தேர்தலுக்காக பெரும்பணத்தை விரயம் செய்யும் காலமல்ல இது! | தினகரன் வாரமஞ்சரி

தேர்தலுக்காக பெரும்பணத்தை விரயம் செய்யும் காலமல்ல இது!

தேர்தலுக்காக பெருந்தொகைப் பணத்தை வீண்விரயம் செய்யும் காலம் இதுவல்ல. நாட்டில் நிலவுகின்ற முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல்கள் மற்றும் களநிைலவரம் குறித்து எம்முடன் அவர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கே: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இருந்தபோதும் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீங்கள் இதுபற்றி கருத்துத் தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு யாராவது பரிந்துரைத்தால், நாங்கள் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம். இருப்பினும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையாது என்பதுடன், நாட்டை சீர்படுத்துவதற்கு எந்த வகையான தீர்வையும் வழங்காது. மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 4,000 ஆகக் குறைத்து, விருப்புரிமை முறை ஒழிக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படாமல் திட்டமிட்டு நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மக்கள் உணர்ந்து செயற்படுவார்கள். வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன்.

கே: உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை, மாறாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை இரண்டு வருடங்களுக்குள் மீட்டெடுக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை விளக்க முடியுமா?

பதில்: ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது. தற்போது, தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு ஜனாதிபதி தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறார். எனவே, அந்த தேசிய வேலைத்திட்டத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் செயலில் ஜனாதிபதி பங்கேற்கக் கூடாது. ஜனாதிபதியின் பொறுப்புகள் வேறு. எனவே, ஜனாதிபதி தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு ஏற்ப செயற்படுவது முக்கியமானது.

கே: சுதந்திர மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தேர்தலை தாமதப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது கட்டாயம் என்றும் கூறியுள்ளனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் அப்படிக் கருதவில்லை. இதற்கு கடந்தகால முன்னுதாரணங்கள் உள்ளன. 1987 இல், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டன, ஆனால் சில சக்திகள் மரண அச்சுறுத்தல்களை விடுத்து சுமார் 300 முதல் 400 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 1991 இல் புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதற்கேற்ப செயல்படுவதற்கு கடந்தகால முன்னுதாரணம் உள்ளது. எதுவாக இருந்தாலும் மக்கள் நாட்டை நினைத்து செயற்பட வேண்டும்.

கே: முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தபோதும் தனித்துப் போட்டியிடப் போவதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் கூறியுள்ளார். இது தொடர்பில் உண்மை நிலைப்பாடு என்ன?

பதில்: அரசியல் கட்சிகள் தங்களுடைய அடையாளத்தின் அடிப்படையில் கருத்துகளை வெளியிடும் போது, நாங்கள் எதுவும் கூற முடியாது. நாட்டில் ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் தேசிய ஒருமித்த கருத்து தேவைப்படும் போது, தேசிய மட்டத்திலும் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை உள்ளது. அதன் அடிப்படையில் தேசிய மட்ட இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள அரசியல் கட்சிகளும் குழுக்களும் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குகின்றன.

கே: உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு செலவிடப்படவுள்ள 10 பில்லியனுக்கும் அதிகமான நிதியை இந்தப் பருவத்துக்கான நெல் கொள்வனவு செய்வதற்கு வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் பார்வை என்ன?

பதில்: தற்போது ஒவ்வொரு பொருளின் விலையும் சுமார் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அரசு அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அச்சிடும் செலவுகள் என பல்வேறு செலவுகள் அதிகரித்துள்ளன. தேவையில்லாமல் தேர்தலொன்றுக்கு ஏறத்தாழ 20 பில்லியன் ரூபா பொது நிதியை வீண்விரயம் செய்வதை விடுத்து, நாட்டில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிதியைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.

கே: தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி தமது சொந்த அரசியல் கூட்டணிகளை உருவாக்கியுள்ளன. இது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமா?

பதில்: இந்த அரசியல் கூட்டணியில் இருப்பவர்களுடனும் வெளிப்படையான விவாதங்களுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் ஜனநாயகத்தில் மிக உயர்ந்த பிரிவாக இருக்கும் மக்கள் முன்னிலையில் அலசப்பட வேண்டும். அவர்கள் எடுத்துரைக்கும் உண்மைகளும் பிரச்சினைகளும் அப்போது இருந்திருந்தால், நாடு இந்த நெருக்கடியான நிலைக்கு மாறியிருக்கக் கூடாது. அவர்களில் சிலர் அமைச்சரவையில் இருந்தவர்கள். அவர்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் அப்போது செயற்படுத்தப்பட்டன. எனவே, இவ்வாறான தோல்வியுற்ற இயக்கத்தில் இருந்தவர்கள் எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்? இருப்பினும், அவர்களின் முக்கியமான யோசனைகளை நாம் எவ்வாறு பெற வேண்டும் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

Comments