கடலட்டை பண்ணைகளை சட்டரீதியாக மாற்றுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கடலட்டை பண்ணைகளை சட்டரீதியாக மாற்றுங்கள்

குறுகிய நோக்கில் சிலர் என அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை

மக்களுக்கு வளமான வாழ்வாதாரத்துடன் எதிர்காலத்தை ஏற்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் கடலட்டைப் பண்ணைசெயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சராக நான் இருக்கும் வரையில், குறுகிய நோக்கங்களுக்காக எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் (04) நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னுடைய காலப் பகுதிக்குள்ளேயே, கடலட்டைப் பண்ணைகள் அனைத்தையும் சட்ட ரீதியானவையாக மாற்றிக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாச்சிக்குடா மற்றும் இரணைதீவு பகுதியில் கடலட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளவர்களில் சுமார் 80 பண்ணையாளர்களுக்கு பூநகரிப் பிரதேச செயலகத்தினால் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பாக மாவட்டத்துக்கான பொறிமுறையை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விசேட குழு ஒன்றை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்த குழு அமைக்கப்படவுள்ளது.

உணவுப் பாதுகாப்பையும், போஷாக்கையும் உறுதிப்படுத்தும் வகையில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் தீர்வு காணப்படுமென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Comments