'குறைந்த வருமானம் கொண்ட நாடு' அறிவிப்பு இலங்கைக்கான சலுகைக்கடன் கதவுகளை திறக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

'குறைந்த வருமானம் கொண்ட நாடு' அறிவிப்பு இலங்கைக்கான சலுகைக்கடன் கதவுகளை திறக்குமா?

இலங்கையில் கடந்த வாரம் இடம் பெற்ற இரு வேறு சம்பவங்கள் பலரது கவனத்தை ஈர்த்து பேசு பொருளாக மாறியுள்ளன. முதலாவது இலங்கையை ஒரு குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிக்குமாறு கோரும் அமைச்சரவைத் தீர்மானம். இரண்டாவது வருமான வரிகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள். இதில் முதலாவது ஒரு பட்டதாரி தொழில் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நான் பட்டதாரியல்ல என்னை கல்விப்பொதுத் தராதரப் பத்திரம் சித்தி பெற்றவராக அறிவியுங்கள் என்று கோருவதை ஒத்த ஒரு நடவடிக்கை.

இலங்கை 2019இல் 4060அமெரிக்க டொலர் தலாவருமானத்தைப் பெற்று ஒரு உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாகத் தரமுயர்த்தப்பட்ட போது அது மிகவும் சிலாகிக்கப்பட்டு இலங்கையின் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த ஆண்டில் உயர்மட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடாக உலக வங்கி கருதிய தலாவருமான எல்லை 4040அமெரிக்க டொலர்களாகும். எனவே வெறும் 20டொலர்கள் வித்தியாசத்திலேயே இலங்கை உயர்மட்ட நடுத்தர வருமான நாடு என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால் 2020இல் இலங்கையின் தலாவருமானம் 4020டொலர்களாக வீழ்ச்சியடைந்தது. இதனால் மீண்டும் குறைந்த மட்ட நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் இலங்கையின் தலாவருமானம் 2021இல் 3720டொலராக வீழ்ச்சியடைந்தது. 2022இல் இது சற்று முன்னேற்றமடைந்து 3820டொலர்களாகப் பதிவாகியது. இக்கணிப்பீடுகள் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி வெளியிடப்படும் தரப்படுத்தல்களாகும். இவற்றை தனிப்பட்ட ஒரு நாட்டினால் மாற்றியமைக்க முடியாது.

2022ஆம் ஆண்டின் தரப்படுத்தல்களுக்கு அமைய குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவிக்கப்பட வேண்டுமாயின் ஒரு நாட்டின் தலாவருமானம் 1085டொலர்களை விடக் குறைவாக இருக்க வேண்டும். எனவே கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள போதிலும் வறிய நாடு என்ற பகுதிக்குள் வகைப்படுத்தப்படும் அளவுக்கு அதன் வீழ்ச்சி இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறாயின் அவசர அவசரமாக இலங்கையை ஒரு குறைந்த வருமான நாடாக பட்டம் இழக்கச் செய்வதற்கான கோரிக்கை விடப்பட்டதேன் என்ற வினா எழுகிறது.

இலங்கையால் தற்போது டொலர் கடன்களைப் பெற முடியாத நிர்ப்பந்தமே இதற்கு காரணம் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமில்லை. IMF இன் கடன் பெறும் ஒப்பந்தம் கைச்சாத்திடப் படமுடியாமல் ஆளணிமட்ட இணக்கபாட்டுடன் நிற்கிறது. உலக வங்கியோ உடனடியாக இலங்கைக்கு கடனுதவி வழங்கும் திட்டங்கள் ஏதும் இப்போதைக்கு இல்லை என கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்ததுடன் உதவிவழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களுடன் இணக்கப்பாட்டுடனேயே எதிர்காலத்தில் இலங்கைக்கான உதவிகள் பற்றி சிந்திக்க முடியும் எனக்கூறியிருந்தது.

எனவே IMF உடன் ஒரு ஒப்பந்நத்தைச் செய்யும் வரையில் கடனுதவிகள் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு. அது மட்டுமன்றி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக ஜப்பானுக்குப் பறந்த தூதுவர்களாலும் பணவரவுகள் சாத்தியப்படவில்லை. மேலும் நெருக்கடிக் காலகட்டத்தின் ஆரம்பத்தில் ஆபத்பாந்தவனாக இலங்கைக்கு உதவிய இந்தியாவும் சீனக் கப்பல் வருகையினைத் தொடர்ந்து மேலதிக நிதிஉதவிகள் சாத்தியமில்லை எனச் சொல்லிவிட்டது. ஏற்றுமதிச் சம்பாத்தியங்களும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் பண அனுப்பல்களும் சிறிய முன்னேற்றங்களைக் காட்டினாலும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு அவற்றின் மூலம் போதியளவு டொலர் கையிருப்புகளைப் பெறமுடியாது. எனவே உடனடியாக டொலர்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

அத்துடன் அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச அறிக்கை ஒன்றின்படி சர்வதேசத்தின் உதவி அத்தியாவசியமாகத் தேவைப்படும் 54நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு குறைந்த மட்ட மத்தியதரவருமானம் பெறும் நாடாகையால் உலக வங்கியின் இரண்டு முக்கிய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகிய மீள்கட்டுமானம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான வங்கியூடாகவே Intenational Bank for reconstruction and Development- IBRD) கடன்களைப் பெறமுடியும் அவை சார்பளவில் மானியங்கள் போன்ற சலுகைக்கடன்கள் அல்ல. மாறாக சர்வதேச அபிவிருத்தி முகவரகம்(international Development Agency- IDA) என அழைக்கப்படும் சாளரத்தின் வழியாகவே வறியநாடுகளுக்கான நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கையை ஒரு குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவித்துவிட்டால் அதற்கூடாக இலங்கைக்கான சலுகைக்கடன் கதவுகள் திறக்கும் என இலங்கை நம்புகிறது. எவ்வாறாயினும் அமைச்சரவை அவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றினாலும் இலங்கை தொடர்ந்தும் ஒரு மத்தியதர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறானதொரு நிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்ட வரிச்சீர்திருத்தங்கள் ஒரு அபிவிருத்தியடைந்த நாட்டின் வரிக்கட்டமைப்புக்கு ஒப்பான அல்லது அதைவிட மேலே சென்ற ஒரு வரிமுறையாகக் காணப்படுகிறது. நாட்டை ஒரு குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவித்துவிட்டு ஒரு செல்வந்த நாட்டின் வரிமுறைமையை அமுல்படுத்த விழைவது முரண்பட்ட கொள்கைகளாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் பணவீக்கம் 70சதவீதத்தை விட அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் 8.4சதவீதத்தினால் சுருங்கியுள்ள நிலையில் மக்களின் கொள்வனவு சக்தி வெகுவாகப்பாதிக்கப் பட்டு வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமல் மத்திய தர வகுப்பினரும் தொழில் புரியும் வறியவர்களாக மாறிவரும் நிலையில் மேற்படி வரிச் சிர்திருத்தங்கள் மிக மோசமான சமூகவிளைவுகளுக்கு இட்டுச் செல்லும். வரிவருவாயை அதிகரிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு கோரிக்கையாக இருந்தாலும் மக்களை கசக்கிப்பிழிந்து அதனைச் செய்வது தவறு.

பொன்முட்டை இடுகிறது என்பதற்காக வாத்தின் வயிற்றைவெட்டி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சுருட்டலாம் என்று நினைப்பது பொன்முட்டை இடும் வாத்தை சாகடித்துவிடும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments