ஆட்சியை நிராகரிப்பது பெரிய விடயமல்ல; அதை ஈடு செய்யக் கூடிய எதிர்த்தரப்பு எது? | தினகரன் வாரமஞ்சரி

ஆட்சியை நிராகரிப்பது பெரிய விடயமல்ல; அதை ஈடு செய்யக் கூடிய எதிர்த்தரப்பு எது?

“வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய முடியவில்லை. சம்பளத்தை அதிகரியுங்கள். அல்லது இடைக்கால உதவிக் கொடுப்பனவைத் தாருங்கள்” என்று அரச உத்தியோகத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

“புகையிரதச் சேவையை சீராக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளாந்தத் தாமதத்திற்கு ஆளணிப் பிரச்சினையே காரணம்” என்று புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“சிறுபோகச் செய்கையின்போது அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை. அப்படி விற்பதாக இருந்தாலும் செலவழித்த பணத்தை மீளப்பெற முடியாத அளவுக்கு நெல்லின் விலை குறைவாக உள்ளது” என்கின்றனர் விவசாயிகள்.

“போதியளவு மண்ணெண்ணெய் கிடைக்காத படியால் எங்களால் மீன்பிடியைச் செய்ய முடியவில்லை. அதனால் மீனின் விலையைக் குறைக்க முடியாதிருக்கிறது” என்கிறார்கள் மீனவர்கள். இதைத்தான் மரக்கறிப் பயிர்ச் செய்கையாளர்களும் சொல்கிறார்கள்.

“அரகலய போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது தவறு” என்று மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இவர்களுடைய கைதையும் தடுத்து வைப்பையும் கண்டித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டத்தரணிகள் சங்கமும் இவர்களுக்கான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

22 ஆவது திருத்தம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சர்ச்சையை உண்டாக்கும் அளவுக்கு இதொன்றும் பெரிய நன்மைகளைத் தரப்போவதில்லை. அதிலும் நாடு சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடி, இனப்பிரச்சினை போன்றவற்றைத் தீர்ப்பதற்கு இது எந்தளவுக்கு உதவும்? என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

“எதற்கும் அடங்க மாட்டோம். யாரும் நம்மைத் தோற்கடிக்க முடியாது. ஆகவே மீண்டும் வருவோம்” என்று சூளுத்துரைத்திருக்கிறார்கள் நாமல் ராஜபக்‌ஷவும் மகிந்த ராஜபக்‌ஷவும்.

“அப்படியென்றால், மீண்டும் அரசியற் கொந்தளிப்பை உருவாக்கப்போகிறார்களா? மீண்டும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கப்படப்போகிறதா? முந்திய ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள், நெருக்கடிகளுக்கெல்லாம் யார் பொறுப்புச்சொல்வது? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன.

“காணாமலாக்கப்பட்டோருக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்ட செயலகங்களில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று அரசாங்கத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

“ஆனால், இது மோசமான செயற்பாடாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையை இப்படி சாதாரணமாக முடித்துக் கொள்ள முடியாது. இது மிகப் பெரிய பிரச்சினை. இதற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியை நிவாரணமாகக் கொடுத்து சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. அது பாதிக்கப்பட்ட மக்களை மேலும் அவமானப்படுத்துவதாகும்” என எதிர்த்தரப்பினரும் சமூகச் செயற்பாட்டியக்கங்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

“நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கியோரின் மீது எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே அதிகாரத்தில் ஆள் மாற்றம் நடந்திருக்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சி மாற்றம் என்பதுதான் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும். அதுவே மக்களின் தேவைகளை நிறைவேற்றும்” என்கின்றன தொழிற்சங்கங்களும் மக்கள் அமைப்புகளும்.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொலைபேசிகளுக்கான பாவனைக் கட்டணமும் கூடியிருக்கிறது. போக்குவரத்துச் செலவு குறையவில்லை. டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலை குறையாத வரையில் சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையும் நெருக்கடியும் குறையாது என்று பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

இதுதான் தற்போதைய நிலவரம். இதையெல்லாம் பார்க்கும்போது நாட்டின் நெருக்கடி நிலை மேலும் தீவிரமடையப் போகிறது என்றே தோன்றும். ஏனென்றால் பல்வேறு குரல்கள் இந்த நிலவரத்தையொட்டி ஒலிப்பதால் இதை யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாது.

இதேவேளை மறுவளமாக “பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோக்களுக்கான வழங்கலின் அளவு கூட்டப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயுவின் விலையும் குறையும் எனத் தெரிகிறது. விவசாயிகளுக்கான உரம் ஓரளவுக்கு நியாய விலையில் கிடைக்கிறது. கோதுமை மா, அரிசி, சீனி போன்றவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்களின் நாளாந்த வாழ்க்கை நிலைமையில் சற்று ஆறுதலொன்று அளிக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு டீசல் விநியோகமும் சீராக்கப்பட்டிருக்கிறது” என அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

அடுத்த மாதம் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தில் மேலும் அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளைக் குறித்து அறிய முடியும். முக்கியமாக மக்கள் வரிசையில் நிற்கும் நிலை மாற்றப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய முன்னேற்றம்? என்று சிலர் சொல்கிறார்கள்.

இதை விட தற்போதைய நிலையில் வேறு என்னதான் செய்ய முடியும்? எல்லோரும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் பின்வாங்கிய நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க முன்வந்து பொறுப்பெடுத்தார். தனக்கு எந்தப் பெரும்பான்மையும் இல்லாத நிலையில், தனியொருவராக நின்று இந்தளவுக்கு முன்னேற்றத்தை – இயல்பு நிலையை உருவாக்கியமையை பாராட்ட வேண்டும் என்கின்றனர் இவர்கள்.

ஆனால், மக்கள் தமது வருவாயை அதிகரிப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படவில்லை. நாட்டின் வருமானமும் கூடவில்லை. இதனால் பண வீக்கம் அப்படியேதான் நீடிக்கிறது. பண வீக்கம் நீடிக்கும் வரையில் பொருளாதார நெருக்கடி தீரப் போவதில்லை. அரசியல் அரங்கிலும் ஆட்சிப் பண்பிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. மக்களின் போராட்டத்தின் மூலமாகப் பொதுஜன பெரமுனவும் ராஜபக்‌ஷவினரும் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும் அவர்கள் அரங்கிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் முற்றாகப் பின்வாங்கவில்லை. இப்பொழுது மீண்டும் புத்தெழுச்சியடையத் துடிக்கின்றனர்.

இது தொடருமானால் நிலைமை மேலும் மோசமடையும். ஒன்று ரணில் விக்கிரமசிங்கவினால் ஆட்சியைத் தொடர முடியாமல் போகும். அவருக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படும். இரண்டாவது,பொதுஜனபெரமுனவுக்கும் ராஜபக்‌ஷவினருக்கும் எதிராக மக்கள் போராட்டங்கள் எழுச்சியடையும். இதுவும் நாட்டில் நெருக்கடி நிலைமையைத் தோற்றுவிக்கும். ஆகவே இதெல்லாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் அல்ல. மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு செயற்படும் நோக்கம் இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது. இது அதிகாரப் போட்டிக்கான செயற்பாடுகளாகும். இதற்கு நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் பணயம் வைக்க முற்படுகிறார்கள் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலைமை மேலும் தொடருமானால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைக்காமல் போவதுடன் சர்வதேச நாடுகளின் நிதி மற்றும் பொருளாதார உதவிகளும் இடைநிறுத்தப்படக் கூடிய நிலைமையே ஏற்படும். அத்துடன் நாடு ஸ்திரமற்றுப் போனால், சுற்றுலாப்பயணிகளும் வரமாட்டார்கள். ஏனைய பொருளாதார நடவடிக்கைகளும் படுத்து விடும். அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது.

உண்மையில் இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது என்கின்ற வகையில் மிகக் கவனமாக சில விடயங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடக்கிறார் போலுள்ளது. அவர் தற்போது நடந்து கொள்ளும் முறை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டியது. முக்கியமாகத் துரித கதியில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அரசியலமைப்பில் 22 திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியமை, பொருளாதார நெருக்கடியில் தணிவை உருவாக்க முற்பட்டுள்ளமை, தீபாளிப் பண்டிகையை வழமைக்கு மாறாக தமிழ் அடையாளத்துடன் முழுதாகக் கொண்டாடியமை, முதற்பெண்மணியான திருமதி மைத்திரி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வரங்கில் கலந்து கொண்டமை எனப் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த ஆண்டு அரசியல் தீர்வு எட்டப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இது உள்நோக்கமுடைய கூற்று என்று விமர்சிப்போர் உண்டு. எதுவாயினும் இன்றைய நிலையில் இதைத் தவிர்க்க முடியாது. இதைக்குறித்து நிதானமாக அவதானிக்கவும் அணுகவும் வேண்டும். ஏனென்றால் இது மிகச் சிக்கலான காலகட்டமாகும். பன்முக நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள சூழல் இது. இதனால் மிகக் கவனமாக இந்த நிலையை எதிர்கொண்டால்தான் வெற்றிகளைப் பெற முடியும்.

தற்போதைய ஆட்சியை நிராகரிப்பதொன்றும் பெரிய விடயமல்ல. அதை ஈடு செய்யக் கூடிய எதிர்த்தரப்புகள் உண்டா? என்பது கேள்வியே. சஜித் பிரேமதாச வெறும்கையோடும் வெற்றுச் சிந்தனையோடும்தான் உள்ளார்.

ஜே.வி.பி முழுதாகவே தடுமாறிப் போயுள்ளது. பொதுஜனப் பெரமுன வன்மத்தோடு உள்ளதே தவிர, தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ளும் சிரத்தையோடு இல்லை. தமிழ் முஸ்லிம் மலையத் தரப்புகள் மிகப் பலவீனமாக உள்ளன.

தற்போதைய ஆட்சியை நிராகரிப்பதொன்றும் பெரிய விடயமல்ல. அதை ஈடு செய்யக் கூடிய எதிர்த்தரப்புகள் உண்டா? என்பது கேள்வியே. சஜித் பிரேமதாச வெறும்கையோடும் வெற்றுச் சிந்தனையோடும்தான் உள்ளார். ஜே.வி.பி முழுதாகவே தடுமாறிப் போயுள்ளது. பொதுஜனப் பெரமுன வன்மத்தோடு உள்ளதே தவிர, தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொள்ளும் சிரத்தையோடு இல்லை. தமிழ் முஸ்லிம் மலையத் தரப்புகள் மிகப் பலவீனமாக உள்ளன.

கருணாகரன்

Comments