காலனித்துவ காலத்தில் கைவிடப்பட்ட பல திட்டங்கள் புதிய திட்டங்களால் வீணாக்கப்பட்ட நிதி | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

காலனித்துவ காலத்தில் கைவிடப்பட்ட பல திட்டங்கள் புதிய திட்டங்களால் வீணாக்கப்பட்ட நிதி

எமது நாடு இன்று கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அதற்காக பல காரணங்கள் கூறப்பட்டு வரும் சூழலில் நாம் அதற்கு தீர்வும் நெருக்கடிகள் உருவாவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டாக வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலத்திலிருந்தே படிப்படியாக நாடு வங்குரோத்து நிலையை நோக்கி வந்ததை காணலாம். இதற்கு அனைத்து அரசும், மக்கள் பிரதிநிதிகளுமே காரணகர்த்தாவாவார்கள். சுதந்திரத்திற்கு முன்னர் எமது போக்குவரத்து சபையில் பென்ஸ் பஸ்கள் பொது போக்குவரத்தில் ஈடுபட்டதாகவும் அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

அன்றும் பென்ஸ் கார்கள், மொரிஸ் மைனர் கார்கள் பென்ஸ் லொறிகளும் சேவையில் இயங்கியிருக்கின்றன. ஆனால் இன்று எமது இ.போ.சபையில் டாட்டா, லேலன்ட் பஸ்களே காணக் கூடியதாக உள்ளது ஆனால் இன்றைய சூழலில் பென்ஸ் போன்ற தரமானவற்றை இறக்குமதி செய்வதற்கான வசதிகள் குறைவு. இவையும் எமது பொருளாதார வீழ்ச்சியின் ஒரு பக்கமே. வடக்கு கிழக்கில் அந்நாளில் பாவித்த போர்ட் கார்கள் மற்றும் லொறிகள் இருக்கின்றன.அவற்றை அன்று வாங்குவதற்கு அவர்கள் வசதியானவர்களாக இருந்தனர். அதற்கு காரணம் அவர்களின் விவசாய செய்கையும் கடின உழைப்புமாகும்.

அதே போலவே இந்நாட்டில் மக்கள் குடியேற முடியாத பிரதேசங்களாக காணப்பட்ட மலைப் பிரதேசங்களில் வௌ்ளைக்காரர் தேயிலையை பயிரிடுவதற்காக இந்திய வம்சாவளி மக்களை துன்புறுத்தி,வறுத்தி, கஷ்டப்படுத்தி பெருந்தோட்ட பயிர்ச்செய்கையை ஆரம்பித்தனர். ஆனாலும் அதற்காக பாடுபட்ட மக்களை அன்றிருந்த கலானித்துவ ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதோடு அடிமைகளாக நடத்தினர்.அப்பாவி மக்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் இலாபமீட்டுவதிலேயே கண்ணாயிருந்தனர்.

அன்னிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் பெருந்தோட்ட மக்களின் நலனில் பூரண பங்களிப்பை நல்கவில்லை.இன்றும் அதிசயத்தக்க எதுவும் நடக்கவில்லை. ஆரம்பகாலத்தில் ஏற்றுமதி மூலம் அதிக அன்னிய செலாவணியை பெற்று தந்ததுறையாக பெருந்தோட்டத்துறையே காணப்பட்டது. அம்மக்களின் கடின உழைப்பால் அவை சாத்தியமாக்கப்பட்டன.

ஆனால் இன்று காலனித்துவ ஆட்சியாளர்கள் செய்து வந்த பெருந்தோட்டத் துறையும் வீழ்ச்சியடைந்தே வருகிறது. ஒரு நாட்டின் இறக்குமதியைவிட ஏற்றுமதிகளே நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லும். எமது நாடு ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தைவிட இறக்குமதிக்கு அதிகம் செலவழிக்கிறது. எமது ஏற்றுமதி பொருள்களில் அநேகமானவை மூலப்பொருட்களும், மீள் ஏற்றுமதி பொருட்களாகும். இவற்றை வைத்துக் கொண்டு எமது நாட்டை முன்னேற்ற முடியாது என்பதே எமது கருத்து.

நாம் முடிவுப்பொருட்களாக தேயிலை ஏற்றுமதி செய்வதால் அதிக இலாபத்தை பெற்றுக் கொள்ளலாம். வௌ்ளைக்காரர் தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக இலாபம் அடைந்தார்கள். ஆனால் அவை அனைத்துமே அவர்களின் நாட்டுக்கே கொண்டு செல்லப்பட்டன. ஏனைய நாடுகளிடமும் பிடுங்கி தமது நாட்டை வளப்படுத்தியவர்கள் வௌ்ளையர்கள். அதற்காக பாடுபட்ட மக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டினர். அது தொடர்வதை தவிர்க்க முடியவில்லை. ஆட்கள் மாறியுள்ளனரே தவிர கொள்கையில் மாற்றம் இல்லை. வௌ்ளைக்காரர்கள் எமது நாட்டிலுள்ள வளங்களை சூறையாடியது உண்மைதான். அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களின் திட்டங்களும் செயற்பாடுகளும் நீண்டகால வருமானத்தை கொண்ட நல்ல திட்டங்களே. தேயிலைப் பயிர்ச்செய்கையும் அதில் ஒன்றே. ஆனால் அவை இன்று கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.காரணம் என்ன வென்றால்,பராமரிப்பு அற்ற நிர்வாகமும் சில திட்டங்கள் கைவிட்டதாலாகும். அவ்வாறு கைவிடப்பட்ட பாதையும் அது நெடுகே இருக்கும் அழகான சுழல் பற்றியே கீழே குறிப்பிடப்போகிறோம்.

வெள்ளைக்காரர் காலத்தில் கம்பளையில் இருந்து கொழும்புக்கு வருதற்கு கிட்டிய பாதை ஒன்று கவனிப்பாரற்று காணப்படுகிறது. கம்பளையில் இருந்து தொலஸ்பாகை தோட்டம் வழியாக புளத்யகொஹுபிட்டிய அவிசாவளை வழியான கொழும்பு செல்லும் பாதையாகும். இப்பதையில் 9ஒன்பது வலைவுகள் உள்ளன.இவ்வாறு வலைவுகள் உள்ள இரு பாதைகளையே மக்கள் அறிவர். ஒன்று கண்டி - மஹியங்கன பாதை அடுத்து இறக்குவானை - தெனியாய பாதையாகும். இது மூன்றாவது பாதையாகும். இப்பாதை வழியே செல்லும் போது நீர்வீழ்ச்சிகளும், மலைகளும் நிறைந்து காணப்படும் அழகான பாதையாகும். பின்னேரம் சூரியன் மறையும் காட்சிகள் மிக ரம்மியமானதாகும். இப்பாதை நெடுக செல்லும்போது தொலஸ்பாகை தோட்டத்தை அடையும் போது நுவரெலியாவில் இருக்கும் குளிர் நிறைந்த மிதமான காலநிலையை அனுபவிக்கலாம். இப்பிரதேசத்திலே இப் பாதை முடிவடையும் பெலன்பிட்டிய கிராமம் அமைந்துள்ளது. தொலஸ்பாகை தோட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றாறு கேகாலை பிரதேசத்தையும் கண்டி பிரதேசத்தையும் பிரிக்கிறது. கம்பளையில் இருந்து சுமார் 3மணித்தியாலத்தில் கொழும்பை வந்தடையக்கூடிய இப்பாதை இன்று குண்டும் குழியுமாக ஒடுங்கி இரு பக்கமும் காடுகள் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது ஆனாலும் இ.போ.ச. பஸ் செல்வதையும் காணலாம். இப்பாதையில் செல்லும் போது ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.

இப்பாலம் எந்த பராமரிப்பும் இல்லாமல் இன்றும் 200வருடங்கள் கடந்து உறுதியான நிலையில் காணப்படுகிறது. ஏனென்றால் வௌ்ளையர்களின் சில திட்டங்கள் நீண்ட நெடுங்காலம் உறுதிப்பாடுடையதாகும்.அவற்றுக்கு அவர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்களெல்லாம் அவர்களது நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். அன்று அவர்கள் கொண்டுவந்த இரும்பு கம்பிகள் வாழ்நாள் உறுதியானது. ஆகையாலே இப் பாலம் இன்று உறுதியுடன் காணப்படுகிறது.

இவற்றை பராமரித்தாலே போதும் கூடிய பலனையும் செலவுகளை குறைத்து கொள்ளலாம். அத்தோடு அவர்கள் அன்று செய்த நீர்மின் உற்பத்தி நிலையங்கள் கைவிட்டு புதிய நீர் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பழையதை பராமரித்திருந்தால் புதிய திட்டத்திற்கு செலவழித்த பெருந்தொகை பணத்தை மீதப்படுத்தியிருக்கலாம். அன்று வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய நீர் மின் நிலையங்களின் உதிரிப்பாகங்கள் இன்று நல்ல நிலையில் இருக்கின்றன.ஆட்சிக்கு வந்த அரசுகள் இதர செலவுகளை செய்து நல்ல பல திட்டங்களை கவனிக்காமல் விட்டப்பட்டுள்ளன.

அதேநேரம் இவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் பிரதேசங்களாகும். அதையாவது செய்திருக்கலாம். ஆனால் செய்வதில்லை. செய்ய முனைபவர்களுக்கும் இடம்கொடுப்பதில்லை.இச் செயற்பாடுளாலேயே பெருந்தோட்ட மக்கள் இன்று துப்பப்படுகின்றனர்.

உலகில் அடிமைப்பத்தப்படும் மக்களும் அடிமைகளாக மக்கள் வாழும் நாடுகள் அபிவிருத்தியடைந்த சரித்திரமே இல்லை. இலங்கயைிலும் அவ்வாறான நிலையே காணப்படுகிறது. காடு, மலைகள் வெட்டி நிலங்களை வளப்படுத்திய பெருந்தோட்ட மக்களை வெள்ளைக்காரர்கள் அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தினார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த ஒவ்வொரு அரசும் அவர்களை கண்டுகொள்ளாது அடிமைகளாக நோக்கும் நிலையே தொடர்கிறது.

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளில் கைவைக்காமல் பெருந்தோட்டங்களை முறையாக பராமரித்தாலே எமது நாட்டுக்கு பெருந்தொகையான அன்னிய செலாவணியை கொண்டு வரலாம்.

ஸ்ரீ

Comments