இலங்கைத் தேசமானது இயற்கை வளங்களும், வனப்பும் நிறைந்த சிறிய குட்டித்தீவாக இருந்த போதிலும், இந்நாட்டில் ஐக்கியமும் அமைதியும் இன்னுமே தோன்றவில்லை. எமது நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு காலமாகிவிட்ட போதிலும், இன, மத பேதங்களும் முரண்பாடுகளும் இன்னும் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
இனவாதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் போக்கு இலங்கையின் அரசியல்வாதிகள் பலருக்கும் மாற்ற முடியாத பாரம்பரியமாகிப் போயுள்ளது. மாற்று இனங்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதன் ஊடாக, தனது இனத்திடமிருந்து ஆதரவைப் பெருக்கிக் கொள்ளலாமென்று அரசியல்வாதிகள் பலர் எதிர்பார்க்கின்றார்கள். அவ்வாறான இனவாத அரசியலில் வெற்றி கண்டவர்களும் அநேகர் உள்ளனர்.
பல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கையில் மிக இலகுவான ‘அரசியல் உத்தி’ அதுவேயாகும். அரசியல்வாதிகளில் பலர் இனவாதத்தைத் தூண்டிக் கொண்டேயிருப்பதன் காரணமாகவே, எமது மக்களின் உள்ளத்தில் ஐக்கியத்தையும் மனிதநாகரிகத்தையும் இன்னும் ஆழப்பதிக்க முடியாதிருக்கின்றது. இனங்களுக்கிடையில் வெறுப்பும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.
‘எனது மதம் ஒன்றுதான் உலகில் உண்மையானது’ என்றும், ‘எனது மதமே உலகில் உயர்வானது’ என்றும் ஏராளமானோர் முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களது மதத்தை முதன்மைப்படுத்தியவாறு திட்டமிட்டு காரியங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான போக்கு மற்றைய மதத்தினருக்கு வெறுப்பையும் வன்மத்தையும் உருவாக்குவது தவிர்க்க முடியாததாகின்றது.
மதங்கள் விடயத்தில் மக்கள் உள்ளங்களில் எத்தனை தூரம் வன்மம் உள்ளதென்பதை சமூக ஊடகங்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். மற்றைய மதநம்பிக்கைகளைத் தூற்றுவதையே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரில் பலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வாறானவர்களை ‘மதவெறியர்கள்’ என்பதை விட ‘மதநோயாளிகள்’ எனக் கூறுவதே பொருத்தமாகும்.
மதம் என்பது உண்மையானதா அல்லது உண்மைக்குப் புறம்பானதா என்ற விவாதமெல்லாம் எமக்கு அவசியமற்ற சங்கதியாகும். அது எவ்வாறாவது இருந்துவிட்டுப் போகட்டும்! மதத்தைக் கடைப்பிடித்தொழுகுவதும், மதத்தை விட்டு நீங்கியிருப்பதும் அவரவரது தனிப்பட்ட சௌகரியம். அந்த விவகாரத்தில் மற்றவர் தலையிடுவது அடுத்தவரின் அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகிறது.
மனிதகுலம் ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றி வருகின்ற அவரவர் மதநம்பிக்கைகளை மற்றொரு தரப்பினர் நிந்தனை செய்வது அடுத்தவரின் சொந்த விடயத்தில் தலையிடுவதற்கு ஒப்பானதாகும்.
அனைத்து மதங்களும் நற்போதனைகளையே எடுத்துரைக்கின்றன. ‘நமது மதமே உயர்ந்தது. நமது மதத்தை வளர்ப்போம், மற்றையவற்றைத் தாழ்த்துவோம்’ என்று எம்மதமும் கூறவில்லை. அவ்வாறிருக்கையில் மக்கள் மத்தியில் மதரீதியிலான மதத்தை வளர்ப்பது மனித நாகரிகத்துக்கு விரோதம்!