இலங்கை மீது களங்கம் ஏற்படுத்தும் கருத்துகள்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மீது களங்கம் ஏற்படுத்தும் கருத்துகள்!

உலகின் எந்தவொரு நாடும் பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைய வேண்டுமானால் சர்வதேசத்துடன் நல்லுறவு பேணப்படுவது அவசியம். சர்வதேசத்தின் உதவியும் ஆதரவும் இன்றி எந்தவொரு நாடும் தனித்து நின்று இயங்க முடியாது.

உலகுக்கான இந்தப் பொதுவிதியானது எமது நாட்டுக்கும் பொருந்தும். இலங்கை மீது உலகின் சில குறிப்பிட்ட நாடுகள் முரண்பாடுகளைக் கொண்டுள்ளனவென்பது புரியாத விடயமல்ல. அந்த முரண்பாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு எதிரான தீர்மானமாகப் பிரதிபலிக்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது என்பதற்காக எமது நாடு குற்றமிழைத்துள்ளதென்று முடிவு செய்துவிட முடியாது. மனிதஉரிமைகள் பேரவை தீர்மானத்தின் பின்புலத்தில் சில நாடுகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் உள்ளன.

அந்நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடியவாறு உலகில் சில சக்திகள் உள்ளன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அச்சக்திகள் உள்ளன.

இலங்கையில் எந்தவொரு அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அதற்கு எதிராக செயற்படுவதற்கென்றே சில சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் தயாராக உள்ளன. அதன் விளைவுதான் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் ஆகும்.

உலகில் எந்தவொரு நாடும் தனது சுதந்திரத்தையும் இறைமையையும் ஒருபோதுமே தாரைவார்த்துவிட முடியாது. சர்வதேசத்தின் சில சக்திகள் அபாண்டமாகக் குற்றம் சுமத்தும் போது, அக்குற்றச்சாட்டுகளை எமது நாடு ஏற்றுக் கொண்டு விடவும் முடியாது. இலங்கையின் நிலைப்பாடு இவ்வாறானதுதான்.

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் மாத்திரமன்றி, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் கூட உலகின் சில நாடுகளுடன் முரண்பாடுகள் நீடிப்பதற்கு எமது நாட்டின் உள்நாட்டு அரசியல்வாதிகள் சிலரும் காரணகர்த்தாக்களாவர். யுத்தம் முற்றாக முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், அவர்கள் இனவாத பிரசாரங்களை கைவிட்டு விடுவதாக இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளுடன் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு முயற்சிக்கின்ற வேளையில், இனவாதரீதியில் எதிர்ப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே பிரிவினைவாதிகள் என்ற அர்த்தத்தில் அப்பிரசாரங்கள் காணப்பட்டன.

அதேசமயம் கடந்த வாரம் நோர்வே நாட்டின் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சோல்ஹெய்ம் இலங்கை வந்திருந்த சமயத்திலும், இவ்விதமான எதிர்ப்புக் கருத்தொன்றை சிலர் முன்வைத்திருந்தனர். புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சித் திட்டத்தின் பேரிலேயே எரிக் சோல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாக அவர்கள் கூறியிருந்தனர்.

எந்தவித ஆதாரமுமின்றியே இவ்வாறான கருத்துகளை சிலர் முன்வைக்கின்றனர். அக்கருத்துகளை சில ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. இவ்வாறான அபத்தமான கருத்துகளை முன்வைப்பதனால் இலங்கை மீது சர்வதேசத்துக்கு அவப்பெயர் தோன்றுமென்று அவர்கள் சிந்திப்பதில்லை. எங்கும் இனவாதம், எதிலும் இனவாதம் என்ற நிகழ்ச்சிநிரலில் செயற்பட்டு வருகின்ற இவ்வாறான பிரகிருதிகள் உள்ளவரை இலங்கை மீதான களங்கமும் நீங்கப் போவதில்லை!

Comments