Home » ரயில்வே காணிகளில் பல சட்டவிரோத குடியிருப்பாளர்கள்

ரயில்வே காணிகளில் பல சட்டவிரோத குடியிருப்பாளர்கள்

உடன் வெளியேறுமாறு ஆளுநர் செந்தில், அதிகாரிகளுக்கு அமைச்சர் பந்துல பணிப்பு

by admin
September 3, 2023 11:37 am 0 comment

பொலன்னறுவை முதல் மட்டக்களப்புவரையான ரயில்வே திணைக்களத்துக்குரிய காணிகளிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பணித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு பணித்துள்ளார்.

ரயில்வே கட்டளைச் சட்டம் பிரித்தானியர்களால் இயற்றப்பட்ட மிகக் கடுமையான சட்டமாகுமெனத் தெரிவித்த அமைச்சர், ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் எவரும் குடியேறவோ, கட்டடங்கள் கட்டவோ அனுமதி இல்லையெனவும் வலியுறுத்தினார்.

ரயில்வே பொது முகாமையாளரின் அதிகாரத்தின் கீழும் கூட, இந்த ஒதுக்கப்பட்ட நிலத்தை 5 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, தற்காலிக குத்தகை அடிப்படையில் மட்டுமே வழங்க முடியுமெனவும், அமைச்சர் வலியுறுத்தினார்.

ரயில்வே காணியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு ரயில்வே திணைக்களத்துக்கு முழு அதிகாரம் உண்டெனவும் எனினும், சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற ரீதியில் இவ்வாறு கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கு தான் விரும்பவில்லையெனத் தெரிவித்த அமைச்சர், பொலன்னறுவை வரையான ரயில்வே காணிகள் துரிதமாக அபகரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மாகாண ஆளுநர் தலைமையிலான அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

ரயில்வே காணிகளை சட்டரீதியாக குத்தகைக்கு வழங்குவது தொடர்பான புதிய அமைச்சரவைப்பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அதுவரை ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் எதனையும் குத்தகைக்கு வழங்க வேண்டாமெனவும் ரயில்வே பொது முகாமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நட்டத்தில் இயங்கும் ரயில்வே துறையை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு ரயில்வேயின் பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் பிற சொத்துகளை புதிய முறைகளில் நிர்வகிக்க வேண்டுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு, மட்டக்களப்பு, அநுராதபுரம், பதுளை, எல்ல போன்ற எந்தப் பிரதேசத்திலும் தனியார் துறையுடன் இணைந்து பயனுள்ள செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயனுள்ள முன்மொழிவுகளை முன்வைத்தால், முறையான மதிப்பீட்டு முறையில் கூட்டுத் திட்டங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீவிரமாக தலையிட வேண்டுமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர்களான எஸ். வியாழேந்திரன், சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division