது இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம்.
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப் பாதை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது இலங்கையுடன் மின்சாரம், மசகு எண்ணெய் தொடர்பாகவும் மற்றும் தரைவழியிலான பாதை குறித்தம் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த பரிந்துரைகளின்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் இலங்கையானது ஐரோப்பா வரை இணைக்கப்படும்.
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள் ஹைபிரிட் ரோட் மூலம் இணைக்கப்பட்டால் இலங்கையும் இதன் மூலம் பயனடையும். தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, ஆடைகள், மீன் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை மிகக்குறைந்த விலையில் குறுகிய காலத்தில் ஏற்றுமதி செய்வது பொருளாதாரத்துக்கு உதவியாக இருக்கும். அதிகரித்த செலவு குறைக்கப்பட்ட பிறகு, இலங்கை பொருட்களுக்கு கேள்வி ஏற்படும். உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளுடனான தொடர்பு வாழ்க்கை முறையை மாற்றும் மற்றும் அணுகுமுறைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
உலகின் போக்குகளை உணர்ந்து அதற்கேற்ப முடிவுகளை எடுப்பது நல்லது. துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் உலகுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள இலங்கையானது தரைப்பாதை வழியாக இந்தியா ஊடாக ஐரோப்பாவை இணைப்பதனால் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
தமிழில்: வீ.ஆர்.வயலட