மனித நேயம் மிக்க மாமனிதர் | தினகரன் வாரமஞ்சரி

மனித நேயம் மிக்க மாமனிதர்

அல்லாஹுதஆலா உலகத்தாருக்கு அருட்கொடையாக நபி (ஸல்) அவர்களை அனுப்பினான். அன்னார் ஆரம்ப காலம் முதலே நேரிய சிந்தனை, ஆழ்ந்த பார்வை, நுண்ணறிவு, சகிப்புத்தன்மை, சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அன்புகாட்டுதல், தவறுகளை மன்னித்தல், தமது சமூகத்தவர்களுடன் நல்ல அணுகுமுறையைக் கையாளுதல் போன்ற நற்பண்புகளைக் கொண்டவர்களாக விளங்கினார்கள்.

அல்லாஹு தஆலா தன் அருள்மறையில், 'நிச்சயமாக, நீங்கள் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.' (அல் குர்ஆன் 68:4) என்று குறிப்பிட்டுள்ளான்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது மதிநுட்பம், நல்ல அணுகுமுறை, முதிர்ச்சியான அறிவு என்பவற்றைக் கொண்டு தவறு, குற்றம் செய்பவர்களை மன்னித்து விடக்கூடியவர்களாகவும் கருணைகாட்டக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அன்னார் தம் ஸஹாபா தோழர்களுக்கு மத்தியில் ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கக் கூடியவர்களாகவும் நேர்வழிகாட்டக் கூடியவர்களாகவும் விளங்கினார்கள்.

அதேநேரம் மற்றொரு அத்தியாயத்தில், 'அல்லாஹ்வுடைய ரஹ்மத்(எனும் கிருபை)யின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்துகொள்கிறீர். (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்தி விடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக, தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவைபற்றி) நீர் முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (3:159) என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் மஸ்ஜிதுன் நபவியில் ஒரு முறை அமர்ந்திருந்த சமயம், அங்கு ஒருவர்  வந்து சிறுநீர் கழிக்கலானார். அதைக் கண்ட ஸஹாபாக்கள் அவரை தடுக்க முற்பட்டனர். இதனை அவதானித்த நபி(ஸல்) அவர்கள், அவர் சிறுநீர் கழித்து முடிக்கும் வரையும் அமைதியாக இருக்கும் படியும், அதன் பின்னர் அந்நபரை அழைத்து இனிமேல் இவ்வாறு செய்யாதே என்று உபதேசம் செய்ததோடு, ஸஹாபாக்களிடம் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி விடும்படியும் கூறினார்கள்.(ஆதாரம்:புஹாரி, முஸ்லிம்)

மற்றுமோர் அறிவிப்பில் அனஸ் (ரழி) அவர்கள், அந்த நபரை தன்னருகே அழைத்து 'மஸ்ஜித்களை சிறுநீர் கழிப்பதற்கோ அல்லது அழுக்கு செய்வதற்கோ பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. உண்மையில் அவை அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும் அல்குர்ஆன் ஓதுதல் போன்ற ஏனைய வணக்கங்களை மேற்கொள்வதற்காகவும் நிர்மாணிக்கப்பட்டதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். நபிகளாரின் இந்த அணுகுமுறையை கண்ட அம்மனிதர் நற்பண்பு மிக்க மனிதராக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அண்ணலாரின் மேலங்கியை தோள்பட்டையில் பதியும் அளவுக்கு இழுத்துக்கொண்டு, உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்கு தந்து உதவிடுவீராக... என்று கேட்டார். அவரை நோக்கி திரும்பிப் பார்த்து புன்முருவல் பூத்துவிட்டு அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புஹாரி)

இந்த சம்பவங்கள் ஆசிரியர்கள், முகாமையாளர்கள், பணிப்பாளர்கள், பாதுகாவலர்கள், பிரசாரம் செய்பவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் என அனைவரும் தங்களது பொறுப்பை நிறைவேற்றும் போது கையாள வேண்டிய நுட்பங்களையும்  அணுகுமுறைகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மனித நேயம் நிறைந்த நற்பண்புகள் நபி(ஸல்) அவர்கள் மீது மக்களுக்கு விருப்பத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்பண்புகள் அன்னாரை முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்கள் உள்ளிட்ட அனைவர் மத்தியிலும் உள்ளங்கவர் தலைவராக இடம்பிடிக்கச் செய்தது.

இந்தப் பின்புலத்தில் தான் உலகத்தில் வாழ்ந்து மறைந்த 100அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து 'த ஹன்ட்ரட்' என்ற ஆங்கில நூலை எழுதியுள்ள அறிஞர், நபி (ஸல்) அவர்களைத் தம் நூலில் முதலாவதாகக் கொண்டு வந்துள்ளார். அதற்குரிய காரணத்தை கூறுகையில், நபியவர்கள் ஈருலக வாழ்க்கையிலும் முன்னோடியாக திகழ்ந்தார்கள் என்று அந்த நூலாசிரியர் விபரித்துள்ளார்

எனவே நபியவர்களின் இந்த அணுகு முறையை நாம் ஒவ்வொருவரும் எமது எல்லா நடவடிக்கைகளிலும் பின்பற்றுவோமேயானால் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் ஏனையவர்கள் நல்லெண்ணம் கொள்வார்கள். இந்நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப இது சிறந்த காரணியாகவும் அமையும்.

அஷ் ஷெய்க்
எ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஸிபி)

Comments