உலக மக்கள் வாழ்வில் சுபிட்சம் தோன்றட்டும்! | தினகரன் வாரமஞ்சரி

உலக மக்கள் வாழ்வில் சுபிட்சம் தோன்றட்டும்!

உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள், உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். தைத்திருநாளை தமிழர்களின் தனித்துவமான முதன்மைப் பண்டிகை என்றும் சான்றோர் குறிப்பிடுவர். ஆனாலும் இந்துசமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் மாத்திரமன்றி, உலகெங்கும் வாழ்கின்ற பிறமொழி பேசுகின்ற இந்துக்களும் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தமிழர்கள் தற்காலத்தில் உலகின் ஏராளமான நாடுகளில் பரந்துபட்டு வாழ்கின்ற போதிலும், தமிழினத்தின் பூர்வீகபூமி தென்னிந்தியா ஆகும். தமிழகத்தில் இருந்துதான் சமயம், கலாசாரம், பண்பாட்டுப் பாரம்பரியம் போன்ற அனைத்தையும் உலகத் தமிழினம் பெற்றுக் கொண்டது எனலாம்.

தைப்பொங்கல் பண்டிகைப் பாரம்பரியமும் அங்கிருந்துதான் உலகெங்கும் பரவியது. தைத்திருநாள் பண்டிகைக் கொண்டாட்டம் எக்காலப் பகுதியில் முதன்முதலில் தோன்றியதென்பதை வரலாற்று ஆசிரியர்களால் அறிந்து கொள்ள இயலாமல் உள்ளது. ‘இந்துமதம் ஆதியும் அந்தமும் இல்லாதது’ என்பது போன்று, இந்துமத பண்டிகைகளும் காலம் கண்டறிய முடியாதபடி தொன்மைமிக்கவை என்பதுதான் உண்மை.

பண்டைய தமிழர்களின் பாரம்பரிய வழக்கங்கள் ஒவ்வொன்றுமே அர்த்தம் நிறைந்தவையாகும். அவ்வாறான அர்த்தமுள்ள ஒன்றுதான் தைப்பொங்கல் பண்டிகை. உலகின் பிரதான சக்திமுதல் கதிரவன் ஆகும். தினகரன், பகலவன், வெய்யோன் என்றெல்லாம் போற்றப்படுகின்ற சூரியன் இல்லாது போனால் உலகம் நிலைத்திருக்கப் போவதில்லை.

உலக உயிரினங்களுக்கு உணவளிக்கும் விவசாயத்துக்கு உதவுகின்ற கதிரவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்ற அறிவியலை அக்காலத்திலேயே புரிந்து கொண்ட தமிழர்கள், சூரியனுக்கு பொங்கலிட்டுப் படைக்கும் நன்றித் திருநாளாக தைத்திருநாளை தம்வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டனர். அன்றைய தமிழர்களின் அடையாளமே இன்று நாம் கொண்டாடுகின்ற தைத்திருநாள் ஆகும்.

சூரியபகவானுக்கு நன்றி செலுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், விவசாயத்துக்கு உதவுகின்ற கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் நாளாக ‘பட்டிப்பொங்கல்’ என்ற மாட்டுப் பொங்கல் பண்டிகை விவசாயப் பெருமக்களால் நாளைய தினம் கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தமிழர்கள் விவசாயத்துடனும், சமயகலாசார பண்பாட்டு விழுமியங்களுடனும் தங்களது வாழ்வை இணைத்துக் கொண்டதாலேயே மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்ந்தனர் எனலாம். குடித்தொகைப் பெருக்கமும், அறிவியலும், போட்டாபோட்டிகளும் அதிகரித்ததன் விளைவாக மனிதகுலம் இன்று நிம்மதியின்றித் தவிக்கின்றது.

எமது நாடும் கடந்த சில வருடங்களாக பலவிதமான நெருக்கடிகளினால் சிக்குண்டு அல்லல்பட்டு வந்துள்ளது. கொவிட் தொற்று, பொருளாதார வீழ்ச்சி, அரசியல் நெருக்கடி என்றெல்லாம் இடர்மிகுந்த பாதையை நாம் கடந்து வந்துள்ளோம். அவ்வாறான நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீள்வதற்கான நம்பிக்கை அறிகுறிகளும் தென்படுகின்றன.

இத்தகைய நிலையில் தைப்பொங்கல் பண்டிகையை இந்துக்கள் இன்று கொண்டாடுகின்றனர். உலகெங்கும் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் இனிவரும் காலம் சுபிட்சம் நிறைந்ததாக அமைய வேண்டுமென இன்றைய திருநாளில் தினகரன் நெஞ்சார வாழ்த்துகின்றது.

Comments