கிழக்கு இலங்கையின் இலக்கியவிசை அன்புமணி இரா. நாகலிங்கம் | தினகரன் வாரமஞ்சரி

கிழக்கு இலங்கையின் இலக்கியவிசை அன்புமணி இரா. நாகலிங்கம்

நான்கு ஆண்டுகள்தான் மட்டக்களப்பில் இருந்தேன். இந்த நான்கு ஆண்டுகளும் எனது இலக்கிய ஆர்வத்துக்குத் தீனிகிடைத்த காலமாகும். அன்புமணி இரா. நாகலிங்கத்தின் தொடர்பு எனது இலக்கியவானை விரிவாக்கியது. எனது இலக்கிய விமர்சன நோக்கைக் கூர்மை ப்படுத்தியது.

வட இலங்கையில் இரசிகமணியைப்போல கிழக்கிலங்கைக்கொரு அன்புமணி. தனது மலர் சஞ்சிகை மூலம் ஏனைய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர். கிழக்கிலங்கையின் இலக்கிய விசையாக அன்புமணி திகழ்கிறார் என்பதை எவரும் மறுக்க முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார் கலாநிதி முல்லைமணி வே. சுப்பிரமணியம். ( மலர் சஞ்சிகையும் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கமும் - கட்டுரை- ஞானம் 68ஜனவரி 2006)

மட்டக்களப்பில் ஆரையம்பதி கிராமத்தில்  இராசையா  தங்கப்பிள்ளை தம்பதியருக்கு தலைமகனாக 6.3.1935இல் பிறந்த  நாகலிங்கம், ஆரையம்பதி ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் பாடசாலையிலும் காத்தாங்குடி மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றவர்.  

1952இல் லிகிதராக நியமனம் பெற்று,  மட்டக்களப்பு அரசினர் கல்லூரி,   கல்வித்திணைக்களம், அம்பாறை கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றினார். 1981இல் இலங்கை நிர்வாகசேவைப் போட்டிச் சோதனையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட்டக்களப்பு கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாணசபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமனின் செயலாளராகப் பணியாற்றினார்.

மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம் 1961ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டபோது,   செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பணியாற்றிய இவர், மட்டக்களப்பு  மாவட்ட  கலாசாரப்  பேரவை  செயற்குழு  உறுப்பினர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றத்தின் தலைவர், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் போஷகர் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.

இவரின் முதல் ஆக்கம் 'கிராமபோன் காதல்' எனும் தலைப்பில் கல்கி இதழில் 1954இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள், நாவல் ஆகியவற்றை  எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் தமிழக  சஞ்சிகைகளான கல்கி, கலைக்கதிர், புதுமை ஆகியவற்றிலும் இலங்கையில்,  வெளிவரும் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.

 இவரது முதற் கவிதை பச்சை வயல் ஈழத்து வார ஏடான சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரமானது.

அன்புமணி, அருள்மணி, தமிழ்மணி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதியுள்ளார்.

 இவரது எழுத்தை மதித்து அவ்வப்போது கடிதம்  எழுதிக் கதைகோரியவர்கள் கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவனும் சுதந்திரன் ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகமும் ஆவர். அன்புமணி தன்னை சுதந்திரன் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளராளகவே பதிவு செய்துள்ளார்.

பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துப் புகழ்பெற்றார். ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் 'மனோகரா' எனும்  மேடை நாடகத்தின் மூலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். இவரின் 'சூழ்ச்சிவலை' எனும் மேடை நாடகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'அமரவாழ்வு', 'ஏமாற்றம்', பிடியுங்கள் கலப்பையை' போன்ற ஓரங்க நாடகங்கள் இவரால் மேடையேற்றப்பட்டன. 

இலங்கை வானொலியில் இவரது வானொலி நாடகங்கள் பல ஒலிபரப்பாயுள்ளன.  இவரது வானொலி நாடகங்களில் ஒன்றான 'நமது பாதை' 1967தை முதல் மூன்று மாதங்களுக்கு தொடர் நாடகமாக ஒலிபரப்பப் பட்டது. வேறு பல நாடகங்களும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. இவரது வானொலி நாடகங்களில் ஒன்றான ஆத்ம திருப்தி  என்ற நாடகம் தியாக தீபம் என்ற தலைப்பில்  நாடகமாக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1972ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட 'திரைகடல் தீபம்' எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு  இலங்கை கலைக் கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது.  இவர் நாடகப் போட்டிகள் பலவற்றில் நடுவராகக் கடமையாற்றியுமுள்ளார். அத்தோடு கொழும்பில்  நடைபெற்ற சில நாடகக் கருத்தரங்குகளில் பங்களிப்புச் செய்துள்ளார். இவர் ஒரு நாடக விமர்சகருமாவார்.

இவர் மலர் என்ற இலக்கிய இதழை 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டுவரை வெளியிட்டு, நாடளாவிய ரீதியில் பல எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்துள்ளார். மலர் முதிர்ந்த எழுத்தாளர்களுக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும்  இடமளித்தது. இளம் எழுத்தாளர்களை ஊக்கவித்துப் பிரபலமாக்கியது.

மலர் சஞ்சிகை வெளியீடுபற்றி அன்புமணி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'எனது எழுத்துலகில் மலர் வெளியீடு ஒரு மைல்கல்- ஒரு முக்கிய திருப்பம். –

அது ஒரு தனிநபர் முயற்சி. மிக நீண்ட காலமாக, தரமான இலக்கிய சஞ்சிகையை நடாத்த வேண்டும் என்ற எண்ணம் என் நெஞ்சில் கனலாகக் கனன்று கொண்டிருந்தது. நா.பார்த்தசாரதியின் தீபம் சஞ்சிகையைப் பார்த்ததும்  அந்தக் கனல் இன்னும் அதிகமாகியது. ஈழத்தில் அரசியல் கலப்பின்றி கோஷ்டி மனோபாவம் இன்றி பிரதேச வேறுபாடின்றி இனமத வேற்றுமையின்றி அனைவரையும் அணைத்துக் கொண்டு வெளிவந்த ஒரே சஞ்சிகை மலர் எனலாம். ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் அதில் எழுதினார்கள். அப்துல்ஸமது, வ.அ. இராசரத்தினம், அருள் செல்வநாயகம், எஸ்.பொ., மஹாகவி, அண்ணல், திமிலைத்துமிலன், யூ.எல். தாவூத், தெணியான், வை. அஹமத், கு.இராமச்சந்திரன், சேகு இஸ்ஸத்தீன் (வேதாந்தி), நிதானி, அருள் சுப்பிரமணியம், பெனடிக்ற்பாலன், கவிதா, செ. யோகநாதன், கரவையூர்க் கிழார். செங்கை ஆழியான், அன்பு முகைதீன், எம். ஏ. ரஹ்மான், முதலிய எழுத்தாளர்கள் பலர் இதில் அடங்குவர்.

ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்கு மலர் இலவச விளம்பரம் வெளியிட்டது. ஒவ்வொரு ஆக்கத்துடனும் அதை எழுதியவரின் படமும் குறிப்புகளும் வெளியிடப்பட்டன.

வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதாந்த விமர்சனம், ஓர் அனுபவம்,   எனக்குப் பிடித்த பாத்திரம் முதலிய அம்சங்கள் இடம்பெற்றன. வெற்றி பெற்றோருக்கு ஈழத்து நூல்கள் அனுப்பப் பட்டன. சினிமா விஷயங்கள் தவிர்க்கப்பட்டன. ஒவ்வொரு மாதமும் ஆணித்தரமான தலையங்கங்கள் எழுதப்பட்டன.

அட்டைப்படம் மற்றும் உள்ளே சில படங்கள் முதலியவற்றை நானே வரைந்தேன்.  ஏனையவற்றை ரமணி, கிருஷ்ணா ( திமிலைத்துமிலன்) முதலியோர் வரைந்தனர்.

ஒவ்வொரு மாதமும் கொழும்பு சென்று புளொக் செய்தல், விளம்பரம் சேகரித்தல், என்பன தனித்துவ முயற்சிகள் ஆகின. மலர் வெளிவந்த காலத்தில் அஞ்சலி, கற்பகம், செம்பருத்தி முதலிய பல ஈழத்து இலக்கிய ஏடுகள் வெளிவந்தன.

எவ்வித பொறாமையும் இல்லாமல், அவற்றின் ஆசிரியர்கள் நட்புறவுடன் மலரை அணுகினர் .  பரஸ்பரம் நல்லுறவு வளர்ந்தது'.

அன்புமணி தனது அன்பு வெளியீட்டகம் மூலம் ஒன்பது பிற எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டுள்ளார். மலர் சஞ்சிகை நடத்திய காலத்தில் செ. யோகநாதனின் ஒளி நமக்கு வேண்டும் அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது, முல்லைமணி வே. சுப்பிரமணியத்தின் அரசிகள் அழுவதில்லை என்பன அவற்றுட் சிலவாகும்.

அன்புமணியின் நூல்களாக, இல்லத்தரசி (சிறுகதை-1980); வரலாற்றுச் சுவடுகள் (சிறுகதை-1992) ;  ஒரு தந்தையின் கதை (நாவல்- 1989); ஒரு மகளின் கதை (குறுநாவல் -1995); தமிழ் இலக்கிய ஆய்வு (2007); எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் (2007) ; பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (2007)  ஆகியவை வெளிவந்துள்ளன.

அன்புமணி  1964இல்  ஆரையம்பதியைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியையான பார்வதியைத் திருமணம் செய்தார்.  இவர்களுக்கு ஏழு மகன்களும் ஒரு புத்திரியும் பிள்ளைகளாயினர்.

அன்புமணியின் பணிகளைப் பாராட்டி பின்வரும் நிறுவனங்கள் விருதுகள் வழங்கிக் கௌரவித்துள்ளன.  (1)'தமிழ்மணி'- இந்துசமய விவகார அமைச்சு- 1992 (2)வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது - 2001 (3)'கலாபூசணம்' – 2002 (4) பல்கலை வித்தகர்| - சிந்தனைவட்டம் 2008. இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன. ஞானம் சஞ்சிகையின் 69ஆவது இதழில் இவர் அட்டைப்பட அதிதியாகக் கௌரவிக்கப்பட்டார்.

அன்புமணி 12-.01.-2014இல் அமரரானார்

Comments