மறைந்தார் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் | தினகரன் வாரமஞ்சரி

மறைந்தார் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்

மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், 21.-10-.2022 அன்று காலமானர் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகைப் பெருங் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட தெளிவத்தை ஜோசப், ஹாலிஎல்லைக்கு அருகேயுள்ள ஊவாக்கட்டவளை என்கிற தேயிலைத் தோட்டத்தில், தங்கசாமி சந்தனசாமிப் பிள்ளைக்கும் பரிபூரணத்திற்கும் 16.02.1934இல் மகனாகப் பிறந்தார். ஜோசப் தனது ஆரம்பக்கல்வியை தோட்டப் பாடசாலையில் தனது தந்தையிடம் கற்றபின், தமிழ்நாடு கும்பகோணம் ஷலிட்டில் பிளவர்| உயர்நிலைப்பள்ளியில் இரண்டுவருடகாலம் ஐந்தாம் வகுப்புவரை கற்று, இலங்கை திரும்பி பதுளையில் உள்ள புனித பீட்ஸ் கல்லூரியில் சாதாரணதரம் வரை கற்றவர்.

பிந்திய ஐம்பதுகளில் தமிழக சஞ்சிகையான உமாவில் 'வாழைப்பழத்தோல்| என்ற இவரது முதற்கதை வெளியாகியது. அதனைத் தொடர்ந்து பேசும்படம் இதழிலும் இவரது படைப்பு வெளியாகியது. தொடர்ந்து கே.வி.எஸ்.மோகன் வெளியிட்ட கதம்பம் சஞ்சிகையிலும் வீரகேசரியின் தோட்டமஞ்சரி பக்கத்திலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

1956இல் தெளிவத்தைத் தோட்டத்தில் இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. அதேசமயம் பகுதிநேர எழுதுவினைஞராகவும் தொழில்புரிய ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் தனது இருப்பிடத்தின் பெயரைத் தனது பெயருடன் இணைத்து தெளிவத்தை ஜோசப் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

1964இல் கொழும்பில் ஸ்டார் டொபி நிறுவனத்தில் பிரதம கணக்காளராக இணைந்து பணியாற்றினார்.

மலைமுரசு, மலைப்பொறி, தேனருவி, கலைச்செல்வி, அல்லி, ஈழமணி, கதம்பம் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிக்கொண்டிருந்த தெளிவத்தை ஜோசப், வீரகேசரி பத்திரிகையூடாக 1963இல் மலையக எழுத்தாளர் மன்றம் நடத்திய முதலாவது சிறுகதைப் போட்டியில் பாட்டி சொன்ன கதை என்னும் சிறுகதைக்கும் 1964இல் நடத்திய இரண்டாவது போட்டியில் பழம் விழுந்தது, என்னும் சிறுகதைக்கும் பரிசில்கள் பெற்றுக்கொண்டார். இரண்டுமுறை தொடர்ந்து முதற்பரிசுகளைப் பெற்றதன் மூலம் இவரது சிறுகதை ஆளுமை தேசிய ரீதியில் இனங்காணப்பட்டது.

கண்டியில் இருந்து வெளிவந்த மலைமுரசு என்ற பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரது நாமிருக்கும் நாடே என்ற சிறுகதை முதற்பரிசைத் தட்டிக் கொண்டது. 1979இல் இக்கதையின் தலைப்பைக் கொண்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வைகறை வெளியீடாக வெளிவந்தது. இச்சிறுகதைத் தொகுதி 1979இல் அரச சாஹித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.

இனவிவகார அமைச்சு மும்மொழிகளில் நடத்திய சிறுகதைப் போட்டியில் தமிழ்மூலம் படைப்புக்கான சிறுகதைப் போட்டியில் இவர் 1998இல் முதற்பரிசு பெற்றார்.

எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவரது இரண்டாவது தொகுப்பான தெளிவத்தைஜோசப் சிறுகதைகள் பாக்யா வெளியீடாக வெளிவந்து 2013இன் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றுக்கொண்டது.

மீன்கள் என்று மகுடத்தில் இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் கலைமகள் சஞ்சிகை இவரது சிறுகதைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் பிரசுரித்தது. தமிழ் நாட்டின் குமுதம், உமா, சரஸ்வதி, சுபமங்களா பொன்ற சஞ்சிகைகளிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றன.

இவரது முதலாவது நாவல் காதலினால் அல்ல என்னும் தலைப்பில் மித்திரனில் 1967இல் தொடராக வெளிவந்தது.

காலங்கள் சாவதில்லை என்ற நாவல் வீரகேசரியில் தொடராக வந்து பின்னர் வீரகேசரிப் பிரசுரமாக 1974இல் வெளிவந்தது. மாறுதல்கள்| என்ற நாவலையும் இவர் எழுதியுள்ளார்.

நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் என்ற மற்றுமொரு தொடர்கதை தினகரன் வாரமஞ்சரியில் 1996இல் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவரது பாலாயி, என்ற குறுநாவல் கதம்பம் திபாவளி மலரில் 1967ஆம் ஆண்டு வெளிவந்தது. ஞாயிறு வந்தது என்னும் குறுநாவல் 1966 கலைமகளில் வெளிவந்தது. மனம் வெளுக்க| என்ற குறுநாவல் தினகரனில் வெளிவந்தது. இந்த மூன்று குறுநாவல்களும் தெகுக்கப்பட்டு ஒரே தொகுப்பாக 1997இல் வெளிவந்தது.

தேசிய இலக்கியப் பேரவையும் தமிழ்நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் இணைந்து 1995இல் நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது ஷகுடைநிழல் என்ற படைப்பு இரண்டாவது பரிசு பெற்றது. இக்குறுநாவல் பின்னர் நூலுருவம் பெற்றது.

இவரது மலையகச் சிறுகதை வரலாறு| 2000ஆம் ஆண்டில் வெளிவந்து இவரை ஒரு சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. மலையக சிறுகதை வரலாற்றை 1920 முதல் 1960 வரை முதற்கட்டமாகவும் 1960 முதல் 2009 வரை இரண்டாம் கட்டமாகவும் வகுத்து இவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுநூல் அவ்வாண்டின் தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் பெற்றுக்கொண்டது.

துரைவி பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்து இவர் வெளிக்கொணர்ந்த 33 சிறுகதைகள் அடங்கிய மலையகச் சிறுகதைகள், 55 சிறுகதைகள் அடங்கிய உழைக்கப் பிறந்தவர்கள், ஆகிய இரண்டு தொகுப்புகளும் மலையக இலக்கியத்திற்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபது வருடகாலத்துக்குரிய கதைகளைத் தேடிச் சேகரித்து தொகுத்து இரண்டு வருடகால எல்லையுள் இப்பணியைச் செய்து சாதனை படைத்தார். துரைவி தினகரன் சிறுகதைகள், சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் என்னும் நூல்களை தொகுத்து பதிப்பிக்க வழிசமைத்தார்.

தெளிவத்தை ஜோசப் கடைசியாக எழுதிய நூல் இலங்கைத் தமிழ்ச்சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன் என்பதாகும்.

இவர் சிறுகதைகள், நாவல், விமர்சனம், இலக்கியக் கட்டுரைகள், திரைக்கதை வசனம் (புதிய காற்று) தொலைக் காட்சி நாடகம், வானொலி நாடகம் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்துச் செயற்பட்டார். இலங்கையில் உருவான புதிய காற்று திரைப்படக் கதை வசனம் இவரது கைவண்ணமாகும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், பேராதனை, யாழ்ப்பாணம், சப்ரகமுவ பல்கலைக் கழகங்களிலும் இவரது படைப்புகளைக் குறித்து உயர் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்கள்.

தலைநகர் கொழும்பில் மலையக எழுத்தாளர் மன்றம் உருவாக முன்னின்று உழைத்தவர் ஜோசப். அம்மன்றத்தின் தலைவராக வெகுகாலம் பணிபுரிந்தவர். தமிழ் சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவரது மனைவியின் பெயர் பிலோமினா. ஜோசப் தம்பதியினருக்கு திரேசா, தோமஸ் ரமேஷ் திருமதி ரவீந்திரன், தெக்ளா சியாமளா ஆகியோர் பிள்ளைகளாவர்.

இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.மூன்று தடவை சாகித்திய விருது பெற்ற இவர், சம்பந்தன் விருது, கம்பன் கழக விருது, தேசிய ஒற்றுமைக்கான விருது, கொடகே தேசிய சாஹித்திய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலாசார அமைச்சின் தேசநேத்ரு| விருது, மத்திய மாகாண, மேல்மாகாண இலக்கிய சாதனையாளர் விருது, தமிழியல் வித்தகர் விருது, பேராதனைப் பல்கலைக்கழக இலக்கிய விருது(2007), இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு வழங்கிய தமிழ்மணி (1992) இலக்கியச் செம்மல் (1993)விருதுகள், எழுத்தாளர் ஊக்குவிப்புமையத்தின் தமிழியல் விருது (2008) கலாபூஷணம் விருது(1996), தமிழ்நாடு விஷ்ணுபுர விருது(2003) உட்படப் பல விருதுகள் பெற்றுள்ளார்.

மல்லிகை சஞ்சிகை இவரைக் கௌரவிக்கும் முகமாக இவரது படத்தை அட்டையில் பொறித்து கட்டுரையும் வெளியிட்டது. ஞானம் சஞ்சிகை இவரது பணிகளைப் பாராட்டுமுகமாக இவரது பவளவிழாவை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 16-.05.-2010இல் கொண்டாடியது. பவளவிழாச் சிறப்பிதழையும் வெளியிட்டது. அத்தோடு இவரது தொடர் நேர்காணலை ஞானம் சஞ்சிகையின் 23 இதழ்களில் தொடராக வெளியிட்டுக் கௌரவித்தது.

இவரது, நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 என்ற நாவல் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கும் 2016ஆம் ஆண்டுக்கான கரிகாற் சோழன் விருதினைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அரசின் அதியுயர் விருதான சாஹித்திய ரத்னா விருதினை 2014இல் பெற்றவர் தெளிவத்தை ஜோசப். ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.

தி.ஞானசேகரன்

Comments