சர்வதேச பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் வீழ்ந்து விடும் பேராபத்து! | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் வீழ்ந்து விடும் பேராபத்து!

இலங்கை பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பது என்பது நாம் அறிந்த விடயமாக இருக்கும் நிலையில், பிறக்கவிருக்கும் 2023ஆம் ஆண்டு மேலும் சவால் மிக்க ஆண்டாக அமையப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார பின்னடைவைப் போன்று பாரியதொரு பின்னடைவை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களின் பின்னர் உலகின் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் போன்ற காரணிகளால் உலகின் பொருளாதார வளர்ச்சியானது வீழ்ச்சி கண்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 6.0வீதமமாகக் காணப்பட்ட பொருளாதா வளர்ச்சி 2022ஆம் ஆண்டு 3.2வீதமாகக் குறைந்திருப்பதுடன், 2023ஆம் ஆண்டு இது மேலும் குறைந்து 2.7வீதமாகக் காணப்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் மிகவும் மோசமான பொருளாதார வளர்ச்சியாக இதனைக் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் உலகிலுள்ள மிகவும் ஏழ்மையான 54நாடுகளுக்கு உடனடியான கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் எச்சரித்துள்ளது. கடன் மறுசீரமைப்புக்கான அணுகல்கள் இந்த நாடுகளுக்குக் கிடைக்கவில்லையாயின் வறுமை அதிகரித்து, முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்காமல் போய் பாரிய நெருக்கடிகளை அந்நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வுப் பத்திரிகையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் கடன் மறுசீரமைப்புக்கள் உரிய முறையில் நியாயமானதாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் சர்வதேச மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கைகள் மிகவும் முக்கியமானவை. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், எதிர்கால உலகப் பொருளாதார நெருக்கடி இந்நாட்டின் சவால்களை மென்மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் எரிசக்தித் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா தடுத்துள்ளமை நிலைமைகளை மோசமாக்கியுள்ளது.

இலங்கைக்கு இது நேரடியான தாக்கத்தைச் செலுத்தாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் வெகுவாக உணரப்பட்டுள்ளது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ளவர்கள் எரிபொருள்களைப் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர். அது மாத்திரமன்றி பிரித்தானியாவில் எரிசக்தித் தட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட நேர மின்துண்டிப்புக்கான அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளில் வட்டிவீதங்கள் அதிகரிக்கப்பட்டமை பணவீக்கத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளது. விசேடமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் இதனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் அந்தத் தரப்பினரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் என்பன வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு உலகின் பல நாடுகள் பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளன. 40வருடங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பாரியதொரு பணவீக்கத்தைச் சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் 8.3வீதமாகக் காணப்பட்டதுடன், பிரித்தானியாவின் பணவீக்கம் 9.9வீதமாகவும், ஐரோப்பாவின் பணவீக்கம் 10வீதமாகவும் பதிவாகியுள்ளன.

இலங்கையின் பணவீக்கம் 70சதவீதமாகவும் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 90வீதத்துக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. தற்பொழுது காணப்படும் இந்த நிலைமை அடுத்த வருடம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு குறிப்பாக நாட்டின் அன்றாட செயற்பாடுகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவி கோரப்பட்டிருந்தது. இந்தக் கடன் உதவியை வழங்க பணியாளர் மட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ள போதும், கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததுமே சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் கடன்மறுசீரமைப்புக்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவுடன் முதற்கட்டமான பேச்சுக்கள் இடம்பெற்றுள்ள அதேநேரம், சீனாவுடனான கடன்மறுசீரமைப்புக் குறித்த பேச்சுக்களில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஜப்பான் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புக் குறித்த பொறிமுறையொன்றை உருவாக்கி அதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலேயே உறுதியளிக்கப்பட்டபடி கடன்தொகை இலங்கைக்குக் கிடைக்கும். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், நியூயோர்க் சென்றிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்தக் குழுவில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் உள்ளடங்கியிருந்தார். இந்தச் சந்திப்புக்கள் பலன்மிக்கதாக அமைந்தது என இலங்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 13பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை மறுசீரமைப்புச் செய்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருப்பதுடன், தனிப்பட்ட கடன் வழங்குனர்களும் இதில் மெய்நிகர் முறையில் இணைந்து கொண்டிருந்தனர்.

இது இவ்விதமிருக்க நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பிரச்சினைகளுக்கு நிலைமாறுகால மறுசீரமைப்புக்கள் மற்றும் ஆட்சிமுறையில் முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என உலக வங்கியின் தெற்காசியாவுக்கான பிரதம பொருளியலாளர் ஹான்ஸ் டிமர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவாரியாக ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெற்ற சில தவறுகள் காரணமாகவே இலங்கை இவ்வாறானதொரு நிலைக்குச் சென்றுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ள இவர், இந்த நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு வலுவான மறுசீரமைப்புக்களின் அவசியத்தை மேலும் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் கொண்டுவரும் பொறிமுறைகள் சரியான முறையில் செயற்படுவதையும், துஷ்பிரயோகங்கள் இடம்பெறாமல் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கணிசமாகக் குறைக்கப்பட்ட வரி வருமானங்களை ஈடுசெய்யும் வகையில் தற்பொழுது புதிய வரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வருமான வரிச் சட்டத்திருத்தமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான வரியொன்றை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது போன்ற வரி அறவீடுகள் மக்களின் சுமையை மேலும் அதிகரிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் நாட்டை பாதிப்பிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. இருந்தபோதும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரை மேலும் சுமைகளுக்குள் தள்ளாத இந்த வரி அறவீடுகள் அமைய வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே, உலகம் எதிர்கொள்ளக் கூடிய பொருளதாரப் பின்னடைவுகள் இலங்கையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் நினைவில் கொண்டு அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் இலாபங்களைக் கருத்தில் கொள்ளாது நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் செலவீனங்கள் குறைக்கப்பட்டு நியாயமான மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சம்யுக்தன்

Comments