நூல் அறிமுகம்; ஏ.ஆர்.இஸ்மட்டின் 'ஊரில் பெய்த மழை' | தினகரன் வாரமஞ்சரி

நூல் அறிமுகம்; ஏ.ஆர்.இஸ்மட்டின் 'ஊரில் பெய்த மழை'

இலக்கியம் என்பது காலத்தை பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகும். அவ்வகையில் ஆக்க இலக்கியங்கள் குறித்த காலசூழலையும், பண்பாட்டின் முதுசங்களையும் அடையாளப் படுத்துவன. ஆக்க இலக்கிய வடிவத்துள் கவிதை என்பது முக்கியத்துவம் நிறைந்ததொன்றாகும்.

கிழக்கு மாகாண, அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் சிறந்த கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகின்ற இடமாகும். குறிப்பாக ஈழத்து இலக்கியப் பரப்பில் பேசப்படுகின்ற கவிஞர் யுவன், கவிஞர் மஜீத், பாடலாசிரியர் அஸ்மின், பைசால் என்று பலரைக் குறிப்பிடலாம். அந்தவகையில் சமகாலத்தில் பல கவிதைகளை பிரசவித்து அக்கவிதைகளை தொகுத்து" ஊரில் பெய்த மழை" எனும் கவிதை நூலினை வெளியிட்டவர்தான் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் ஏ.ஆர்.இஸ்மட். வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்து தனது கல்வியினை தரம் -09 வரை கற்று இடைவிலகி இன்று ஓர் மீனவனாக தொழில் செய்து கொண்டு எழுத்துத்துறையை மற்றுமொரு பணியாக செய்து வருகின்றார்." ஊரில் பெய்த மழை" கவிதைத் தொகுப்பானது 129 பக்கங்களை கொண்டுள்ளது.

யுவன் பதிப்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூலுக்கு அட்டை வடிவமைப்பு லார்க் பாஸ்கரனும் அணிந்துரையினை இந்தியாவின் எழுத்தாளர் முஹம்மது பாட்சாவும் வழங்கியுள்ளார்கள். இக்கவிதைத் தொகுப்பில் 61 தலைப்புகளில் கவிஞர் இஸ்மட் பாடியுள்ளார். இக்கவிதைகள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துக்களைப் பேசுகின்ற யதார்த்த பூர்வமானவை. கவிதையின் செல்நெறியும், மொழிக்கையாள்கையும் பொத்துவில் பிரதேசத்துக்குரிய தனித்துவ அடையாளங்களாகும்.

இக்கவிதைத்தொகுப்பின் ஒரு கவிதையில் கவிஞர் இப்படி பாடுகின்றான். "வறுமைக் கோட்டில் அன்று என் முகவரியைத் தொலைத்தேன். கடற்றொழிலே போதுமென கல்வியை தொலைத்தேன்" தொலைத்த கல்வியை வாசிப்பின் மூலம் மீட்டுக் கொண்டதாகவும் கவிஞர் இஸ்மட் தன்னம்பிக்கையோடு குறிப்பிடுகின்றார். வாழ்க்கை முழுவதும் வாசிப்பின் மூலம் வெற்றி பெற்றதற்கான எடுகோள்களை மொழியினூடாக எடுத்துக் காட்டுகின்றார். கவிதை என்பது கவி, விதை, கதை ஆகிய தத்துவங்களோடு எதிர்காலத்தில் வாசம் வீச வேண்டும். அத்தகைய வாசம் வீசும் கவிதைகளை இஸ்மட் படைக்க வேண்டும். அவ்வாறு படைக்கின்ற பொழுது எதிர்காலத்தில் சிறந்த கவிஞனாக மிளிர்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Comments