சீனாவுக்கு அருகே நெருங்கி கூட்டு இராணுவப் பயிற்சி! | தினகரன் வாரமஞ்சரி

சீனாவுக்கு அருகே நெருங்கி கூட்டு இராணுவப் பயிற்சி!

அமெரிக்காவுடன் சேர்ந்து அதிரடி கூட்டு இராணுவப் பயிற்சியை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக இந்தியா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு இராணுவப் பயிற்சியில் குறிப்பிடத்தக்க விடயமொன்று உள்ளது. அதாவது இம்முறை சீனாவுக்கு மிக அருகே சென்று இந்த இராணுவப் பயிற்சியை இந்தியா மேற்கொள்ளவிருக்கின்றது என்பதுதான் பிரதான விடயம்.

இந்தியா மட்டுமல்லாமல் பிறநாடுகளிலும், கடல் எல்லைகளிலும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற இவ்வேளையில், அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா மேற்கொள்ளப் போகின்ற இந்த கூட்டு இராணுவப் பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சீனாவை என்றுமே எதிரிநாடாக நினைத்தது கிடையாது என்பதே இந்தியாவின் உறுதியான கொள்கையாக இருந்து வருகின்றது. மேலும், சீனாவுடன் நட்பு பாராட்டவே இந்தியா தொடர்ந்தும் முற்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவை நட்புநாடாகப் பார்ப்பதற்கு சீனா விரும்பவில்லையென்று இந்தியா தெரிவித்து வருகின்றது.இந்தியாவை எதிரிநாடாகவே சீனா கருதுவதாக இந்தியா கூறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பகுதிகளாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. ஆனாலும் சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை ஒவ்வொரு முறையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. குறிப்பாக, லடாக்கில் இருந்து சீனாவை இந்தியா துரத்தியடித்த சம்பவத்தை இதற்கான உதாரணமாகக் கூறலாம்.

இந்திய எல்லையிலுள்ள நிலப்பரப்பில் மாத்திரமன்றி, சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி கடல் பரப்பிலும் இருந்து வருவதாக இந்திய தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ -_பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பகுதிகளை சொந்தம் கொண்டாட சீனா முயற்சிப்பதாக இந்தியாவின் கவலை உள்ளது. இந்த விடயத்தில் சீனா ஓரளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாகவும் கூற முடியும்.

மேற்குறிப்பிட்ட கடல் பரப்புகளில் மற்றைய நாடுகள் வர்த்தகம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என சீனா எச்சரித்தும் வருகிறது. ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா துணிச்சலாக எதிர்கொண்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞையை கொடுக்கும் விதமாக அந்நாட்டுக்கு மிக அருகே சென்று போர் ஒத்திகை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதுவும் அமெரிக்காவுடன் இணைந்து இந்த போர் ஒத்திகையை இந்தியா நடத்தவுள்ளது. உத்தராகண்டில் உள்ள ஆலி என்ற பகுதியில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 2- ஆம் திகதி வரை இந்திய இராணுவத்தினரும், அமெரிக்க இராணுவத்தினரும் இந்த போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இந்தப் பகுதியானது சீனாவில் இருந்து 100 கி.மீ.தொலைவில்தான் அமைந்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய பெரிய மலைகள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடுமையான குளிரும் நிலவுவதுண்டு. ஒருவேளை, எதிர்காலத்தில் சீனாவுடன் போர் ஏற்பட்டால் அதனை எதிர்கொண்டு முறியடிப்பதற்காகவே இந்த இடத்தை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் இந்தப் போர் ஒத்திகையை முடித்துக் கொண்ட பின்னர் ஜப்பான், அவுஸ்திரேலியா, 'குவாட்' நாடுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து இந்தியா அடுத்தடுத்து இராணுவ கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது. இதில் ஜப்பானுடன் சேர்ந்து நடத்தப்படும் போர் ஒத்திகையானது கடலில் மிக பிரமாண்டமாக நடைபெறும் என ஜப்பானிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் எல்லையிலுள்ள கிழக்கு லடாக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய-, சீன வீரர்கள் இடையே கடும் மோதல் நடந்தது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்து வந்தன. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டின் இராணுவ உயர் அதிகாரிகளின் 16 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கிழக்கு லடாக்கின் கோக்ரா-ெஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது என இரு தரப்பு இராணுவ அதிகாரிகள் இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருந்தது. அதன்படி ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின் கீழ் படைகளை விலக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகின. இதன் காரணமாக எல்லையில் படிப்படியாக இயல்புநிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய_ சீன எல்லையில் இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்த சில புதிய செய்மதிப் படங்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதிகளில் இருந்து சீன வீரர்கள் 3 கிலோமீட்டர் தொலைவில் பின்வாங்கியதை புதிய செய்மதிப் படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கு முன்பு 2020 இல் இந்திய இராணுவம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு அருகில் சீனா பெரிய இராணுவத் தளத்தை அமைத்து இருந்தது. அதில் இருந்தும் சீன இராணுவம் இப்போது பின்வாங்கி உள்ளது.

அங்கு முன்னர் சீன இராணுவம் ஒரு பெரிய கட்டடத்தை அமைத்திருந்தது. அது அகழிகளால் சூழப்பட்டு கட்டப்பட்டு இருந்தது. இந்த இராணுவ தளத்தில் இருந்து சீனா இப்போது வெளியேறி உள்ளது. இந்த இராணுவ தளத்தை விட்டு வெளியேறி இதன் வடக்கே ஒரு தற்காலிக தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பு இராணுவமும் பின்வாங்கியுள்ள நிலையில், buffer zone எனப்படும் பொதுவான பகுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக இந்த மண்டலத்தில் எந்தத் தரப்பும் ரோந்து செல்ல அனுமதி இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.சாரங்கன்

Comments