பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்

- அரசின் உயர்மட்டத்தினருக்கு அறிவித்துவிட்டேன்
- கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ MP தெரிவிப்பு 

கொழும்பு, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாமென கொழும்பு மாநகர மக்களிடம் மனோ கணேசன் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் பொறுப்பிலுள்ள சகலருக்கும் அறிவிப்பதாக தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.   பொலிஸாருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு அரச நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டுத் தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகுமென எமக்குத் தெரியும். பொலிஸ் சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும்.  

எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்களானால் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரணை செய்யுங்கள். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர கால நிலைமையல்ல. போர் காலத்திலும் நான் இங்கே தான் இருந்துள்ளேன். அந்த காலத்திலேயே இதை பொறுத்துக்கொள்ளாதவன் நான். இன்று இந்த சமாதான காலத்தில் இந்த பொலிஸ் படிவங்களை வீடு வீடாக கொண்டு சென்று பதிவு செய்வதா? உடன் நிறுத்துங்கள்!” என சம்பந்தப்பட்ட அரசியல், மற்றும் நிர்வாக தரப்பினரிடம் நான் கூறியுள்ளேன் என்றும் மனோ எம்.பி தெரிவித்துள்ளார். 

Comments